வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் காதல் சாக்லெட்டில் காசும் வருது!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்கிற விளம்பரத்துக்கேற்ப, எந்த சந்தர்ப்பத்தையும் எந்த சந்தோஷத்தையும் கொண்டாட சாக்லெட் போதும். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். எந்த சீசனிலும் படுத்துப் போகாத பிசினஸ் சாக்லெட் தயாரிப்பு. குறைந்த உழைப்பில் பெரிய வருமானம் பார்க்க வைக்கிற இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த கவுரி.

‘‘வீட்ல உள்ளவங்களுக்காக செய்யக் கத்துக்கிட்டேன். வீட்ல என்ன விசேஷம்னாலும் விதம் விதமா சாக்லெட் பண்ணி, அக்கம்பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறது வழக்கம். கடைகள்ல கிடைக்காத சுவைல, விதம்விதமா பண்றதைப் பார்த்துட்டு, அவங்கவங்க வீட்டு பர்த்டே பார்ட்டிக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே ரெகுலரா ஆர்டர் வரத் தொடங்கினது... இன்னிக்கு பெரிய பெரிய பார்ட்டி, கல்யாணங்களுக்கெல்லாம் பண்ற அளவுக்கு நான் பிசி’’ என்கிறார் கவுரி.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘சாக்லெட் பார், எசன்ஸ், நட்ஸ், கிரன்ச்சி சாக்லெட்டுக்கான பொருள், நாலஞ்சு வடிவ டிரே... இதுல டிரே எல்லாம் ஒருமுறை வாங்கினா போதும். ஒரு டிரே 20 ரூபாய்க்குக் கிடைக்கும். முதல்ல 5 டிரே வாங்கினா போதும். மத்த பொருள்களை ஆர்டருக்கேத்தபடி அப்பப்ப வாங்கிக்கலாம். மொத்த முதலீடு ரூ.500 இருந்தாலே போதும்.’’

என்னென்ன வெரைட்டி?  என்ன ஸ்பெஷல்?

‘‘கடைகள்ல கிடைக்கிற சாக்லெட்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி ருசிலதான் இருக்கும். வீட்ல பண்றப்ப நம்ம
கற்பனைக்கேத்தபடி, சுவைக்கேத்தபடி பண்ணலாம். புதினா போட்டது, பிஸ்கட் சாக்லெட், பார் சாக்லெட், மில்க் சாக்லெட், நீரிழிவுக்காரங்களுக்கான சாக்லெட், கிரன்ச்சி சாக்லெட்... இப்படி நிறைய. குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி கார்ட்டூன் ஷேப், பூ வடிவம், வேலன்டைன்ஸ் டேவுக்கான இதய வடிவம்னு என்ன வேணா பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘1 கிலோ செய்ய 3 மணி நேரம் போதும். அதை ஒரு மாசம் வரை வச்சிருந்து உபயோகிக்கலாம். பிறந்த நாள் பார்ட்டி, கல்யாணங்களுக்கு ஆர்டர் எடுக்கலாம். ஸ்கூல்லயும் ஆர்டர் பிடிக்கலாம். சுவையும், ஆரோக்கியமும் எவ்வளவு முக்கியமோ... அதைவிட பேக்கிங் முக்கியம். பார்த்த உடனேயே வாங்கத் தூண்டற அளவுக்கு அது அழகா இருக்க வேண்டியது அவசியம். 200 ரூபாய் செலவழிச்சுப் பண்ற சாக்லெட்டை குறைஞ்சது 400 ரூபாய்லேர்ந்து, அதிகபட்சமா 700 ரூபாய் வரைக்கும்கூட விற்கலாம்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சி... மெட்டீரியல், பிசினஸ் நுணுக்கங்கள், பொருள்கள் வாங்க வேண்டிய இடம்னு சகல தகவல்களோடயும் சேர்த்து, கட்டணம் 500 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்