மணல் இல்லை... கம்பி இல்லை... செங்கல் இல்லை...



குறைந்த செலவில் குளுகுளு வீடு!

பல லட்ச ரூபாய் செலவுல கான்க்ரீட் வீடுகள் கட்டுறோம். வெயில் காலத்துல அங்க வாழ முடியல. வெப்பத்தைத் தணிக்கணும்னா அதுக்கு தனியா வெதர்கோட் போடணும்னு மேற்கொண்டு காசு கேட்குது வழக்கமான கட்டுமான ரூல்ஸ்.

ஆனா, ரொம்பவும் சொற்ப செலவுல, மூணே நாள் அவகாசத்துல கட்டின இந்த வீடு, எத்தனை குளுகுளுன்னு இருக்கு பாருங்க!’’ - பெருமிதமாகச் சுற்றிக் காண்பிக்கிறார் ரோமெய்ன் ஃபிரான்சிஸ்கோ. கோவாவில் பிறந்து வளர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர். உலகைப் பசுமையாக்கும் முயற்சியை சென்னையில் இருந்து செய்கிறது இவரின் ‘சமர்ப்பன்
ஃபவுண்டேஷன்’ அமைப்பு!

சென்னை புழல் ஏரியைக் கடந்து, பம்மடுகுளம் பஞ்சாயத்துக்குள் வருகிறது சரத்து கண்டிகை எனும் கிராமம். இங்கே தான் சுமார் 2 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது சமர்ப்பன்
ஃபவுண்டேஷன். கட்டிடமோ, விவசாயமோ, கால்நடை வளர்ப்போ... அனைத்திலும் செயற்கையை விடுத்து பசுமையைப் புகுத்துவது எப்படி என டெமோ காட்டுகிறது இந்த
கேம்பஸ்.

‘‘பசுமை முயற்சிகளுக்கு ஒரு குட்டி பரிசோதனைக் கூடம்னு இந்த இடத்தைச் சொல்லலாம். இப்ப நீங்க பார்க்கிற இந்த வீட்டில் செங்கல், ஜல்லி, மணல், கம்பிகள்னு எதுவும் பயன்படுத்தலை. குப்பையில வீசி எறியற பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள்ல வேஸ்ட் மண்ணை நிரப்பி அடுக்கி வச்சி உருவாக்கினது தான் இந்த வீட்டோட பேஸ்மென்ட். பாட்டில்களை சேர்த்து இறுக்கிப் பிடிச்சிக்க கொஞ்சமே கொஞ்சம் சிமென்ட்தான் தேவைப்பட்டது. சுவர்கள் எல்லாம் பைசன் போர்டுன்னு சொல்லப்படுற ஒரு வகை ரெடிமேட் மெட்டீரியல். இது தெர்மக்கோல் கலந்து செய்யப்படுறதால வெப்பம் கொஞ்சமும் உள்ளே வராது. இப்படிப்பட்ட வீடுகளால செங்கல், கம்பி செலவு குறையிறது மட்டுமில்ல... மணல் தேவைக்காக ஆறுகள் கொள்ளையடிக்கப்படுறதும் தடுக்கப்படுது. வெப்பத்துக்கு ஏ.சி போடுறதால வர்ற கரன்ட் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசு எல்லாம் தவிர்க்கப்படுது!’’ என்கிறார் ரோமெய்ன்.

இந்த வீட்டுக்குத் தேவைப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் அனைத்தையும் இந்த ஊர் மக்களே சேகரித்துக் கொடுத்து உதவினார்களாம். ‘‘எங்களைப் பொறுத்தவரைக்கும், மக்களுக்கு பசுமையை ஒரு தண்டனையா கொடுக்க முடியாது. சுற்றுச்சூழலைக் காப்பாத்தறதுக்காக யாரும் எதையும் தியாகம் செய்யவோ, அதிகம் செலவு செய்யவோ, வாழ்க்கையை கஷ்டமாக்கிக்கவோ முன்வர மாட்டாங்க. அவங்க செலவைக் குறைக்கணும். அதே சமயம் அவங்க எதிர்பார்க்கிற வலிமையையும் வசதியையும் தரணும். அப்ப தான் இயற்கைக்கு மாறுவாங்க. அதுக்கான முயற்சிகள்லதான் நாங்க இறங்கியிருக்கோம்.

இரும்புக் கம்பிக்கு பதிலா மீனவர்கள் பயன்படுத்துற வலைகளை வச்சி அதே உறுதியோட கட்டிடங்கள் கட்ட முடியுமான்னு ஒரு பரிசோதனை செய்தோம். அதுவும் வெற்றிகரமா அமைஞ்சுது. வழக்கமான வீடுகள்ல கம்பி கூட கான்க்ரீட்ல மட்டும்தான் வரும். ஆனா, இந்த வலை ஒவ்வொரு செங்கல்லோடவும் ஊடுருவி வந்து மொத்தக் கட்டிடத்தையும் உறுதி யாக்குச்சு. இன்னிக்கு வீடு கட்டுறவங்களுக்கு கம்பி செலவுதான் மெயின் செலவு. அதனாலதான் டி.வி.யில கம்பி கம்பெனிகள் இவ்வளவு விளம்பரப் போட்டி போட்டுக்கறாங்க.

