சகுனியின் தாயம்



முழங்கை அளவுக்கு நீண்டிருந்த அந்த ஆட்டின் கொம்பை எடுத்த யவன ராணி, எச்சரிக்கையுடன் சுற்றிலும் பார்த்தாள். யாரும் இல்லை என்பது ஊர்ஜிதமானதும் இளமாறனை நோக்கி புன்னகைத்தாள். அதே மனநிலையுடன் வலப்பக்கம் நோக்கி நகர்ந்தாள். அந்த இடம் இருட்டாக இருந்ததால், எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தை இளமாறன் எடுத்துக் கொண்டான். சப்தம் எழுப்பாமல் இருவரும் கற்சுவருக்கு அருகில் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த தாங்கியில் ஏந்தி வந்த பந்தத்தைப் பொருத்தினான்.

தன் கையிலிருந்த கொம்பின் முனையை ராணி தடவிப் பார்த்தாள். எதிர்பார்த்தது போலவே கூர்மையாக இருந்தது. அதன் பின்னர் அவள் தாமதிக்கவில்லை. கொம்பை கற்சுவரில் சாய்த்தவள் அதை மேல் நோக்கி நகர்த்தினாள். சரியாக ஐந்து முறை அப்படி மாறி மாறி நகர்த்தியதும் தன் செயலை நிறுத்தினாள்.

அந்த இடம் அவள் கண் பார்வைக்கு நேராக வந்தது. தட்டிப் பார்த்தாள். செதுக்கப்பட்ட கற்பாறை ‘டண்’ என லேசாக ஒலி எழுப்பியது. அருகிலிருந்த மற்ற பாறைகளைத் தட்டினாள். ஒலியேதும் கிளம்பவில்லை. தன்னருகில் நின்றிருந்த இளமாறனை பார்த்தவள், ‘இந்த இடம்தான்’ என ஜாடை காட்டினாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்த இளமாறன், அவளை காத்திருக்கச் சொல்லி விட்டு அகன்றான். சிறைச்சாலை முழுக்க ஒரு சுற்று சுற்றினான். மறைவிடங்களில் தன் இடுப்பில் இருந்த வாளால் விசிறினான்.

வீரர்கள் உணவருந்தும் கூடத்தை எட்டிப் பார்த்தான். சந்துஷ்டியுடன் ராணி இருக்கும் மூன்றாவது கொட்டடிக்கு வந்தான். ராணியைப் பார்த்து தன் வலது கை கட்டை விரலை உயர்த்தினான்.

அதை ஆமோதிக்கும் விதமாக தன் இமைகளை மூடித் திறந்த ராணி, ஒலியை கிளப்பிய கற்பாறையின் ஓரங்களை கொம்பின் முனையால் சுரண்டினாள். கிளம்பிய தூசி அடங்கியதும் தன் வாயால் ஊதினாள். பிறகு அந்தக் கற்பாறையை கொம்பின் முனையால் நிமிண்டினாள். மெல்ல மெல்ல நகர்த்தினாள்.

அசைந்த பாறை ஓரளவுக்கு வெளியே வந்ததும், தன் இரு கைகளாலும் அதைப் பிடித்து இழுத்தாள். கையோடு பாறை வந்தது. ஒலி எழுப்பாமல் அதை தரையில் வைத்தாள். உள்ளங்கையை தன் ஆடையில் துடைத்துக் கொண்டாள். பின்னர் தன் வலது கையை அந்தப் பாறை இருந்த இடத்திற்குள் நுழைத்துத் துழாவினாள். சட்டென்று அவள் கண்கள் ஒளிர்ந்தன. இளமாறனின் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தபடி தன் கருவிழியை அசைத்தாள். பொந்திலிருந்து ஒரு பொருளை எடுத்தாள்.

