கவிதைக்காரர்கள் வீதி



அடையாளம் தேடும் முகங்கள்

இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன் என்னை
நேற்று இரவா அதற்கு முன் தினமா நினைவில் இல்லை
ஆனால் இதற்கு முன் சிலமுறை பார்த்திருக்கிறேன்

நீண்டு வளைந்த சாலையொன்றில்
தொலைந்து போய் மீண்டு வந்த
சில நிமிடங்களில் பார்த்தேன் என்னை
பெருத்த தனிமையும் கனத்த மௌனமும்
ஒன்று சேர்ந்த ஏதோ ஒரு புள்ளியில்

பார்த்ததாய் நினைவு
என் அறையில் என்னைத் தனியே விட்டு விட்டு
நான் மட்டும் சென்று விட்ட பொழுதுகளில்
பல முறை பார்த்திருக்கிறேன்
தனியே தவித்துக் கொண்டிருந்த என்னை

இன்னும் சில முறை பார்த்திருக்கிறேன்
வேறு சிலரின் பிம்பங்களில்...
கூரிய வெளிச்சத்தில் சிறிதும் பெரிதுமாய்
பறந்து கொண்டிருந்த தூசுகளினூடே
பலமுறை பறந்து கொண்டு இருந்திருக்கிறேன்

என் வீட்டின் உள்ளே வர
அனுமதி கேட்ட ஒரு பறவையிடம்
அதனோடு சேர்ந்து நானும்
பறந்து போய் விட அனுமதி கேட்டேன்
குறுகிய சாலை வளைவு ஒன்றில்
அமர்ந்து கொள்ள ஆசை எனக்கு

அதற்காக என்னைச் சுற்றி
வீடு கட்டிக் கொள்ள வேண்டி இருந்தது
வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த உலகத்தை

விசித்திரமாய்ப் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் நான்
என்னை இந்த உலகம் பார்க்கவே இல்லை
நீண்டு பெருத்திருந்த பாறை ஒன்றில் அமர்ந்து

நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்து
கடைசியில் கண்டுபிடித்தே விட்டேன்
கடலுக்கும் வானத்துக்கும் நடுவில்
இடைவெளியே இல்லை
மழை நிற்கும் வரையில் காத்திருக்கட்டுமா
இல்லை இப்போதே வீட்டிற்குப் போய் விடட்டுமா?

நான் மீனாய் இருந்ததால்
தூண்டிலிலிருந்து தப்பித்து விட்டேன்
புழுவாய் இருந்திருந்தால் மாட்டியிருப்பேன்
என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறேன் நான்
கைக்கு எட்டாத ஒரு இடைவெளியை விட்டபடியே!                              

கிருத்திகா தாஸ்