‘‘இன்றைய விஞ்ஞானத்துக்கும் மேலான ஞானம் கொண்டு நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்கிற என் கருத்துக்கு வலிமை சேர்த்தார் ஒரு நண்பர். இவரும் என்னைப் போல எதையும் பிளந்து பார்ப்பவர்... ‘ஏன், எதற்கு, எப்படி?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்பவர்.இப்படிக் கேள்விகள் கேட்டதால்தான் அனேக ரகசியங்கள் வெட்ட வெளிச்சமாகின.
இந்தக் கேள்விகளை அவ்வளவு சுலபத்தில் எல்லோராலும் கேட்டுவிட முடியாது; அதே போல இந்த வகையில் கேள்விகள் கேட்டவர்கள் அவ்வளவு பேரும் புத்திசாலிகளும் கிடையாது. உதாரணமாக, ‘நம்முடைய இதிகாசங்கள் எவை’ என்று யாரிடம் கேட்டாலும் ‘ராமாயணம், மகாபாரதம்’ என்று வேகமாய்க் கூறிவிடுவார்கள்.
‘இவை நமக்கு எதைச் சொல்ல வருகின்றன’ என்று கேட்டால், ‘மனித வாழ்வு எப்படிப்பட்டது... அந்த வாழ்வை நாம் எப்படி வாழ வேண்டும் என்று இவை இரண்டும் சொல்கின்றன’ என விளக்கமளிப்பார்கள். ஒருபடி மேலே போய், ராமாயணம் பெண்ணாசை கூடாது என்பதையும், மகாபாரதம் மண்ணாசை கூடாது என்பதையும் வலியுறுத்துவதாகச் சொல்வார்கள். ஒரு கோணத்தில் இது மறுக்க முடியாத உண்மையும் கூட!
இரண்டு இதிகாசங்களுமே பல்லாயிரம் காலமாக அழியாது வாழ்ந்தும் வருகின்றன. இவற்றைக் கொண்டே பலரும் வாழ்ந்து வருகின்றனர். கோடானு கோடி மானிடர்களை இந்த இரு இதிகாசங்களும் பார்த்து விட்டன; பார்க்கவும் போகின்றன. இவை வாழ்வியல் நடைமுறையைச் சொல்வதாகவும் தெய்வீகமாகவுமே பலரும் கருதுகின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் இவற்றைக் கற்பனை என்று ஒதுக்கி விட்டனர்.
ஆனால், இத்தனை ஆயிரம் வருடங்களில் இத்தனை கோடி பேர்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே இந்த இரு இதிகாசங்களையும் மிக மாறுபட்ட கோணத்தில் பார்த்து வியந்தனர். அந்த சிலரில் ஒருவர் என் நண்பர். அவர் ராமாயணம் பற்றி என்னிடம் சொன்ன கருத்து வியக்க வைத்தது. ‘உண்மையில் ராமாயணம் என்பது வானில் வலம் வரும் சூரியனுக்கானது. அந்த சூரியனின் நகர்வை அளப்பது... அது ஒரு வானவியல் சாஸ்திர நூல்’ என்றார் அந்த நண்பர். இதைக் கேட்கும்போதே ஆச்சரியமாக அதிர்ச்சியாக எல்லாமுமாக இருக்கிறதல்லவா..?’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
வர்ஷன் போனில் இறுக்கமாக ‘உம்... உம்...’ என்று மட்டுமே சொன்ன பதில், மறுபக்கம் பேசிய நபருக்கு எரிச்சலை மூட்டிவிட்டது.‘‘என்னப்பா... வாயைத் திறந்து பேசமாட்டியா நீ?’’ - என்று கோபமாகக் கேட்டான்.‘‘இது அதுக்கான நேரமில்ல சார்... இங்க இப்ப ரொம்ப டென்ஷனான சூழ்நிலை நிலவிக்கிட்டிருக்கு...’’‘‘என்ன டென்ஷன்... அந்தக் கெழட்டு ஆராய்ச்சியாளன் ஏதாவது அலம்பல் பண்றானா?’’
‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இங்க சிக்கலே வேற...’’
‘‘என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’
‘‘அந்த வள்ளுவர் சாகப்போறாரு...’’
‘‘என்ன சொன்னே... வள்ளுவன் சாகப்போறானா?’’
‘‘ஆமாம்... ஏன் இது உங்களுக்குத் தெரியாதா?’’
‘‘தெரியாது... ஆமாம் அவன் சாகப்போறான்னு உனக்கு எப்படித் தெரியும்?’’
