நல்ல மனிதர் + நல்ல டாக்டராக இருக்கிற விஜய் ஆண்டனியை சில பல சம்பவங்கள், மனிதர்கள் சூடேற்ற, சட்டத்தை அவர் கையில் எடுக்கிற கதைதான் ‘சலீம்’. ஒரே ஒரு நாள் அவர் கோபத்தில் வெடித்துச் சிதறி, ஆடுகிற ருத்ர தாண்டவமே சினிமாவாக விரிகிறது. பதறாமல் பேசும் டாக்டர், வார்த்தைகளைச் சுடச்சுடக் கொட்டும் காதலி(!),
அநீதியைக் கண்டு அமைதி இழக்கும் ஹீரோ, கல்நெஞ்ச வில்லன்கள் என ஆதிகாலக் கதையை ஹாஸ்பிட்டல் பின்னணியில் ஓட விட்டிருக்கிறார்கள். முதல் வரி வசனத்திலேயே படத்தைத் தொடக்கி, பிரதான பாத்திரங்களை ‘நச்’சென அறிமுகப்படுத்தி, ஐந்தாவது நிமிடத்திலேயே படத்திற்குள் நம்மை இழுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் நிர்மல்குமார்.
தனது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்ஷன் கதையில் அதிகம் பேசாமல், சடசடவென முடிவெடுத்துக் காரியம் சாதிக்கும் நேர்த்தியில் விஜய் ஆண்டனி, ‘ஆஹா! அண்டர்ப்ளே.’ முதல் பட வெற்றி ஏதோ அதிர்ஷ்டத்தால் வாய்த்ததில்லை என கிட்டத்தட்ட நிரூபித்திருக்கிறார். ஆனாலும், அக்ஷா காதலில் உருகும் சமயங்களில் கூட அத்தனை ‘உர்ர்’ என இருந்திருக்க வேண்டுமா பாஸ்? இருந்தாலும், ஆக்ஷன் அவதாரம் விஜய் ஆண்டனிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாந்த சொரூபராக ரசிக்க முடிகிற அவரே, அடுத்து பதறி வெடிக்கும் ஆக்ஷனிலும் பொருந்துவது நல்ல ஆச்சரியம். இனிமேலும் ‘விஜய் ஆண்டனி தன்னை நிரூபிக்க வேண்டும்’ என யாரும் கேட்க முடியாது!
அக்ஷா, அழகில் விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் ரசிக்க ரசிக்க குறையாத வார்த்தை படபடப்பில் அதெல்லாம் மறந்து போய்விடுகிறது. அவரும், ‘உன்னைக் கண்ட நாள் முதல்’ பாட்டில் பாஸ் மார்க் வாங்கிவிடுவதால் அதே மூடில் நாம் இருந்துவிடுகிறோம்.
விரட்டல், மிரட்டல், பில்டப்போடு அதிர்ந்து திரும்பும் படத்திற்கு வசனங்கள் பெரும் துணை. குறைந்த வார்த்தைகளில் அனல் வீசியும், காதல் குழைத்தும் எழுதியிருக்கிறார் வஸந்த் செந்தில். ‘சலீம்’ எனப் பெயரைச் சொன்னதும் ‘நீ எந்த நாட்டு தீவிரவாதி, அல் கொய்தாவா, லஷ்கர் இ தொய்பாவா’ என போலீஸ் அதிகாரி அடுக்கும்போது, ‘சலீம்ங்கிற பெயர்தான் உங்க பிரச்னைன்னா, விஜய்னு கூப்பிடுங்க... இல்ல, ஆண்டனினு கூப்பிடுங்க’ எனத் திருப்பி அடிப்பது சிக்ஸர் வசனம்.
உள்துறை அமைச்சர் ஆர்.என்.ஆர்.மனோகர் அரசியல்வாதியின் லட்சணங்களோடு வருகிறார். அவரை வில்லன் மாதிரியே உருவேற்றாமல், கலகல காமெடிக்கும் பயன்படுத்துவது, பெரிய ரிலாக்ஸ்.
மருத்துவமனை சூழ்நிலைகள், பின்பு படபடக்கும் இறுதிக் காட்சிகள், பாடல்கள் என அழகையும் பதற்றத்தையும் அடுத் தடுத்து அழகாகக் கொண்டு வந்திருக்கிறது அறிமுக ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் கேமரா. ‘உன்னைக் கண்ட நாள் முதல்’, ‘மஸ்காரா மஸ்காரா’, ‘சிவ சம்போ’ பாடல்களை ஹிட் நம்பர்ஸ் ஆக்கிவிட்ட விஜய் ஆண்டனியின் இசை, பின்னணி இசையில்... ‘சேஃப் கேம்!’
கடைசியில், விஜய் ஆண்டனியை துளி சேதம் கூட இல்லாமல் போகவிட்டு, சூப்பர்மேன் வகையில் சேர்த்திருப்பது பெரிய பூ சுற்றல்! ஒரு ஹோட்டல் அறையிலேயே வைத்து இடைவேளைக்குப் பிறகான படத்தின் பெரும்பகுதியைக் கடத்த முயல்வது, சற்றே அயர்ச்சி. இழுக்கும் க்ளைமாக்ஸைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
‘சலீம்’... ஓகே சொல்ல வைக்கும் ‘ட்ரீட்மென்ட்’!
குங்குமம் விமர்சனக் குழு