அது ஆட்டுத் தோலினாலான மெல்லிய துணி. அதைக் கண்டதும் இளமாறன் பரபரப்படைந்தான். எடுத்த ஆடையை அவனிடம் கொடுத்துவிட்டு ராணி கீழே குனிந்தாள். பாறையை எடுத்து மீண்டும் அதே இடத்தில் பொருத்தினாள். கடைசியாக அதைத் தட்டியும் பார்த்தாள். முன்பு போலவே ‘டண்’ என லேசாக ஒலி கிளம்பியது. திருப்தியுடன் இளமாறனின் கையைப் பிடித்தபடி பந்தத்துக்கு அருகில் வந்தவள், அவனிடமிருந்த துணியை வாங்கிப் பிரித்தாள். ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகளுடன் கூடிய வரைபடம் ஒன்று அந்தத் தோல் ஆடையில் வரையப்பட்டிருந்தது.

‘‘இதுதானே?’’ இளமாறன் கிசுகிசுத்தான்.
‘‘இதேதான்...’’ ராணியின் குரலில் மகிழ்ச்சி வழிந்தது.
‘‘அப்படியானால்..?’’
‘‘வேலையை ஆரம்பித்து
விடலாம்...’’

‘‘அப்படி ஆரம்பித்தால் நாம் பூண்டோடு அழிந்துவிடுவோம்...’’
இதைக் கேட்ட ராணி அதிர்ந்தாள். ‘‘என்ன சொல்கிறீர்கள்?’’
‘‘உண்மையைச் சொல்
கிறேன்...’’

‘‘எந்த உண்மை?’’
‘‘இது போலி என்ற உண்மை...’’
‘‘போலியா? என்ன உளறு
கிறீர்கள்?’’

‘‘ராணி, நான் உளறவில்லை. இந்த வரைபடம் நாம் தேடி வந்தது அல்ல. யாரோ நாம் வருவோம் என்று அறிந்து மாற்றி வைத்திருக்கிறார்கள்...’’
‘‘எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?’’‘‘இந்த சிவப்புப் புள்ளியை வைத்துத்தான்...’’ என்றபடி இளமாறன் ஓரிடத்தில் தன் ஆள்காட்டி விரலை வைத்தான்.
‘‘இதற்கென்ன?’’

‘‘என்ன ராணி இப்படிக் கேட்டுவிட்டாய்... இந்த இடம் எது தெரியுமா?’’
‘‘எது?’’‘‘மணிவண்ணன் கோட்டம்...’’
கேள்வியுடன் யவன ராணி அவனை நோக்கினாள்.

‘‘மணிவண்ணன் கோட்டம் என்பது ஆலயம். நாம் தேடி வந்ததோ ஆதூரச் சாலைகளின் வரைபடம். ஆதூரச் சாலை என்பது நோய் தீர்க்கும் மையம். அதற்கும் மணிவண்ணன் கோட்டத்துக்கும் என்ன தொடர்பு?’’‘‘ஏனில்லை. ஆலயங்களில் நோய்களை குணப்படுத்துவது வழக்கம்தானே?’’‘‘மறுக்கவில்லை. ஆனால், மணிவண்ணன் கோட்டத்தில் அப்படி ஏதும் நடைபெறுவதில்லையே?’’இளமாறனின் கூற்று ராணியை அதிர வைத்தது. தன் கையிலிருந்த வரைபடத்தையே வெறித்துப் பார்த்தாள்.

அதே நேரம் மணிவண்ணன் கோட்டத்தில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. சோழ மன்னர் பெருநற்கிள்ளி, கருவறையில் வீற்றிருந்த இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்.
அவர் பார்வை இறைவனின் மீதே பதிந்திருந்தது. குறிப்பாக மார்புப் பகுதியில். அன்று இறைவனுக்கு ஒரு மாலையை சார்த்தியிருந்தார்கள். அந்த மாலை கொற்கை முத்துக்களால் ஆன மணிமாலை. அதன் நடுவில் சிவப்பு நிறக் கல் ஒன்று பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல் தீபத்தின் ஒளியில் பிரகாசித்தது.