ஆனால், அதே உறுதியை இந்த வலைகள் வெறும் 2 ஆயிரம் ரூபாய் செலவில் கொடுத்துச்சு. இந்தச் சுவர்களும் சரி, ரெடிமேட் தெர்மகோல் சுவர்களும் சரி... எல்லாமே பூமி அதிர்ச்சி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி நிரூபிக்கப்பட்டாச்சு. நில நடுக்கத்தையே இந்த வீடுகள் தாங்கும். எல்லாத்துக்கும் காப்புரிமையும் கிடைச்சிருக்கு!’’ என்கிற ரோமெய்ன், கட்டுமானம் தவிர பிற - பல பசுமை முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.

‘‘கோவாவில் பிறந்தாலும் நான் படிச்சதெல்லாம் தமிழ்நாட்டுலதான். என் கணவர் பேட்ரிக் சான்ஃபிரான்சிஸ்கோவும் நானும் இணைஞ்சு 2006ல ஆரம்பிச்ச அமைப்பு தான் சமர்ப்பன். இது மாதிரியே கோவா, டெல்லி, மேற்கு வங்காளத்துல கிளைகள் இருக்கு. அவர் டிராவல்லயே இருப்பார். பழகின இடம், பழகின மொழிங்கறதால நான் இதைப் பார்த்துக்கறேன்.

இந்தியா முழுக்க ஒரே மாதிரி யான பசுமை முயற்சிகள் பலன் தராது. ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவைன்னு பார்த்துதான் நாங்க செயல்ல இறங்குறோம். சென்னை சுற்றுப்புறங்கள்ல ஒரு காலத்துல காட்டு மரங்கள் அதிகம். தண்ணியே இல்லாம செழிப்பா வளர்ந்து வெப்பத்தைத் தணிச்சுக்கிட்டிருந்தது அந்த மரங்கள்தான். பூவரசு, சவுக்கு, புங்கை, நாகலிங்கம், துங்கை, மஞ்சியம், வெள்ளமருது, மயிற்கொன்றை, சரக்கொன்றைன்னு அந்த மரங்களை எல்லாம் நாம மறந்துட்டோம். இப்ப தேடித் தேடி அதையெல்லாம் கண்டுபிடிச்சு இங்கே கன்றுகளா வளர்க்குறோம். தேவையானவங்களுக்குக் கொடுக்கறோம்.

அதே மாதிரி, இங்கே அடையாறு, பள்ளிக்கரணை, மகாபலிபுரம், பழவேற்காடு, முட்டுக்காடு பகுதிகள்ல மாங்குரோவ்னு சொல்லப்படுற அலையாத்திக் காடுகள் எக்கச்சக்கம் இருந்துச்சு. சுனாமி வந்தா கூட தடுத்து நிறுத்துற ஆற்றல் இதுக்கு இருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதெல்லாம் இப்ப கொஞ்சம் கூட மிச்சமில்லாம அழிக்கப்பட்டாச்சு. இதனால, அந்தப் பகுதிகள்ல கிடைக்கிற இறால், நண்டுகள் கூட தரமில்லாம போயிடுச்சு.

தேடிப் பார்த்ததுல சுமார் 80க்கும் மேலான அலையாத்தி தாவர வகைகள் இருக்கறது தெரிய வந்தது. அதுல சில வகை மரங்களையும் நாங்க வளர்க்குறோம். இது தவிர, அருகிப் போன நாட்டுக் கோழிகள், உணவு வகைகள் சிலதைக் காப்பாத்துற ஆர்கானிக் தோட்டமும் இங்க இருக்கு. நேத்து நம்ம பாட்டி - தாத்தாக்கள் அனுபவிச்ச இயற்கையை நாமதான் வீம்பா தூக்கி எறிஞ்சிட்டோம். நம்ம பிள்ளைகளுக்காவது அது அழியாம போய்ச் சேரணும்.

அதுக்குத்தான் நாங்க உழைக்கிறோம்!’’ என்கிறார் ரோமெய்ன் நம்பிக்கையாக! அதானே... பாட்டன் சொத்து பேரன்களுக்காச்சே! இந்த வீடுகளால் செங்கல், கம்பி செலவு குறைவது மட்டுமில்ல... மணலுக்காக ஆறுகள் கொள்ளையடிக்கப்படாது. குளிர்ச்சியா இருக்கறதால ஏ.சி.யும் தேவையில்ல!

-டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்