சீனியர் ரஜினிக்கு சோனாக்ஷி ஜூனியர் ரஜினிக்கு அனுஷ்கா!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதி. பெயருக்குப் பொருத்தமாக ‘லிங்கா’ படக்குழு ஷூட்டிங் ஸ்பாட்டாக தேர்ந்தெடுத்திருப்பது, லிங்கனமக்கி அணைப்பகுதியை! எக்கச்சக்க பாதுகாப்பு, நூற்றுக்கணக்கில் இருக்கிற போலீசார்... யூனிட்காரர்களை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையாக உள்ளே அனுப்புகிறார்கள். நாம் பிரத்யேகமாக அனுமதி பெற்று லிங்கனமக்கி அணைக்குப் புறப்பட்டுப் போயிருந்தோம்.
அணையை ஒட்டி நீண்ட தூரத்துக்கு, பல அடி உயரத்திற்கு பிரமாண்ட செட்கள். சிவன் கோயிலில் ஆரம்பித்து, வீடுகள், தெருக்கள் என மூன்று தலைமுறைக்கு முன்பிருந்த கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்திருந்தார்கள். போன மாதம் 13ம் தேதியே இங்கு ரஜினி வந்திறங்கிவிட்டார். அன்று மாலையே செட்டிற்கு வந்து பார்த்தவர், சின்னக் குழந்தை மாதிரி சந்தோஷத்தோடு ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் தலைமையிலான குழுவைக் கை குலுக்கி நெகிழ்ந்துவிட்டாராம்.
20 வருஷங்களுக்கு முன்பே இந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. தீவிரவாதிகளால் அணைக்கு ஆபத்து என்பதால், இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவும் முடியாது; சின்னதாக ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், கனத்த பாதுகாப்புக்கு இடையில் ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்திருக்கிறது கர்நாடக அரசு. ரஜினிக்கு என்ன ஸ்பெஷல் அனுமதி என இதற்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷூட்டிங் என்பதால், அடித்துப் பெய்கிற மழையிலும் விடாமல் நடக்கிறது படப்பிடிப்பு. ஒன்பது மணிக்கு மேக்கப்போடு வந்து ரஜினி தனி அறையில் உட்கார்ந்து விடுகிறார். பெரும்பாலும் ஒரே டேக்கில் ஓகே செய்ய வைப்பது தான் ரஜினியின் இப்போதைய பாணி.
சோனாக்ஷி மொழி அறியாமல் தடுமாறும்போதுதான் இரண்டாவது டேக் தேவையாகிறதாம். பெரும்பாலும் சோனாக்ஷியுடன் ரஜினி நடிக்கும் காட்சிகள் இரவில்கூட படம் பிடிக்கப்படுகின்றன. ரஜினி தனது ஷாட் முடிந்துவிட்டால் அறைக்கு உடனே திரும்பிவிடுகிறார். தான் நடிக்கிற காட்சிகள் தவிர மற்ற காட்சிகளின் முழு விபரமும் ஏற்கனவே அவருக்கு அத்துப்படி.
‘லிங்கா’, ரொம்ப நாட்களாகத் திட்டமிட்டு மனதில் வந்த படமில்லை. கே.எஸ்.ரவிகுமாரின் அசிஸ்டென்ட் பொன்குமரன் ஒரு ஸ்டோரி லைன் சொல்லப்போக, திடீரென்று ரவிகுமாரின் கண்கள் சுடர் விட்டது. அவரே ரஜினியிடம் அதைச் சொல்ல, இருவரும் உட்கார்ந்து கேட்கும்போது, அந்த இடத்திலேயே ‘லிங்கா செய்யலாம்’ என முடிவெடுத்துவிட்டார்கள். ரஜினியின் நிறைய படங்கள் அப்படி அவசர கணத்தில் உருவானவையே. பெரும் வெற்றி பெற்ற ‘பாட்ஷா’ கூட, ஒரு லைனில் சொல்லப்பட்டு, சுரேஷ் கிருஷ்ணாவிடம் ‘ரை... ரைட் போகலாம்’ எனச் சொன்னதுதான்.
‘லிங்கா’ இரண்டு அடுக்குகளில் பயணமாகிறது. சுதந்திரத்துக்கு முன்பு ஒரு போர்ஷன்; நிகழ் காலம் இன்னொரு கட்டம். ரஜினிக்கு இரண்டு வெவ்வேறு கெட்டப்கள். மூத்த ரஜினிக்கு சோனாக்ஷியும், இளையவருக்கு அனுஷ்காவும் ஜோடி சேர்ந்துவிட்டார்கள். முதல் போர்ஷனுக்கு சாபு சிரிலின் உழைப்பு தான் மிகவும் பேசப்படுமாம். ரஜினியின் பெரிய ஆர்வம் கூட, சுதந்திரத்துக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கிற இந்த போர்ஷனில்தான் இருக்கிறது.
