ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்னா, தமிழர்களுக்கு இருப்பது தனித்துவமான ஃபீலிங். வித்தியாசம் காட்டுறேன்னு விவஸ்தையில்லாத்தனம் காட்டுறதே இங்க வழக்கம்.
* பரீட்சையில எழுதியிருந்தா கூட பத்து மார்க் வாங்கியிருக்கலாம். ஆனா படிச்சதையும் பிடிச்சதையும் ஆட்டோவுக்குப் பின்னால, லாரிக்கு பின்னால, பைக் நம்பர் ப்ளேட்லன்னு எழுதி, தத்துவ திருவாசகத்தை எல்லாம் தெருவாசகமா மாத்தி விட்டிருக்காங்க. பிரசவத்துக்கு இலவசம்னு எழுதறது இருக்கட்டும்யா, நீங்க ஓட்டுறதுல பல பெண்களுக்கு பிரசவமே இலவசமா நடந்திடுதுய்யா!
* எங்கடா கத்துக்கிட்டீங்க, நாலு வெக்ஸ் ஆன மூஞ்சியோட போட்டோ போட்டு ஃப்ளெக்ஸ் பேனர் வைக்கிறதை? கல்யாணத்துக்கு வைக்கறீங்க; காது குத்துக்கு வைக்கறீங்க; முடி வெட்டுனா வைக்கறீங்க; மொட்டையடிச்சா வைக்கறீங்க; திருவிழாவுக்கு வைக்கறீங்க; தூங்கப்போறதுக்கு வைக்கறீங்க; பாஸானாலும் வைக்கறீங்க; லூஸானாலும் வைக்கறீங்க; முள்ளு குத்துனா வைக்கறீங்க. அட, பல்லு குத்துனா கூட வைக்கறீங்க...
உங்க லொள்ளுக்கு அளவில்லடா! உங்க விளம்பரத்த கூட பொறுத்துக்கலாம்டா, ஆனா அதுல எழுதறீங்க பாரு வாசகங்கள், அதைத்தான்டா பொறுக்க முடியல. ‘வயல்களை வளமாக்கும் டிராக்டரே, வருங்கால வயித்து ஆபரேஷன் டாக்டரே, வாழ்வை வளமாக்கும் வாட்டரே, எட்டாங்கிளாஸ் பாசான என் டாட்டரே, உன்னை வாழ்த்த வயதில்லை’ன்னு போன வாரம் ஒரு ஃப்ளெக்ஸ பார்த்தேன், அடேய்ய்ய்!
* இதை எங்கப்பா கத்துக்கிட்டீங்க, சாலையில வண்டியோட்டி போறப்ப சாமிக்கு சலாம் போடுறத? வீட்டுல நூறு சாமி போட்டோ இருக்கறப்ப அங்கன கும்பிடாம, ரோட்டுல டூவீலர் ஓட்டுறப்ப கைய விட்டுட்டு கும்பிட்டு போனாக்கா, ரோட்டுல போற வண்டி மேட்டுல டிரெக்கிங் ஏறி சுடுகாட்டுலதான் பார்க்கிங் ஆகும்னு சுவாமி பல்சர்நாதர் சொல்லியிருக்காரு. இனி ரோட்டுல போறப்ப கைய விட்டு சாமிய கும்பிடாதீங்கய்யா, அப்புறம் உன்ன போட்டோல புடிச்சு, உன் வீட்டுல உன்னைய சாமியா கும்பிட வேண்டியது வரும்.
* நாட்டுல கொட்டாவி விடுறவன விட கவிதை புக் விடுறவனுங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. கையெழுத்து போடத் தெரியாம கை நாட்டு வைக்கிறவங்க கூட, கால் குயர் நோட்டுல கவிதை எழுதி வச்சிருக்காங்க. இந்தக் கெட்ட பழக்கம் எப்படிடா வந்துச்சு உங்களுக்கு? திருவள்ளுவரே ரெண்டு வரிக்கு மேல எழுதலைடா, நீங்க ஏன்டா கவிதைங்கிற பேருல கட்டுரைய எழுதித் தள்ளுறீங்க.
* சரி, தாகத்துக்கு தண்ணி பாட்டில் வாங்கி குடிச்சுட்டோம்; பிளாஸ்டிக் பாட்டில குப்பைத் தொட்டில போட்டுட்டு, போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே... எத்தனை காலி பாட்டில கொண்டு போயி வீட்டுல சொத்தாட்டம் சேர்த்து வைப்பீங்க? என்னய்யா பழக்கம் இது, ஃப்ரிட்ஜ் முழுக்க பழைய பாட்டிலா சேக்குறது? காசு கொடுத்து வாங்குன வாட்டர் பாட்டில வீட்டுக்கு கொண்டு போறீங்களே... அதே காசு கொடுத்து வாங்குன குவாட்டர் பாட்டில கொண்டு போவீங்களாய்யா?