‘‘அந்த வள்ளுவர்தான் சொன்னார். அதுவும் துல்லியமா இத்தனை மணி, இத்தனை செகண்டுல பிரியும்னு சொல்லிக்கிட்டிருக்கார்...’’‘‘புரிஞ்சு போச்சு... காலப்பலகணி அவன் மரணத்தைக் கணக்குப் போட்டு சொல்லிடுச்சு. அதான் ஆராய்ச்சியாளன் கிட்ட பெட்டியைத் தூக்கிக் கொடுத்துருக்கானா?’’‘‘ஆமாம். அதுல என்ன இருக்குன்னும் பார்த்துட்டேன். நாலஞ்சு ஏட்டுக் கட்டுங்க, சோழி, காம்பஸ்னு சில்லரை விஷயங்கள்தான் எல்லாம்...’’
‘‘உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அந்த காம்பஸ் சோழர் காலத்தது..! சோழிகள் அதுக்கும் முந்தையது. அந்த சோழியை வச்சுத்தான் கடல்கோள் வரப்போறதை மணிமேகலை தெரிஞ்சிக்கிட்டா...’’‘‘மணிமேகலையா.... யார் அது?’’‘‘மணிமேகலையை யார்னு கேக்கறியே... என்ன பண்றது! நீ இந்தக் காலத்து ஸ்டூடன்ட்... பள்ளிக்கூடத்துல இங்கிலீஷ் மீடியத்துல படிச்சு, தாய்மொழி தொடர்பே இல்லாம வளர்ந்துட்டீங்க... இப்படித்தான் கேப்பீங்க!’’
‘‘ஹலோ... சந்து கிடைச்சா உடனே சிந்து பாடக் கூடாது. உங்க தமிழ் படிச்சா நல்ல வேலை கிடைக்கும்னா படிச்சிட்டுப் போறோம். எங்க கிடைக்குது? நீங்க மணிமேகலை யார்னு முதல்ல சொல்லுங்க...’’‘‘உனக்கு கண்ணகியையாவது தெரியுமா?’’‘‘மெரினா பீச்ல சிலை வெச்சிருக்காங்களே..!’’‘‘அப்பாடா... இதாவது தெரிஞ்சிருக்கே! அந்த சிலைக்குரிய கண்ணகியோட புருஷனான கோவலனோட மகள்தான் மணிமேகலை!’’
‘‘ரொம்ப ஓட்டாதே... நானும் படிச்சிருக்கேன். கோவலனோட சின்ன வீடான மாதவியோட மகள்தானே?’’‘‘அவளேதான்... அவகிட்ட தான் அமுதசுரபிங்கற அட்சய பாத்திரமும் இருந்தது!’’
‘‘சரி, இப்ப அவளுக்கென்ன?’’‘‘அவகிட்டயும் இந்த சோழிகள் இருந்துருக்குப்பா. அவ ஸ்பரிசம் அந்த சோழில பட்டுருக்கு. அப்படின்னா எவ்வளவு ஏன்ஷியன்ட்னு யோசி!’’
‘‘இதை எல்லாம் உங்களுக்கு யார் சொன்னது?’’
‘‘அதை எல்லாம் நீ கேட்காதே. அந்தப் பெட்டியை எப்படியாவது எங்ககிட்ட சேர்த்துடு. உன்கிட்ட நாங்க பேசினபடி பணத்தைக் கொடுத்துடுவோம்..!’’‘‘நான் உங்கள ஒண்ணு கேட்கலாமா?’’‘‘எல்லா கேள்வியையும்தான் கேட்டுட்டியே... இன்னும் என்ன?’’‘‘இல்ல... இந்த தகரப் பெட்டில இருக்கற விஷயம் பழமையான ரிச்சுவல்னு இருந்தாலும், ஏதோ சில ஆயிரம் மதிக்கலாம். நீங்களோ இதுக்காக கோடிக் கணக்குல செலவு செய்யத் தயாரா இருக்கீங்க... நீங்க இதை நம்பறதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல..!’’
‘‘நீ ஜீரணிக்க முடியலன்னா அது உன்னோட பிரச்னை. அநாவசியமா பேசாம காரியத்தை கச்சிதமா முடி!’’‘‘அதை நீங்க நினைக்கற மாதிரி அவ்வளவு சீக்கிரத்துல முடிக்க முடியாது. அந்த வள்ளுவன் வேற சாகப் போறேன்னு சொல்லிக்கிட்டிருக்கான். அதை கணபதி சுப்ரமணியனும் நம்பறார். அதேவேளை, அவரை சாக விடாம காப்பாத்தற முயற்சியிலயும் இருக்கோம். மொத்தத்துல நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு மேலே நடக்கப் போறத வச்சுத்தான் பெட்டியை எப்படி அடிக்கறதுங்கற முடிவுக்கு நான் வர முடியும்!’’
