கபிலன் வைரமுத்து
மிகுந்த நம்பிக்கையூட்டும் கவிஞராக உருவாகி வருகிறார் கபிலன் வைரமுத்து. அவருக்கு புத்துணர்ச்சியாய் தொடங்குகிறது புது வருடம். சமீபத்தில், ‘மெய்நிகரி’ நாவல் அவரை கவனப்படுத்தி இருக்கிறது. அப்பாவின் பெயர் சொல்லும் அனைத்து அடையாளங்களும் நிரம்பி நிற்கிற மிக இளைஞன்.
நாவல், கவிதை, சாகித்ய அகாதமியில் கவிதை வாசிப்பு என களை கட்டுகிறார். சிலுசிலுத்து வீசும் காற்றில் தலை கோதிச் சிரிக்கிறார். ‘‘அம்மா ஒரு காபி தருகிறீர்களா? தயாரானதும் நானே வாங்கிக்கொள்கிறேன்’’ - அம்மா பொன்மணிக்கு மென்குரலில் சொல்லிவிட்டு, தொடர்ந்தது உரையாடல்...
‘‘பாடலாசிரியராவதுதான் லட்சியமா இருந்ததா?’’
‘‘ ‘குங்கும’த்தில்தான் வந்தது முதல் கவிதை. பதினெட்டு வயதில் முதல் புத்தகம் வந்தது. என் எழுத்தை சினிமாவுக்கு கொண்டு போக விருப்பம் இருக்கிறது. என் கவிதைகளை பாடலாக்க முடியுமா எனப் பார்க்கிறேன். இப்போது சினிமா ஒன்றுதான் படைப்பை வெகுஜனத்திற்கு கொண்டு போகிற மீடியா. இது யதார்த்தம். எந்த ஒரு கலைஞனும் சினிமாவுக்குப் போனால்தான் முழுமை யடைகிறான் என்ற மூடநம்பிக்கையும் இருக்கிறது.
சினிமாவுக்கு பாட்டெழுதினால்தான் இங்கே கவிஞன். நடனம் தெரிந்தவர், சினிமாவில் நடனம் பயிற்றுவித்தால் அவர்தான் சிறந்த நடன ஆசிரியர். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. சினிமாவில் கவிதைக்கான இடம் குறைவு. ஒரு சினிமா பாட்டு உருவாவதற்கான அனைத்து படிநிலைகளையும் கடந்துதான் நான் வந்திருக்கிறேன்; உணர்வுத்தளத்தில் இயங்குகிறேன்...’’
‘‘நாவல் எழுத எப்படி ஆர்வம்..?’’
‘‘நான் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கப் போனதின் அனுபவத்தை ‘பயணக் கட்டுரை யாக எழுதிப் பாருங்களேன்’ என்றார் கு.ஞான சம்பந்தம். அதை, ‘பூமராங் பூமி’ என நாவலாய் வடிக்க முடிந்தது. ஒரு காதலன் இறந்த காதலுக்கு எழுதிய 41 இமெயில்கள்தான் அவை. குழந்தை பிறந்த பிறகு சில பெண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை வைத்து, ‘உயிர்ச்சொல்’ எழுதினேன். இப்போது, ‘மெய்நிகரி’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதின் பின்புலத்தை, நான் பெற்ற அனுபவத்தை வைத்தே எழுதினேன். பெரும் வரவேற்பு பெற்று எனக்கு அங்கீகாரம் தந்தது. ரஜினிகாந்த் படித்துவிட்டு தொலைபேசியில் ரொம்பவும் பாராட்டினார்.’’
‘‘சினிமா என்றால், எல்லா வகைப் பாடல்களையும் எழுத வேண்டுமே..?’’
‘‘ஒவ்வொ ருவருக்கும் ஒரு மனசு இருக்கு. அதற்குள் ளேதான் இயங்கிக் கொண்டிருக் கிறோம். எல்லாப் படங் களிலும், எல்லா ஆடியோ மேடை களிலும் நான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதினால் நான் என்னைத் தொலைத்து விடுவேன். என் பலம் எனக்குத் தெரியும். சினிமாவில் கவிதைக்குரிய இடம் எதுவோ, அதுவே எனக்குரிய இடம். கபிலனிடம் இருந்து எது கிடைத்தாலும் அருமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் போதுமானது’’
‘‘அப்பா உங்களையும் கார்க்கியையும் கையாளுகிற விதம் எப்படியிருக்கும்?’’
‘‘அண்ணன், அப்பாகிட்ட பெரும்பாலும் நண்பன் மாதிரியே பழகுவார். நான் ஒரு பூனைக்குட்டி, நாய்க்குட்டி மாதிரி அப்பாகிட்ட பயந்தேதான் பழகுவேன். கபிலன் வைரமுத்து என எழுதும்போது இரு வார்த்தைக்கும் இருக்கிற தூரம், எனக்கு அப்பாவுக்கும் இடையே இருந்துகொண்டே இருக்கும். சின்ன வயதில், அப்பா எழுதும்போது ‘அவரைத் தொந்தரவு செய்யாதே’ என அம்மா சொல்லிச் சொல்லி அந்த இடைவெளி விழுந்துவிட்டதோ என்னவோ! அது ஒரு மாயையாய்க் கூட இருக்கலாம். நான் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன்...’’