அந்தப் பிரகாசம் கருவறையை நிரப்பியது. அதுவும் புள்ளிப் புள்ளியாக. அந்தப் புள்ளிகள் இளமாறனும் யவன ராணியும் ஏந்தியிருந்த வரைபடத்திலிருந்த சிவப்புப் புள்ளிகளைப் போலவே குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தன. சோழ மன்னர் அந்தப் புள்ளிகளைத்தான் உன்னிப்பாக பார்வையிட்டுக் கொண்டிருந்தார்... குறிப்பாக ஒரு புள்ளியை!
அந்தப் புள்ளி சுட்டிக் காட்டிய இடம் புகாரில் இருந்த சீன வணிகர்களின் ஸ்தலம்.

‘‘மகேஷ் எப்படி அந்த அஞ்சு தலை பாம்பு மேல ஏறினான்?’’ஸ்பைடர் மேன் கேட்ட கேள்விதான் ஹாரி பார்ட்டரின் உள்ளத்திலும் சுற்றிச் சுற்றி வந்தது. இருவருக்குமே பதில் கிடைக்கவில்லை. அந்தளவுக்கு வேகமாக மகேஷ் செயல்பட்டிருந்தான்.அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி விட்டு அருவி பக்கம் வந்தவன் உடனடியாக நீர்ப்பரப்பின் மீது தன் வலது காலை எடுத்து வைத்தான்.

எப்படியும் அந்த நாகம் தண்ணீருக்குள்தானே இருக்கும்... தன் கால் பட்டதுமே அது நிச்சயம் சிலிர்த்து எழும். அப்போது அதை வீழ்த்தலாம் என கணக்குப் போட்டான்.
அது தப்பவில்லை. நீரில் அவன் தன் காலை வைத்து இரண்டடிகள் நடந்திருப்பான். அவ்வளவுதான். சட்டென்று அந்த தண்ணீர் பரப்பு அப்படியே மேல் நோக்கி எழுந்தது.
‘வாரே வாவ்...’ என விசிலடித்த மகேஷ், கால் கட்டை விரல்களை ஊன்றியபடி அசையாமல் நின்றான்.

மேல் பரப்பில் இருந்த நீர் மொத்தமாக வடிந்ததும் அது அப்படியே ஐந்துத் தலை நாகத்தின் தலைப்பகுதியாக மாறியது. கிட்டத்தட்ட அருவியின் மேற்பரப்பு வரை அந்தப் பாம்பு உயர்வதற்குக் காத்திருந்தவன், அதன் பிறகு டான்ஸ் ஆட ஆரம்பித்தான். அதுவும் ‘காவியத் தலைவன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வாங்க மக்கா வாங்க...’ பாடலுக்கு!
இதனால் எரிச்சலடைந்த நாகம் தன் வால் பகுதியை உயர்த்தி சாட்டையைப் போல் அவனை விளாச முற்பட்டது.

ஆனால், இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருந்த மகேஷ், அந்த வால் நுனியை தன் கைகளில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்தக் கோலத்தில் தன்னைப் பார்த்தவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. தூக்கம் வராமல் அவன் புரண்டுப் புரண்டு படுத்த போது ஒருநாள் அவள் ஒரு கதையை சொன்னாள். அந்தக் கதையில் இப்படித்தான் பகவான் கிருஷ்ணர் பாம்பின் மீது நின்றபடி நர்த்தனம் புரிவார்.

அதே போல் இப்போது அவனும் இருக்கிறான். அப்படியானால் இந்த நாகமும் அரக்கனாக இருக்குமோ? வாய்ப்பிருக்கிறது. கிருஷ்ணரை வணங்கியபடியே டான்ஸ் ஆடியவன், வால் நுனியை ஒரு கையால் பிடித்தபடி கீழே குனிந்தான். ஐந்து தலைகளும் முறம் போல் விரிந்திருந்தது. ஒரு தலைக்கும் அடுத்த தலைக்கும் இடையில் மெல்லிய கோடு ஒன்று காணப்பட்டது. சரியாக மூன்றாவது தலைக்கு அருகில் இருந்த கோட்டை தன் கால் கட்டை விரல் நகத்தால் கிழித்தான்.