* ஏன்பா, நீங்கலாம் லார்டு லபக்தாஸ் பேரனுங்களா? இல்ல, மவுன்ட்பேட்டன் மச்சினன்களா? நவராத்திரி கொண்டாடிக்கிட்டு இருந்த பயலுக எப்பய்யா நியூ இயர் கொண்டாட ஆரம்பிச்சீங்க? தையா, சித்திரையான்னு தமிழ் வருடப் பிறப்பே குழம்பிக் கொந்தளிச்சுக்கிட்டு இருக்கு... இதுல ஜெனிபர் லோபஸ் புருஷனுங்க, ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்ல வந்துட்டாங்க. போதாக்குறைக்கு பஸ் டே, கிஸ் டேன்னு பலப் பல டே வேற.
* அவனவன் நாட்டுல பொண்ணு கிடைக்கலன்னு பொண்ணத் தேடி ஓடிக்கிட்டு இருக்கான், இதுல பொண்ணப் பார்க்க போயிட்டு பாடச் சொல்றது, ஆடச் சொல்றது? இப்படித்தான் நம்ம தாத்தாங்க பாட்டிங்கள கல்யாணம் பண்ணினாங்களா? என்னய்யா இது புதுப்பழக்கம்? இப்போ பொண்ண பாடச் சொல்லி சன் சிங்கருக்கா அனுப்பப் போற? மூணு வயசுக் குழந்தைய எல்.கே.ஜில சேர்த்த பிறகு, மொத வேலையா பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் அனுப்பறது. அடேய்ய்ய், நீங்க அந்த கிளாஸுக்கெல்லாம் அனுப்பாட்டி கூட குழந்தைங்க அதைத்தானே வீட்டுல செய்யும்?!
* புரட்சித்தலைவில ஆரம்பிச்சு புதுசா கட்சி ஆரம்பிச்ச தலைவரின் போட்டோ வரை பாக்கெட்டுல பல பேருக்கு தெரியற மாதிரி வச்சிக்கிட்டு சுத்துவாங்க தன்மானத் தொண்டர்கள். ஏன்டா ஏன்? போட்டோவ பாக்கெட்டுல வச்சா பத்து பேருக்குதான் தெரியும்; அதையே நெத்தியில பச்சையா குத்திக்குங்க.. சுத்துபட்டுல இருக்கிற பத்து ஊருக்கும் உன் பாசம் தெரியும்.
* அந்த முருகப்பெருமானே ஆக்ஸிலேட்டர் இல்லாத மயில ஓட்டிக்கிட்டு இருக்காரு, எமதர்மராஜா பிரேக்கே இல்லாத எருமை மாட்டுல போயிக்கிட்டு இருக்காரு, அவங்களே டிராஃபிக் ரூல்ஸ பாலோ பண்றாங்க. ஆனா, ஏ.சி காருல எல்லா வசதியோட சொகுசா போற நீங்க ஏன் டிராபிக் சிக்னல்ல மூணு நொடிக்கு முன்னாலயே விர்ருன்னு போறீங்க? அந்த மூணு நொடி முன்னால போயி மும்பையவா விலைக்கு வாங்கப் போறீங்க? எங்க இருந்து வந்தது இப்படி டிராபிக்க மதிக்காத பழக்கம்?
* பத்து லட்ச ரூபா காரை வாங்கிட்டு ரெண்டு ரூபா எலுமிச்சம்பழத்தை காருக்கு முன்னால தொங்க விடுற பழக்கத்தை உங்களால மாத்த முடியாதுன்னு தெரியும். ஆனா, அந்த எலுமிச்சம்பழத்தை அந்த கொரியன் கம்பெனி லோகோவ மறைக்கிற மாதிரி கட்டுறீங்க பாரு... அதான் பொறுக்க முடியல. எத்தனையோ கோடி போட்டு, ஆராய்ச்சி பண்ணி, அவன் நமக்காக காரு விட்டா, அவன் கம்பெனி லோகோவுக்கே நகச்சுத்தி வைக்கறீங்களே... இது நியாயமா?
இது மட்டுமில்ல மக்களே, இன்னமும் பல கேள்விகள் இருக்கு. எப்படி இருந்த தமிழர்கள் எப்படி இப்படி ஆனார்கள்? சோறாக்குனா புருஷனுக்கு போடுங்கம்மா, அது என்னம்மா போட்டோ புடிச்சு ஃபேஸ்புக்ல போடுறது? சொந்தமா யோசிச்சு பல இலக்கியங்களை தந்த தமிழினம் இன்னைக்கு சோறு திங்க ஹோட்டலுக்கு போனாக்கூட அடுத்தவன் இலையப் பார்த்து ஆர்டர் கொடுக்குது?
போங்கய்யா போங்க, இன்னமும் என்னென்ன செய்யணுமோ செய்யுங்க... செல்ஃபி எடுத்துக்கிட்டு திரியுற உங்ககிட்ட நம்ம எப்படி மாறியிருக்கோம்னு அட்வைஸ் பண்றது வெயில்ல குல்பி ஐஸை காயப் போடுற மாதிரி. நல்லா இருந்தா சரி!
ஆல்தோட்ட பூபதி