ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



‘மேரி கோம்’ படத்துக்காக தன் நிறத்தையே இழந்திருக்கும் ப்ரியங்கா சோப்ரா, படத்தில் ஒரு காட்சியில் மொட்டைத் தலையோடு தோன்றுகிறார். ‘‘இப்படி ஒன்றிரண்டு காட்சிகளில் மொட்டைத் தலையோடு வர வேண்டும் என்றால் மேக்கப்பில் சமாளிக்கலாம். நல்ல கதை அமைந்து, படம் முழுக்க மொட்டையாக வரும் கேரக்டர் என்றால், அதற்காக தலைமுடியை இழக்கவும் நான் தயார்’’ என்கிறார் ப்ரியங்கா.

அலியா பட்டின் தற்போதைய பெருங்கனவு, சொந்தமாக ஒரு வீடு வாங்குவது. இப்போது தந்தை, இயக்குனர் மகேஷ் பட்டோடு வசிக்கிறார் அவர். ‘‘அப்பா வீட்டில் என்னால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. சொந்தமாக வீடு வாங்கிக் கொண்டு, அப்பா வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வசிக்கப் போகிறேன்’’ என தோழிகளிடம் சொல்கிறார் அலியா.

ஆஸ்கர் விருது வென்ற நடிகை ஜெனிபர் லாரன்ஸ் இப்போது காதலில் விழுந்திருக்கிறார். 24 வயது ஜெனிபரின் காதலர், அவரை விட 13 வயது மூத்தவரான பிரிட்டிஷ் ராக் பாடகர் கிறிஸ் மார்ட்டின்! தன் காதலர் வெளிநாடு சுற்றுலா போகும்போதெல்லாம் அவருடன் செல்வதற்கு ஜெனிபர் ஆசைப்பட, இதனால் அவருக்கு நடிப்பு வாய்ப்புகள் குறைந்துவிடும் என கவலைப்படுகிறார்கள் நெருங்கிய தோழிகள்.

பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் வைப்பதில்லை, பாடகி மைலி சைரஸ். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு, நிர்வாண போஸ். பஞ்சு பொதித்து வைக்கப்பட்ட விலங்கு பொம்மைகள் மத்தியில் படுத்துக் கொண்டு முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார் அவர். சைவத்தை வலியுறுத்தும் ஒரு பத்திரிகைக்காகவே இந்த அசைவ போஸ்!

நடிகை கேத்ரினா கைஃப்பின் தங்கை இஸபெல் கைஃப்பும் நடிக்க வந்தாச்சு. கனடாவில் தயாராகும் ‘டாக்டர் கேப்பி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் அவர். இந்திய உணவு அயிட்டங்களில் ‘தால் மக்கானி’ அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் ‘தால் மக்கானி’ என்றே ஒரு குத்துப் பாடலை ரெடி செய்து, இஸபெல்லை ஆட விட்டிருக்கிறார்கள். ‘‘சீக்கிரமே பாலிவுட்டுக்கு வருகிறேன்’’ என உறுதிமொழி கொடுத்திருக்கிறார் இஸ்பெல். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸுக்காக சல்மான் கான் கனடா போயிருந்ததுதான் பாலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.