அலறிய நாகம் திமிறியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த மகேஷ், பிடித்திருந்த வால் பகுதியை நழுவவிட்டான். நொடியும் தாமதிக்காமல் இரு கைகளாலும் அந்தப் பாம்பை இரண்டாகப் பிளந்தான். ஆனால் நாகம் துண்டாகவில்லை. பதிலாக கிழிந்த இடம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. ‘இதுவா விஷயம்...’ என முணுமுணுத்தவன், மனமுருக கிருஷ்ணரை தியானித்தான்.பிறகு ஏதோ ஓர் அரக்கனை அழிக்க அவர் கையாண்ட முறையை அப்படியே அந்த இடத்தில் அமல்படுத்தினான்.

பாம்பை இரண்டாகப் பிளந்த கையோடு, அதை தலைகீழாகத் திருப்பினான். அதாவது ஒரு துண்டின் தலைப்பக்கம் மறு துண்டின் வால் பகுதி வருவது போல் புரட்டினான்.முடிந்தது கதை. பிளவுபட்ட நாகத்தால் ஒன்று சேர முடியவில்லை. ‘உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஓங்கி அலறியபடி தன் உயிரை அது விட்டது. அடுத்த செகண்ட் அந்த பாம்பும் மறைந்தது. அருவியும் காணாமல் போனது. ‘இதென்ன வம்பாப் போச்சு? அப்ப இந்த வாட்டர் ஃபால்ஸ் பொய்யா? நிஜமான அருவி எங்க இருக்கு?’சந்தேகத்தை தீர்க்க தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்தான்.

‘‘சரியான முட்டாளா இருக்கானே... அதுதான் தேவதை கரன்ட் கம்பிகளுக்கு மத்தில சிறைப்பட்டிருக்காளே... அவ எப்படி வருவா?’’ பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த ஸ்பைடர் மேன் சலித்துக் கொண்டான். ‘‘நீதான் லூசுத்தனமா பேசற. தேவதை ஜெயில்ல இருக்கிற விஷயம் அவனுக்கு எப்படித் தெரியும்?’’ என்றபடி ஹாரி பார்ட்டர் முறைத்தான்.
‘‘கரெக்ட்... மகேஷுக்கு இந்த விஷயம் தெரியாதுல... இப்ப நாம என்ன செய்யறது?’’

‘‘ஆணியே புடுங்க வேண்டாம். பேசாம வேடிக்கை பாரு...’’
பார்த்தார்கள். அடுத்த நொடி தேவதை அங்கு தோன்றியதையும்.

‘‘மறுபடியும் சூனியக்கார பாட்டியே ஏஞ்சல் உருவத்துல வந்துட்டா...
’’ ஸ்பைடர் மேன் முணுமுணுத்தான்.
‘‘இல்ல...’’ அதிர்ச்சியுடன் ஹாரி பார்ட்டர் பதிலளித்தான்.
‘‘என்ன இல்ல?’’

‘‘வந்திருக்கிறது சூனியக்கார பாட்டியில்ல...’’
‘‘பிறகு?’’‘‘ரியல் ஏஞ்சல்... இவ எப்படி கரன்ட் பாயற ஜெயில்லேந்து தப்பிச்சா?’’
ஹாரி பார்ட்டர் கேட்ட கேள்வி ஸ்பைடர் மேனை புரட்டிப் போட்டது.
இருவரும் திக்பிரமையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஏறக்குறைய இதே கேள்வியைத்தான் சூனியக்கார பாட்டி மந்திரவாதி தாத்தாவிடமும் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘‘மாஸ்டர்... நான் அடைச்சு வைச்ச இடத்துலேந்து இன்னும் தேவதை தப்பிக்கவேயில்ல. அப்படியிருக்கும்போது மகேஷ் முன்னாடி நிக்கறது யாரு?’’
‘‘ஆடு...’’ ‘‘என்னது?’’

