வேலை நிச்சயம் வி.ஏ.ஓ. தேர்வு வெற்றிக்கு நிபுணர்கள் தரும் டிப்ஸ்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

சென்ற இதழ் தொடர்ச்சி...

பொது அறிவுக்கு அடுத்து விருப்பப்பாடமாக பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம். தேர்வு எழுதுபவர்கள் இதில் தங்கள் சாய்ஸ் எது என்பதை விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டிருப்பீர்கள். ‘பள்ளியிறுதி வரை தமிழ்வழியில் படித்துவிட்டு, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமல்ல. அசட்டுத் துணிச்சல் வேண்டவே வேண்டாம்’ என்கிறார்கள் போட்டித்தேர்வுகளில் வென்றவர்கள்.

பொதுவாக டி.என்.பி.எஸ்.சியின் அப்ஜெக்டிவ் டைப் (கொடுக்கப்பட்டிருக்கும் 4 விடைகளில் சரியானதைத் தேர்வு செய்தல்) தேர்வுகளில் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ்/ஆங்கிலத்துக்கு சமமான மதிப்பெண்களே தரப்படுகின்றன.

‘‘அதுக்காக கிடைக்கிற நேரத்தையும் அப்படியே சரிபாதியா பிரிக்கணும்னு அவசியம் இல்ல. குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் ஆங்கிலத்தை 30 நிமிடங்கள்ல முடிச்சவங்களும் இருக்காங்க. இப்போ ஃபிரஷ்ஷா பத்தாம் வகுப்பு முடிச்சவங்ககிட்ட இந்தக் கேள்வித்தாள்களைக் கொடுத்தா, எந்தத் தயாரிப்பும் இல்லாமலேயே பாதிக் கேள்விகளுக்கு பதில் தந்திடுவாங்க. அந்த அளவுக்கு சுலபமாவும், பள்ளிப் பாடங்கள் சார்ந்தும்தான் கேள்விகள் இருக்கும்’’ என்கிறார் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் சென்னை சினர்ஜி அகாடமி இயக்குனர் சித்தார்த்.

பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடங்கள் முடிந்ததும் கீழே கொடுத்திருப்பார்களே & எதிர்ச்சொல், பொருள் தருதல், கோடிட்ட இடம் நிரப்புக... அதேபோன்ற கேள்விகள்தான் பொதுத்தமிழ், ஆங்கிலப் பகுதியில் வரும்.

பொதுத்தமிழ் பாடத்திட்டம் இதுதான்...

 வார்த்தைகளைச் சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், பொருத்துதல், அவற்றுக்கு எதிர்ச்சொல் கண்டறிதல், ஒலி வேறுபாடறிந்து பொருள் தருதல் போன்றவற்றில் தலா 5 கேள்விகள்.

 வாக்கியத்தில் பொருந்தாச்சொல் கண்டுபிடித்தலில் 5 கேள்விகள்.

 பிழையான வாக்கியத்தைக் கண்டறிதலில் 5 கேள்விகள்.

 அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் அல்லது தலைவர்களைப் பற்றி 5 கேள்விகள் ஒவ்வொரு தேர்விலும் கட்டாயம் கேட்கப்படுகின்றன. (உதாரணமாக, சர்தார் வல்லபாய் படேலை ‘இரும்பு மனிதர்’ என்பார்களே... இதுபோன்ற எல்லாவற்றையும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்!)

 ஆங்கிலச் சொற்களைத் தந்து அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டு 5 கேள்விகள்.

 ஓரெழுத்து ஒரு மொழி என்று ஒரு பகுதி. அதாவது ஒரே  எழுத்தில் ஒரு வார்த்தை இருக்கும். தமிழில் இப்படி 42 எழுத்துகள் உள்ளன. (உதாரணம்: கோ அரசன், பா பாடல்)  இப்பகுதியில் 5 கேள்விகள்.

 அகரவரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்தக் கேட்டு 5 கேள்விகள். (டிக்ஷனரி வரிசை போல). இதற்கு க், ங், ச்... என தமிழ் எழுத்துகளின் வரிசை பற்றி தெரிந்திருப்பது அவசியம்.
 எதுகை, மோனை, தொடை, இயைபு, வேர்ச்சொல், வினை (தன், பிற, செய், செயப்பாட்டு வினை), உவமை, உருவகம், இலக்கணக்குறிப்பு என தமிழ் இலக்கணத்தின் பல பகுதிகளையும் தொட்டு சில கேள்விகள்.