‘‘எப்ப நீ வள்ளுவன் செத்துடுவான்னு அவனே நம்பறதா சொன்னியோ... அப்பவே எங்க முடிவும் அதுதான்! அவன் செத்த நிலையில எல்லார் கவனமும் அவன் மேல இருக்கும்போது எப்படியாவது நீ அடிச்சிடு. இல்ல, அப்புறம் முடியாமலே போயிடும். எந்தக் காரணம் கொண்டும் அந்தக் கிழவன் காலப்பலகணியை தேடிப் போகக் கூடாது!’’‘‘ட்ரை பண்றேன்...’’‘‘ட்ரை பண்றே இல்ல... முடிக்கறே! உனக்கு நாங்க தர்றதா சொன்ன 50 லட்சத்தை 60 லட்சம் ரூபாயாக்கூட தரத் தயாரா இருக்கோம். மறந்துடாதே..!’’- போன் பேச்சு ‘மறந்துடாதே’யோடு மடங்கி முடிவுக்கு வந்தது. வர்ஷனும் சிந்தித்தபடியே திரும்பி வந்தான்.
எல்லாமே சினிமாவில் நடப்பது போல் கூட அவனுக்குத் தோன்றிற்று. 50 லட்ச ரூபாயை நொடியில் 60 லட்ச ரூபாயாக்கி தனக்குத் தரத் தயாராக இருப்பவர்களை ஒரு விநாடி எண்ணிப் பார்த்தான். ஜிம்மில் ப்ரியா வர்ஷனைப் பார்த்து விட்டு விலகிய நொடியில் வந்து அவனை வளைக்கத் தொடங்கியவர்கள், ஒரு வழியாக வளைத்தும் விட்டார்கள். செல்போன் மெஸேஜ் பாக்ஸைத் திறந்து பார்த்தபோது, அவன் கணக்கில் 5 லட்ச ரூபாய் டெபாசிட் ஆகியிருப்பது தெரிந்தது.
அப்பாவிடம் பாக்கெட் மணி வாங்கி செலவு செய்துகொண்டு ஒரு வாழ்க்கை வாழ்ந்தாயிற்று. நன்றாக சம்பாதித்து செலவு செய்ய விருப்பம் இருந்தபோதிலும், சம்பாதிக்க வாய்ப்பு இன்னமும் வரவில்லை. வேலைக்குப் போனால் வரும்... ஆனால் ஒரு ஐ.டி நிறுவனத்துக்குள் கம்ப்யூட்டர் முன்னால் மௌஸ் முதுகைப் பிடித்தபடி செயல்பட ஏனோ வர்ஷனுக்கு மனம் வரவில்லை.
அவன் இலக்கெல்லாம் சினிமா மேல்தான் இருந்தது. மனதுக்குள்ளேயே ரீ-ரெக்கார்டிங் பின்புலத்தோடு காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்து சந்தோஷப்படுவான்.அவனுக்கு இயக்குநர் ஷங்கரை மிகப் பிடிக்கும். மேலே உயரே உச்சியிலே என்று அவர் படத்துக்குப் படம் தன்னை வளர்த்துக்கொள்வதோடு வெற்றியை விட்டுவிடாதபடி பிடித்துக்கொண்டிருப்பதை எண்ணி ஆச்சரியப்படுவான். அவனது மானசீக ‘மென்ட்டர்’ அவர்தான்.
நாளை இயக்குநரானால் ‘ஷங்கர்வர்ஷன்’ என்றே தன் பெயர் இடம்பெற வேண்டும் என்று அப்படித்தான் கையெழுத்தும் போட்டு வருகிறான்.இப்போது அறுபது லட்ச ரூபாயாகத் தருவதாக அந்த அநாமதேய மனிதர்கள் சொல்லவும், வர்ஷனுக்குள் ஜிகுஜிகுவென்று ஒரு உள்ளோட்டம்... ‘ஒரு தகரப்பெட்டிக்கு 60 லட்ச ரூபாய் என்பது ஒரு கோணத்தில் மிகப் பைத்தியக்காரத்தனமானதாகத் தெரிந்தபோதிலும் அவனை ஒரு விஷயம் உறுத்தியது. இதற்கு இத்தனை தரத்தயாராக இருப்பவர்கள் இதைக் கொண்டு பல மடங்கு சம்பாதிக்க முடியும் என்றுதானே நம்புகிறார்கள்.
