என் மனதில் கவுண்டமணி
வசனம்... ‘ஓஓ....
என் பள்ளித் தோழன் சுரேஷ் அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வந்திருந்தான். ‘‘நாம படிச்ச ஸ்கூலைப் பாக்கணும் போல இருக்குடா’’ என்றான். கிளம்பினேன். ‘‘எங்கேடா, பொண்டாட்டி, பசங்க?’’
‘‘நோ, மேன். அவுங்க வரவே மாட்டேன்னுட்டாங்க. ஒரே குப்பை, சாக்கடை. இந்த ஊர் திருந்தாதா?’’ என்றான் அமெரிக்க ஆங்கிலத்தில்!‘ஏண்டா, நீ புரசைவாக்கம்... பொண்டாட்டி நாகர்கோவில்... அப்போ குப்பையை ரோட்லதானே கொட்டுனீங்க? இப்போ புடிச்ச அமெரிக்க சிகரெட்டை ரோட்லதானே போட்ட?’ - மனதோடு நிறுத்தினேன் வார்த்தைகளை.
ஆனாலும் அவன் அலட்டல் தாங்கவில்லை. ‘‘என் ரூம், என் பொண்ணு ரூம்ல இருந்து ரொம்ப தூரம். அவளைப் பாக்கறதே இல்லை...’’ ‘‘சரவண பவன்ல போய் ஒரு சாதாரண மனுஷன் மாதிரி இட்லி சாப்பிட ஆசை’’ என் மனதில் கவுண்டமணி வசனம்...
‘ஓஓ.... அமெரிக்கா போனா நீ என்னா ஆம்ஸ்ட்ராங்கா? பரதேசி நாயே. நீயும் சாதாரண ஆளுதானடா!’வழக்கத்திற்கு மாறாக நான் பொறுமை காத்தேன். என் கதையை அவன் கேட்கவே இல்லை. அவனே முடிவு செய்துவிட்டான், நான் உருப்பட்டிருக்க மாட்டேன் என்று.
ஸ்கூலில் அதே வாத்தியார்கள் இருந்தார்கள். இவன் அங்கு மரியாதைக்கோ, நன்றிக்கோ வரவில்லை. ‘பார்த்தீர்களா, நான் எங்கே போய்விட்டேன்!’ என்று காட்டிக்கொள்ள வந்திருக்கிறான். இந்தியர்களுக்குத் தெரியாத, தெரியத் தேவையில்லாத அமெரிக்க ஹோட்டல், ஹைவே பெயரை எல்லாம் வேண்டுமென்றே இழுத்து, ‘இது தெரியாதா’ என்பதுபோல பேசினான்!
வெளியே வந்தபோது அங்கே பெருக்கிக்கொண்டிருந்த தலை நரைத்த ஆயா, நிறுத்தி எங்களைப் பார்த்தாள். முகம் மலர்ந்தது. ‘‘தம்பி, செந்திலு, சுரேஷு... எப்படிக்கிறீங்கோ. நல்லா வளந்துட்டீங்களே!’’
அட, மஞ்சும்மா! ஸ்கூலின் உயிர்நாடி அவர்தான். கல்வித்தரம் எப்படி இருந்தாலும் பள்ளியின் சுத்தத்துக்கு அவர் பொறுப்பு. அவர் லீவ் போட்டு நாங்கள் பார்த்ததில்லை. படிக்கும் காலத்தில் எங்கள் மீது தனி அன்பு. ஆனால் ‘சுரேஷ்’ என்று மஞ்சும்மா பேர் சொல்லி அழைத்தது இவனுக்குப் பிடிக்கவில்லை. ‘‘‘என்னா சுரேஷு... பேசாம நிக்கிறே? எங்க இருக்கே? இன்னா பண்றே?’’ - அவன் என்னைப் பார்த்தான். ‘இவளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வெக்கறது?’ என்பதுபோல்! ‘‘சொல்லேண்டா!’’ என்றேன்.
‘‘அமெரிக்கால நியு ஜெர்ஸினு ஒரு ஊர்ல பெர்ய ஹாஸ்பிடல்ல அட்மின் மேனஜரா இர்க்கேன். அதெல்லாம் உன்கு புர்யாது’’ என்று தமிழிலும் அக்சென்ட் போட்டு, ஜாக்சன் துரை மாதிரி பேசினான்.மஞ்சும்மா, ‘‘ஐய, ஏன் தெரியாது? என் பெரிய பையன் நியுயார்க்கு ஜென்ரல் ஆஸ்பித்திரில ஸர்ஜனோ, பர்ஜனோ, என்னாது அது? என் வாய்லயே நுழையாது... அதா இருக்கான். அது பக்கத்துலதானே உங்க ஊரு?’’ - சாதாரணமாகச் சொன்னாள். அவள் பதிலில் அம்மாவுக்கான பெருமை கொஞ்சம் இருந்தது. திமிர் சுத்தமாக இல்லை.றீ
ஸ்ரீனிவாசன்