‘‘அப்பாவை எப்படி ரசிப்பீர்கள்?’’
‘‘1985க்கு பிறகு எழுத வருகிறவர்களுக்கு அப்பாவின் பாதிப்பு மறைமுகமாகவாவது இருக்கும். அப்படி வெளியில் இருக்கிறவர்களுக்கே பாதிப்பு என்றால், மகன்களுக்கு இல்லாமல் போகுமா? மேடைப் பேச்சாளர், நாவலாசிரியர், கவிஞர், சினிமா பாடலாசிரியர் என பல்வேறு முகங்கள் அப்பாவிற்கு உண்டு. அவற்றில் எனக்குப் பிடித்த முகம், அவரது மேடைப்பேச்சுதான். சமகாலத்தில் எந்தவொரு மேடையையும், எத்தனை கூட்டமாக இருந்தாலும், அதை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியவர்களாக நான் அப்பாவையும், வைகோவையும் பார்க்கிறேன்.
எனக்கு அப்பாவின் பேச்சில் இருக்கிற கவிதைகள், நம்பிக்கை வாசகங்கள் உற்சாகமளிக்கும். சமீபத்தில் நான் ‘அனேகன்’ படத்துக்காக ‘சாலைகள் மாறும், பாதங்கள் மாறும், வழித்துணை நிலவு மாறாதே... நதிக்கரை மாறும், கடற்கரை மாறும், காதலின் வருகை மாறாதே...’ன்னு எழுதியிருந்தேன். அதைக் கேட்டுட்டு சந்தோஷ மாகிட்டார்!’’
‘‘உங்களுக்குப் பிடித்த பாடலாசிரியர்..?’’
‘‘யுகபாரதியை ரசிக்கிறேன். ‘குக்கூ’ படத்தில், ‘மனசுல சூறைக் காத்தே...’ எனப் பார்வை யற்றவர்களின் பரிதவிப்பை எழுதிய விதம், ஆழம். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. ‘குக்கூ’ பாடலைக் கேட்டுவிட்டு, அவரிடம் என் பெயரைக்கூட சொல்லாமல் பேசிவிட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘நீங்க யாரு?’ என்ற பின்தான் சொன்னேன். ‘ரொம்ப சந்தோஷம்’ என்றார். இதே மாதிரி, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ கேட்டுவிட்டு, ‘உங்களுக்கு இந்தப் பாடலுக்காக பெரிய அங்கீகாரம் காத்திருக்கிறது’ என்றேன். எந்த முகூர்த்தத்தில் சொன்னேன் எனத் தெரியவில்லை... பலித்ததே!’’
‘‘மதன் கார்க்கியை எப்படி எடை போடுவீர்கள்?’’
‘‘அவர் எங்கள் குடும்பத்தோட சர்ப்ரைஸ். ரூல்டு நோட்டில் அவர் நிறைய கதைகள் எழுதிக்கொண்டு திரிந்த காலங்கள் நினைவில் மிச்சமிருக்கிறது. அவருக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. ‘எந்திரன்’ சாதாரண வாய்ப்பு அல்ல. ரஜினி, சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், ஷங்கர் என பெரும் ஆளுமைகள் ஒன்றுசேர்ந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வந்தது பெரிய விஷயம்.
அது கிடைத்திருக்கா விட்டால், இப்போ அவருக்கு இருக்கும் உயரத்திற்கு வர இன்னும் பத்து வருஷம் ஆகியிருக்கும். ‘கோ’வில் கிடைத்த ‘என்னமோ ஏதோ’ பாடல் பெரும் வெற்றி. ‘ஐ’யின் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்...’ மனசிற்கு சுகந்தம். அவர் ஐ.டி தலைமுறையின் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலிக்கிறார்!’’‘‘உங்கள் குடும்பத்தைப் பற்றி...’’
‘‘மனைவி ரம்யா கபிலன், மகப்பேறு மருத்துவர். எங்கள் குடும்பத்தில் சினிமா சாராத ஒரே பிரதிநிதி. குழந்தையின் பெயர் மெட்டூரி. வைகை அணை கட்டியபோது எங்கள் ஆதி கிராமமான மெட்டூர் அதில் மூழ்கிவிட்டது. எனக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, பெயருக்கான தேடுதல் வேட்டையில், என் கை தானாக ‘மெட்டூரி’ என எழுதியது. ‘உனக்கு எப்படிடா இந்தப் பெயர் தோன்றியது? இது எனக்கல்லவா தோன்றியிருக்க வேண்டும்’ என ஆச்சரியப்பட்டார் அப்பா.
இப்போது குழந்தையோடு ஊருக்குப் போனால், அவளைப் பார்க்கவே பெரும் கூட்டம் கூடிவிடுகிறது. பெரியவர்கள் தங்கள் பழைய நினைவுகளை அவளின் பெயரில் மீட்டெடுக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அவளுக்கென ‘மெட்டூரி ரசிகர் மன்றம்’ திறந்து விடுவார்கள் போல!’’1985க்கு பிறகு எழுத வருகிறவர்களுக்கு அப்பாவின் பாதிப்பு மறைமுகமாகவாவது இருக்கும். அப்படி வெளியில் இருக்கிறவர்களுக்கே பாதிப்பு என்றால், மகன்களுக்கு இல்லாமல் போகுமா?
நா.கதிர்வேலன்