ஒருவேளை காலப்பலகணி ஒரு நிஜமோ? அதனுள் உலகைப் புரட்டிப் போடும் ரகசியங்கள் இருக்கின்றனவோ?அது எப்படி இப்படி ஒன்றை ஒருவரால் உருவாக்க முடியும்? எந்த ஒரு சம்பவமும் அதற்கு முந்தைய சம்பவத்தின் தொடர்ச்சிதானே? அப்படித் தொடர்கின்ற ஒன்று அறுந்துவிடாமல் தொடர்கின்றது என்றால் கூட பரவாயில்லை... அந்தத் தொடர்ச்சியை கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால், எல்லா சம்பவங்களுமே அதற்கென்று ஒரு நீளத்தோடு முடிந்து போகின்றவைதானே?
நான் ஒரு சினிமா பார்க்கச் செல்கிறேன் என்றால் ஒரு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் அந்த நிகழ்வு முடிந்து நான் வீடு திரும்பி விடுகிறேன். அதோடு சினிமா முடிந்து, அடுத்த நிகழ்வு தொடங்குகிறது. அது நான் டி.வி. பார்ப்பதாக இருக்கலாம். அப்படியிருக்க, இந்த நேரத்தில் நான் இதைத்தான் செய்தபடி இருப்பேன் என்றோ... இல்லை இதுதான் நடக்க முடியும் என்றோ எதை வைத்துக் கணிக்க முடியும்?’
- வர்ஷனுக்குள் கேள்விகள் மண்புழுக்கள் கொத்தாக ஒன்றன் மேல் ஒன்று விழுந்து புரள்வது போல புரள ஆரம்பிக்க, தோட்டத்துப் பக்கமே தேங்கி விட்டவனைத் தேடிக்கொண்டு வந்தாள் ப்ரியா.அவள் வரவும் அவன் கலைந்தான்.‘‘என்ன வர்ஷா... ஒரு செத்த தேளை தூக்கிப் போட இவ்வளவு நேரமா.... இங்க நீ யார் கூடவோ பேசிக்கிட்டிருந்த மாதிரி இருந்ததே...’’ என்று ஆரம்பித்தாள்.‘‘அது... அது... ஆமாம்! போன்ல ஒரு ஃப்ரெண்டு ரொம்பவே போரடிச்சுட்டான்!’’
‘‘அவன் போரடிச்சாலும் நீ இடம் தரமாட்டியே!’’
‘‘அஃப்கோர்ஸ், ‘வைடா போனை’ன்னு சொல்லித்தான் கட் பண்ணேன்...’’‘‘அதுக்கே இவ்வளவு நேரமா?’’‘‘என்ன ப்ரியா... எதுக்காக நீ என்னை இவ்வளவு கேள்வி கேட்கறே?’’
‘‘உன்கிட்ட நான் நிறைய தடுமாற்றங்களைப் பாக்கறேன் வர்ஷன். உனக்கு இந்த வள்ளுவர் அசைன்மென்ட் பிடிக்கலேன்னா போயிடு. நானும் தாத்தாவும் சமாளிச்சுக்கறோம்!’’ - ப்ரியா அவன் கண்களைப் பார்த்தபடி பேசினாள்.‘‘ஓ நோ... என்னை டைரக்டராக்கப் போற அசைன்மென்ட் இது ப்ரியா. நீ என்ன ‘போ’ன்னு சாதாரணமா சொல்லிட்டே...’’
‘‘என்ன உளர்றே... இதனால நீ எப்படி டைரக்டராக முடியும்?’’ - புருவம் வில்லாக வளைய ப்ரியா கேட்டாள்.
‘‘அது... அது... அந்த காலப்பலகணி இருக்கற இடம் நமக்குத் தெரிஞ்சுட்டா அதுல என் ஃப்யூச்சரைப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் இல்லியா?’’ - சமாளிப்பாகப் பேசினான் வர்ஷன். அவனை ப்ரியா வெறித்துப் பார்த்தாள்.‘‘சரி... சரி... உள்ள வா! நாம அந்த வள்ளுவரை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியக் கூடாது!’’ என்றாள் அழுத்தமாக.‘‘அப்ப அவரை நாம காப்பாத்த முடியும்னு நம்பறியா ப்ரியா...’’‘‘என்ன வர்ஷன்... எங்க அவர் சாகாமப் போயிடுவாரோன்னு நீ நினைக்கற மாதிரி தெரியுதே?’’
‘‘அய்யோ... நான் எங்க நினைக்கறேன். அவரே நம்பற விஷயம்தானே இது!’’