இப்படி மொத்தம் 20 பிரிவுகளிலிருந்து 100 கேள்விகள் வருகின்றன. மதிப்பெண்கள் 150.

‘‘கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தாலதான் பலபேர் மதிப்பெண் இழக்கிறாங்க. பார்த்ததும் தெரிஞ்ச கேள்விகளா இருந்ததும் அவசர அவசரமா பதில் அளிக்கும்போது கேள்வி நம்பரை மாத்திடுறாங்க. ஒரு கேள்விக்குரிய எண்ணை மாத்திட்டா, அது வரிசையா தப்பு பண்ண வச்சிடும். அதனால ஒவ்வொரு பதிலுக்கும் கேள்வி நம்பரை பார்க்க வேண்டியது அவசியம். மத்திய தேர்வாணையத் தேர்வுகள் போல டி.என்.பி.எஸ்.சில பென்சில் வச்சு விடையளிக்க அனுமதியில்லை. ஒரு தடவை பதில் அளிச்சுட்டா மாத்த முடியாதுங்கிறதை புரிஞ்சுக்கணும். சிலர் தப்பா விடையளிச்சுட்டு திரும்ப பிளேடு வச்சு சுரண்டற வேலையெல்லாம் பண்ணுவாங்க. கம்ப்யூட்டர் மூலமா திருத்தப்படற பேப்பர்ங்கிறதால அந்தமாதிரி பண்ணுனா விடைத்தாள் செல்லாததாக்கப்படலாம். நிதானம் இருந்தால் இந்தக் கவனக்குறைவை தவிர்த்துடலாம்’’ என்கிற சித்தார்த், இவற்றுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பட்டியலிடுகிறார்..

‘‘6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகங்களும், 8 முதல் 10ம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணப் புத்தகங்களையும் அலசிடணும். இதிலிருந்தே 90   95 கேள்விகளுக்குச் சரியான பதில் தரமுடியும். நூற்றுக்கு நூறு வாங்கணும்னு நினைக்கிறவங்க 11 மற்றும் 12ம் வகுப்பு சிறப்புத்தமிழ் புத்தகங்களையும் வாசிக்கணும். பயிற்சிக்காக கைடு வாங்கிக்கலாம். பயிற்சி மையம், நிறையப் புத்தகங்கள்னு காசை வீணாக்க வேண்டியதில்லை!’’

கடைசியாக நடந்த வி.ஏ.ஓ. தேர்வில்கூட பொதுத்தமிழில் ஏராளமானோர் நூற்றுக்கு நூறு எடுத்ததாகச் சொல்கிறார்கள் பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள். பொது அறிவில் 75 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து பொதுத்தமிழ்/ஆங்கிலத்தில் 95 பதில்கள் சரியானதாக இருந்தாலே பாசிட்டிவான ரிசல்ட்டை எதிர்ப்பார்க்கலாம். பொது ஆங்கிலம் பற்றி அடுத்த வாரம்...

ஜெயிச்சவங்க சொல்றாங்க!

‘‘எவ்வளவு நேரம் படிக்கிறோம்ங்கிறது முக்கியமில்லை. எப்படிப் படிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம். படிக்கறதுல ஒரு தரம் இருக்கிற மாதிரி, நம்ம பயிற்சியும் இருக்கணும். முதல்ல, அரசு நடத்தற தேர்வுகள்ல அரசுப் பாடத்திட்டத்துல இருந்துதான் கேள்விகள் இருக்கும்கிற விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டுப் படிக்கணும். ‘கண்ணை மூடிட்டு மார்க் வாங்கலாம்’னு சொல்லப்படுற பகுதி பொதுத்தமிழ். அதனால 100 கேள்விகளையும் சரியாப் பண்ணணும்ங்கிறதுதான் குறிக்கோளா இருக்கணும். அப்படி நினைச்சு எழுதறப்ப 95க்கு மேல சரியா இருக்கும்’’ என்கிறார் 2006ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்து, இப்போது தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டாட்சியராகப் பணியாற்றும் சுப்புலக்ஷ்மி.
தொகுப்பு:  அய்யனார் ராஜன்