கனவில் எடுத்த புகைப்படம்
இன்றைய அதிகாலைக் கனவில்
உனது அபூர்வ தருணமொன்றை
புகைப்படம் எடுத்தேன்
நீ எப்படி இருந்திருக்க வேண்டுமோ
நீ எப்படி இருக்கவேண்டுமென்று
ரகசியமாக எப்போதும் கனவு காண்கிறாயோ
அப்படிப்பட்ட தருணத்தின் புகைப்படம் அது
உன்னை ஏராளமான புகைப்படக்காரர்கள்
ஏராளமான சந்தர்ப்பங்களில்
படமெடுத்திருக்கிறார்கள்
நீ ஒரு பிரபலமான மனிதனாகிய பிறகு
சில சமயம் நீ சாதாரணமாக சிரிப்பதுகூட
ஒரு புகைப்படத்திற்காக
சிரிப்பதுபோலவே இருக்கிறது
ஆனால்
இன்று நான்
உன்னை என் கனவில் எடுத்த படம் போல
ஒன்றை யாரும் எடுக்கவே இயலாது
அவர்கள் எப்போதும்
உன்னையல்ல,
உன் நாடகங்களின் சாயல்களையே
படம் பிடிக்கிறார்கள்
நல்ல வெளிச்சத்தில்
உன் கண்களில் உறைந்த இருட்டைத்தான்
அவர்கள் படம் எடுக்கிறார்கள்
அவர்கள் ஒரு பறவையை படம் பிடிக்கும்போது
அதன் அறுபட்ட சிறகில்தான்
கவனம் செலுத்துகிறார்கள்
ஆனால் கனவில் எடுக்கப்படும் புகைப்படங்கள்
அப்படியல்ல
என் கனவின் புகைப்படத்தில்
நீ உன் தூய வடிவிற்குள் திரும்பியிருந்தாய்
நீ எப்படி இந்த பூமிக்கு வந்தாயோ,
எப்படி இந்த நிலத்தின்மீது
உன் முதல் அடியை எடுத்து வைத்தாயோ,
அதே போன்று இருந்தது
அந்தப் புகைப்பட தருணம்
இனி நீ எப்போதும்
இந்தப் புகைப்படத்தைத்தான்
பயன்படுத்த வேண்டுமென்று
நான் சொன்னபோது
கனவிலேயே நீ மனமுடைந்து அழுதாய்
என் கனவின் புகைப்படத்தை
எப்படி உனக்கு அனுப்புவேன்
என் கனவின் தருணத்தை
எப்படி உன்னிடம் கொண்டு வருவேன்?
கனவின் புகைப்படங்களை
கனவின் வழியாகத்தான்
அனுப்ப முடியும் என்பதால்
அந்தக் கனவிற்குள் திரும்பிச் செல்ல
அதன் கதவுகளைத் தட்டுகிறேன்
ஆனால்
நம்மால் புகைப்படங்களுக்குள்
நுழைய முடியாததுபோலவே
நம் கனவுகளுக்குள்ளும் ஒருபோதும்
திரும்ப முடிவதில்லை.
செல்வி ராமச்சந்திரன்