‘‘அதை பொய்யாக்கணும். நம்ம கண் எதிர்ல ஒரு உயிர் போக அனுமதிக்கக் கூடாது!’’‘‘அப்படி நடந்து நாம ஜெயிச்சிட்டா காலப்பலகணி பொய்யாயிடுமே..!’’‘‘ஆகட்டும்டா... அது பெருசு இல்ல! ஒரு மனிதனோட உயிர்தான் பெருசு. கமான்...’’ - ப்ரியாவிடம் ஒரு தெளிவான அணுகுமுறை தெரிந்தது.வள்ளுவரிடம் தொடர்ந்து பேசும் முடிவில் இருந்தாள் ப்ரியா. கையில் ரிக்கார்டர் இருந்தது. வெப் கேமராவை ஃபோகஸ் செய்து அவருடனான பேச்சை பதிவும் செய்துகொள்ளத் தயாரானாள். ‘‘அவரிடம் எல்லா விஷயங்களையும் பேசுவோம். ஜோதிடம் பார்ப்போம். எல்லா விஷயங்களிலும் புதுப்புதுத் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. எல்லாமே பதிவும் ஆகட்டும்’’ என முடிவு செய்தாள்.
அதே போல பேச்சும் தொடங்கியது. ப்ரியா தன் குடும்பத்தினர் ஜாதகங்களைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். அனந்தகிருஷ்ணன் ஜாதகம் முதலாக கையில் அகப்பட்டது. ‘‘முதல்ல உங்கப்பா ஜாதகம் வந்துருக்கு... பாத்துடுவோமா?’’ என்று விரித்தார். கட்டங்களை அவரது இடுங்கிய கண்களிரண்டும் ஆராய்ந்தபடியே இருந்தன.வர்ஷன் பெட்டி இருந்த இடத்தைப் பார்த்தான். அதைக் காணவில்லை! கொஞ்சம் பகீரென்றது. கணபதி சுப்ரமணியன் எடுத்து பீரோவுக்குள் வைத்துப் பூட்டியிருந்தார்.
வர்ஷனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதை எப்படியாவது தன் வயப்படுத்தி அதற்கு 60 லட்சம் தருவதாகச் சொன்னவர்களிடமே 5 கோடி என்று விலை வைத்து ஒரு போடு போட வேண்டும். பணம் கைக்கு வந்த நொடி அந்த 5 கோடி பட்ஜெட்டுக்குள் அடங்குகிற மாதிரி ஒரு திரைப்படம் தயாரித்து விட வேண்டும் என்று அவன் தன் மனக்குதிரைகளை ஓட விட்டுக் கொண்டிருக்க, வள்ளுவர் முகம் அனந்தகிருஷ்ணன் ஜாதகத்தைப் பார்த்து விக்கித்து நின்றது.‘அடப்பாவி! எனக்கு முன்னால போகப் போறவனா நீ?’ - என்று ஆழ்மனதுக்குள் ஒரு விசாரமான கேள்வியும் தோன்றியது!
தண்ணீர் பட்ட பாடு! இயக்குநர் ஜனநாதன்
‘‘நம் கலாசாரத்தில் மட்டுமே விருந்தினர் வந்ததும் தண்ணீர் தருகிறார்கள். மேல்நாடுகளில் கோக்தான். கென்யாவில் 2000ம் ஆண்டு தண்ணீர் பஞ்சம் வந்த ஒரு பகுதிக்கு இரண்டு லாரி தண்ணீர் அனுப்பினார்கள். அதைப் பெற அங்கிருந்த மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் சண்டை மூண்டது. அதில் சில மனிதர்களும், நிறைய எண்ணிக்கையில் குரங்குகளும் இறந்தன. அது இனி மனிதர்களுக்கு இடையே நடப்பதாக அமைந்துவிடக் கூடாது. நீராதாரத்தை மறந்தால் கேடுதான்!’’
அருணன்
‘‘தண்ணீர் பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணம், தமிழக நதி ஓரங்களில், நீர்பிடிப்புப் பகுதிகளில் பசுமை அழிந்து வருவதுதான். மழை நீரை சேமித்து வைக்கும் பல குளங்களும் கண்மாய்களும் இன்று கட்டிடங்களாகிவிட்டன. மதுரை சொக்கிகுளம் என்கிறோம்... ஆனால், அங்கே இருந்த குளம் இப்போது இல்லை. அதன் மேலிருப்பது அரசு கட்டடங்கள். அரசே இப்படியென்றால் தனியாரை என்ன சொல்ல? இனியேனும் இதற்கென அரசு கடுமையான சட்டங்களை உருவாக்கி அவற்றைக் கறாராக அமல்படுத்த வேண்டும்!’’
- தொடரும்...
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்