ஃபிளாஷ்பேக் காட்சியாக வரும் இதில்தான் ரஜினி ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆக்கிரமித்து, ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தருகிறார். ஸ்டைல், பஞ்ச் டயலாக் என கிட்டத்தட்ட ‘சந்திரமுகி’ வேட்டைய மகாராஜா போல பரபரக்கும் கேரக்டரில் திரும்பத் திரும்ப ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் விதமாக சூப்பர்ஸ்டார் வருகிறார்.
எப்போதும் ரஜினி மைசூர், பெங்களூரு வந்துவிட்டால் அவரது நண்பர்களுக்கு போன் போட்டு அழைத்து பேச்சு... பேச்சு.... ஓயாத பேச்சுதான். ஆனால், இந்த முறை அதற்கு இடமே இல்லை. பேசுவது, சிந்திப்பது எல்லாம் ‘லிங்கா’ பற்றித்தான். ஃப்ரீயாக இருந்தால் ‘லிங்கா’ எடிட்டிங்கில் உட்கார்ந்து விடுகிறார். இரவில் எடுக்கும் போர்ஷனை மறுநாள் காலையில் ஸ்பாட்டிலேயே எடிட் செய்து விடுகிறார் சம்ஜித். இவர் கே.எஸ்.ரவிகுமாரோடு ‘போலீஸ்கிரி’ இந்திப் படத்தில் இணைந்தவர்.
தீவிர ரஜினி ரசிகர். சுதந்திரத்திற்கு முன்பான போர்ஷனில் எந்த வித நவீன விஷயங்களும் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதை எடிட்டிங்கிலும் கண்ணில் விரலை விட்டுக்கொண்டு பார்க்கிறார்கள். உதாரணமாக, தொலை தூரத்தில் தெரியும் மின்சாரக் கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் எல்லாம் சி.ஜியில் அழிக்கப்படுகின்றன. படத்தில் மிகப் பெரிய இடம் அந்தப் பகுதிக்கு இருக்கிறது. படத்தின் ஆணிவேரும் அதுதான்.
இப்பொழுதெல்லாம், எல்லோரும் பாடல்களுக்கு பரிதவித்துக் காத்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மானிடம்தான். இதிலும் அதே கதைதான். இன்னும் அவர் எல்லாப் பாடல்களையும் முடித்துக்கொடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே இரண்டு பாடல்களைக் கொடுத்துவிட்டார். ஒரு பாடலை சோனாக்ஷியோடும், இன்னொரு பாடலை அனுஷ்காவோடும் படமாக்கி முடித்துவிட்டார்கள்.
எப்போதும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தான் தன் ஓப்பனிங் பாடலை பாட வேண்டும் என ரஜினி விரும்புவார். அனேகமாக அவர்தான் இதிலும் பாடுகிறார். இன்னும் சில தினங்களில் அவர் பாடி பதிவாகப் போகிறது அந்தப் பாடல். சுதந்திரத்திற்கு முந்தைய போர்ஷனில் கருணாகரன் ரஜினியோடு சேர்ந்து விடுகிறார். நடப்பு காலத்திற்கு சந்தானம்தான் காமெடியன்.
ஆரம்பத்தில் சோனாக்ஷி ரஜினியோடு பழகி பேசவே கூச்சப்பட்டாராம். இதற்கு முன்னால் அப்பாவோடு சேர்ந்து பார்த்துத்தான் பழக்கம். தூரத்திலிருந்து பார்த்து ஹலோ சொன்னதுதான். இப்போது சேர்ந்து நடிப்போம் என எதிர்பார்க்காத சோனாக்ஷி, முதல் சில தினங்களுக்கு மிரண்டிருக்கிறார். பின்பு, ரஜினி மீனா ‘அன்புள்ள ரஜினிகாந்’தில் நடித்ததையும், பிறகு அவரோடு ‘எஜமானில்’ ஜோடி சேர்ந்த கதையையும் ரஜினி தன் பாணியில் விளக்கவே, கலகலப்பாய் ரெடியாகிவிட்டார்.
கே.எஸ்.ரவிகுமார் மாதிரி இவ்வளவு பேரையும் கட்டிச் சேர்த்து படம் பண்ண வேறு யாராலும் முடியாது என்பது உண்மை. முழு ஸ்கிரிப்ட்டும் அவர் விரல் நுனியில் இருப்பதால், கால விரயம் இன்றி எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ல் கொண்டு வர கடுமையான முயற்சி நடக்கிறது. ஆனால், பாடல்களுக்கான ஃபாரீன் பயணம், கொஞ்சம் ஷூட்டிங், ரஹ்மான் இன்னும் சில பாடல்கள் தராதது என தடைகள் கூடி வந்து நிற்பதால், அது கை கூடுமா எனத் தெரியவில்லை.
‘‘என்னோட பெஸ்ட் லிஸ்ட்டில் இந்தப் படம் இருக்க வேண்டும்... பார்த்துக்கங்க பாஸ்’’ என ரவிகுமாரிடம் சொல்லிவிட்டார் ரஜினி. ரஹ்மானும், மழையும் ஒத்துழைத்தால்
ரஜினியின் பிறந்தநாளுக்கு ‘லிங்கா’ ட்ரீட் ரெடி!
மைசூரிலிருந்து ஏ.வீ.மதியழகன்