நெல்லைத் தமிழில் கமல்!



‘பாபநாசம்’ பளிச்

ரொம்ப நாளாச்சு கமல் படங்கள் இப்படி வரிசையாய் க்யூவில் நின்று. ‘விஸ்வரூபம் 2’ போஸ்ட் புரொடக்ஷனில் இருக்க, ‘உத்தம வில்லனை’ முடித்துக் கொடுத்துவிட்டு, இதோ... ‘பாபநாசம்’ படத்தில் நுழைந்து விட்டார் உலக நாயகன். இத்தனை பரபர சுறுசுறு கமலைப் பார்த்து, தமிழ்த் திரையுலகின் அடுத்த தலைமுறையே வியப்பில் இருக்கிறது.

மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த ‘த்ரிஷ்யம்’தான் தமிழில் ‘பாபநாசம்’. கன்னடம், தெலுங்கு ரீமேக்கிலும் வசூலை வாரிக் குவித்த வெற்றிக் கதை இது. எந்த மொழியிலும் புது முயற்சி என்றால், அது கமல் கண்ணுக்குத் தப்பாது. அப்படித்தான் இந்தக் கதையையும் கெத்தாக கொத்தி எடுத்திருக்கிறார் மனிதர். கமலே பார்த்து வியந்த கதையா? யெஸ்! அப்படி என்னதான் இருக்கிறது ‘த்ரிஷ்ய’த்தில்? சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். மனைவி மீனா. மூத்த மகள் பிளஸ் 2 படிக்கிறாள்.

தன்னைத் தவறாகப் படம்பிடித்து மிரட்டும் ஒரு பையனை அந்தப் பெண் தற்காப்புக்காக தாக்க, அவன் இறந்து விடுகிறான். அதன் பிறகான போலீஸ் புலனாய்விலிருந்து தன் குடும்பத்தை மோகன்லால் எப்படி சாமர்த்தியமாகக் காப்பாற்றுகிறார் என்பதே கதை! இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிப்பது உறுதியானதும், அவருக்கு ஜோடியாக மீனாவா? ஸ்ரீதேவியா? நதியாவா? என பரபரத்தபோது, திடீரென இடையில் வந்தார் கௌதமி.

ஆம், மிக நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதமி இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடி(!)யாகிறார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழுக்கும். ஒளிப்பதிவும் அதே சுஷித் வாசுதேவன்தான். ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’ படங்களைப் போலவே இதிலும் இசை, ஜிப்ரான்.

தமிழில் கமலுக்கென சில மாறுதல்கள் உண்டு. மலையாள நேட்டி விட்டிக்கு பதில், இங்கே நெல்லை வாசனை. மேக்கரை, தென்காசி புது பஸ் ஸ்டாண்ட், தெற்கு மாசி வீதி, ஐடி முக்கு என சகல இடங்களிலும் சுழன்றடிக்கிறது ஷூட்டிங். ‘எல, நம்மூர்ட்ட கமலு வந்து எறங்கியிருக்கர்லா... பஸ் ஸ்டாண்டுட்ட சூட்டிங்கு பாத்தேன். கலக்குறாம்ல’ என நெல்லை ஏரியாவே கலகலக்கிறது.

எல்லாத் தமிழும் பேசிவிட்ட கமலின் தமிழ்ப்பசிக்கு இந்தப் படத்தில் விருந்தாகப் போவது அச்சு அசல் நெல்லைத் தமிழ். அதற்கு உதவுகிறார் இயக்குநர் சுகா. வழக்கம் போலவே இலக்கியம் பேச தொ.பரமசிவன் உள்ளிட்ட உள்ளூர் இலக்கிய வட்டம் காத்திருக்கிறது.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. எளிதில் அனுமதி கிடைக்காத இடம் என்பதால், ஒரு நன்றி நவிலலுக்கு அந்த ஆலய மடத்தில் ஜீயர் ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜரை சந்தித்தார் கமல். கமல் என்றால் சர்ச்சைகளும் உண்டே. இந்த முறை சர்ச்சை, சட்டை விஷயத்தில்! பொதுவாக அந்தக் கோயிலுக்குள் யாரும் சட்டை அணிந்து செல்ல அனுமதி கிடையாது. ஆனால், கமல் தன் சகாக்களோடு சட்டை அணிந்திருந்தது மட்டுமல்ல... வைணவ ஜீயரை சந்திக்கும்போது நெற்றியில் பட்டை அணிந்தும் சென்றிருக்கிறார். இதனால் கடுப்பாகி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது ஒரு குரூப்!

 சு.கோமதிவிநாயகம்