‘‘ஆமா. முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆடுதான் அது...’’ குரல் நடுங்க பதிலளித்தார் மந்திரவாதி தாத்தா. குருதியில் நனைந்த தாயத்தை சகுனி பார்த்தது ஒரு கணம்தான். அதன் பின்னர் அவர் பார்வையில் பட்டது தாயமல்ல. தன் தந்தையின் தொடை எலும்புதான். ‘‘சகுனி... வயதில் நீ இளையவன்தான். ஆனால், புத்திசாலி. அதனால்தான் குரு வம்சத்தை பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஆயுத பலத்தால் பீஷ்மரை வீழ்த்த முடியாது. அதற்குத் தேவை மூளை பலம். அது உன்னிடம் நிரம்பவே இருக்கிறது.

தாயம் ஆடுவதில் நீ கெட்டிக்காரன். அந்த தாயத்தால்தான் உன் மாமன் திருதராஷ்டிரனின் புதல்வர்களையும், பாண்டுவின் வாரிசுகளையும் அழிக்க வேண்டும். அதற்காகத்தான் நம் அனைவருக்காகவும் வழங்கப்படும் ஒரு கவளம் உணவை உனக்கு வழங்குகிறோம். நீ மட்டுமே அதை சாப்பிட வேண்டும். பசியால் நாங்கள் அனைவரும் சிறுகச் சிறுக இறப்பதை கண்ணார நீ காண வேண்டும். நாங்கள் அனைவரும் மறைந்த பிறகும் நீ உயிருடன் இருப்பாய்.

உன்னைக் கொல்ல பீஷ்மர் முற்படுவார். அதைத் தடுக்க வேண்டுமானால் நீ அங்கஹீனம் அடைய வேண்டும். எனவேதான் இந்தக் காரியத்தை செய்கிறேன். மைந்தா... என்னை மன்னித்து விடு...’’ என்றபடி தன்னை அருகில் அழைத்ததையும் தன் காலை உடைத்ததையும் சகுனி நினைத்துப் பார்த்தார். அதன் பிறகு தந்தையிடம், தான் கேட்ட கேள்வி கூட மறக்கவில்லை.

‘‘தாய் மாமன் என்பது தாய்க்கு சமமான உறவல்லவா? அப்படி இருக்கும்போது அக்காவின் புதல்வர்களை நானே அழிக்கலாமா? அது தர்மமா?’’
அதற்கு தந்தை அளித்த விடையை ஆண்டுகள் கடந்த பின்னும் சகுனி மறக்கவில்லை. அந்த பதில்... பற்களை கடித்தபடி உப்பரிகையை விட்டு அகன்றார்.
அவர் செல்வதையே ஆதூரச் சாலையில் நின்றபடி ஓர் உருவம் கவனித்துக் கொண்டிருந்தது. அது, பகவான் கிருஷ்ணர்.

‘‘அடுத்த ஊசி போட்டுக்க எப்போ வரணும் டாக்டர்..?’’
‘‘ஏன் சுத்தி வளைக்கறீங்க? அடுத்ததா எப்போ நர்ஸை பார்க்கலாம்னு நேரடியாவே கேளுங்களேன்!’’

‘‘தலைவரை தூக்கத்தில்தான் அரெஸ்ட் பண்ணுவாங்களா... ஏன்?’’
‘‘அவருக்கு தூக்கத்தில் தானாவே நடந்து ஜெயிலுக்குப் போயிடற வியாதி...’’

‘‘உங்களுக்குப் போட்ட மாலையை உடனே கழட்டிக் குடுங்க தலைவரே...’’
‘‘ஏன்யா... அடுத்த மீட்டிங்குக்கு நேரமாயிடுச்சா?’’
‘‘ம்ஹும்... அஞ்சு நிமிஷத்துக்குத்தான் மாலையை வாடகைக்கு எடுத்திருக்கோம்!’’
 எஸ்.ராமன், சென்னை17.

(தொடரும்)

கே.என்.சிவராமன்