தமிழ் பேரரசன் ராஜேந்திரன்



சிவாஜியையும், பாபரையும், ஹர்ஷரையும், அசோகரையும் கொண்டாடுகிற வட இந்திய வரலாற்றாசிரியர்களின் ஊனப் பேனா, தெற்காசியாவையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ராஜேந்திரனைப் பற்றியோ, பெரும் மறுமலர்ச்சிகளை விதைத்த ராஜராஜனைப் பற்றியோ எழுதுவதில்லை. உலக வரலாற்றை எழுதுபவர்களுக்கும் இந்த ‘அலர்ஜி’ நோய் இருக்கிறது.

நெப்போலியனையும், அலெக்ஸாண்டரையும் பெருமையாகப் பேசுகிற நம் பாடப் புத்தகங்கள் கூட நம் மண்ணில், நமக்கு நெருக்கமாக வாழ்ந்து நமக்கான அடையாளங்களை மீட்டுத் தந்த அரசர்களைப் பற்றி முழுமையாக சொல்லித் தருவதில்லை. நம்மூருக்கு அருகில் இருக்கிற, ஒரு காலத்தில் தெற்காசியாவுக்கே தலைநகராக இருந்த ஒரு ஊரை, அங்கே அமைந்திருக்கிற சரித்திரப் பொக்கிஷமான ஒரு கோயிலை நம்மில் பலர் இன்னும் பார்த்ததே இல்லை.

ராஜராஜனுக்கு 11 மனைவிகள். மூன்றே வாரிசுகள். ராஜேந்திரன், சந்திரவள்ளி, குந்தவை... வானவன் மாதேவியின் மகன்தான் ராஜேந்திரன். மாற்றாந்தாய் எண்ணமின்றி ராஜேந்திரன் மீது பிற அன்னையர் மிகவும் அன்பு பாராட்டினார்கள்.

 குறிப்பாக மூத்த அன்னையான பஞ்சவன்மாதேவி. பெரிய கோயில் கட்டுமானத்தில் மிகப்பெரும் பங்களிப்பு செய்தவள். தனக்கொரு மகன் பிறந்து, அவனால் ராஜேந்திரனின் அரியணைக்கு போட்டி வந்துவிடக்கூடாது என்று கருதி பிள்ளைப்பேறு அழிக்கும் மருந்தைத் தின்று தன்னை மலடாக்கிக் கொண்டவள் என்று இவளைப் பற்றி எழுதுகிறார்கள். கனிவும் கருணையும் பொருந்திய இந்தத் தாய்க்கு கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் ஒரு நினைவாலயம் (பள்ளிப்படைக் கோயில்) எழுப்பியிருக்கிறான் ராஜேந்திரன்.
 
இலங்கையை முழுமையாகக் கைப்பற்றிய தருணத்தில் தலைநகரான பொலனருவாவில் தன் அன்னை வானவன் மாதேவியின் பெயரில் ஒரு கோயிலை எழுப்பினான் ராஜேந்திரன். இது இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. இலங்கையில் தமிழர்களின் அடையாளங்கள் தவிடுபொடியாக்கப்பட்டு வரும் சூழலில், அங்கு மிஞ்சியிருக்கும் ஒரே சோழர் காலத்துச் சுவடு இதுதான். 

முழுமையான அரச பொறுப்பை ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டபோது அவன் வயது 48 என்று கணிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். 32 ஆண்டு கால ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினான். ‘‘எல்லாக் கோயில்களிலுமே கலையும் இறையும் கலந்துறவாடுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் சிவன் கோயிலை, தம் குருவான ஈசான சிவ பண்டிதரின் விருப்பத்துக்கிணங்க கட்டினான்.

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவலஞ்சுழி பைரவர் கோயில், நாகப்பட்டினம் காரோணீஸ்வரர் என ராஜேந்திரன் கட்டிய கோயில்கள் அனைத்தும் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கின்றன. இவைதவிர மைசூர், ஆந்திரப் பகுதிகளிலும் ராஜேந்திரன் பல கோயில்களைக் கட்டியுள்ளான்...’’ என்கிறார் கல்வெட்டியல் ஆய்வாளரும், சோழர் வரலாற்றை ஆதாரங்களோடு ஆவணப்படுத்தி வருபவருமான குடவாயில் பாலசுப்பிரமணியன்.

ராஜேந்திரனின் குடும்ப உறவுகள் பற்றியும் அவர் விரிவாகப் பேசுகிறார். ‘‘ராஜேந்திரனுக்கு 5 மனைவிகள். பட்டத்தரசி முக்கோக்கிழானடிகள். அருந்தவன்மாதேவி, வானவன்மாதேவி, வீரமாதேவி, பஞ்சமன்மாதேவி ஆகியோர் பிற மனைவியர். இவர்களுக்கு மொத்தம் 13 பிள்ளைகள். 10 ஆண்கள். அருமொழி நங்கை, அம்மங்கை என இரு மகள்கள். அம்மங்கையை தம் தங்கையான குந்தவைக்கும் கீழை சாளுக்கிய மன்னனான விஜயாதித்தனுக்கும் பிறந்த ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் செய்துகொடுத்தான்.

 அம்மங்கைக்கும் நரேந்திரனுக்கும் பிறந்த முதலாம் குலோத்துங்கன் பிற்காலத்தில் சோழ தேசத்தின் மன்னராகி சாளுக்கிய சோழர் மரபை தோற்றுவித்தது தனிக்கதை. அருமொழி நங்கை பற்றிய செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை’’ என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். 

ராஜேந்திரனின் 10 மகன்களும் அவனது வீரத்துக்கும் மனோதிடத்துக்கும் சற்றும் குறைவில்லாதவர்கள். 14 லட்சம் வீரர்கள், லட்சத்துக்கும் மேற்பட்ட குதிரைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய பெரும்படையை ராஜேந்திரனின் புதல்வர்களே அணிவகுத்து வழி நடத்தினார்கள்.

 ‘‘முதல் மூன்று மகன்களான ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் நேரடியாக சோழ தேசத்தை ஆண்டார்கள். பிற மகன்களான சுந்தரச் சோழ பாண்டியன், விக்கிரமச்சோழ பாண்டியன், பராக்கிரமச்சோழ பாண்டியன், மும்முடிச்சோழன், வீரசோழன், மதுராந்தகன், பராந்தக தேவன் ஆகியோர் வென்ற நாடுகளை நிர்வகிக்க அனுப்பப்பட்டார்கள்.

ராஜராஜன் தன் காலத்திலேயே ராஜேந்திரனை இளவரசாக்கி ஆளச் செய்ததைப் போல, ராஜேந்திரனும் தம் தலைமகன் ராஜாதிராஜனை இளவரசு பட்டம் சூட்டி துணையாக்கிக் கொண்டான். ராஜேந்திரன் மறைவுக்குப்பிறகு முழுப் பொறுப்பேற்ற ராஜாதிராஜன், அடுத்த 10 ஆண்டுகளில் (கி.பி.1054) துங்கபத்திரை ஆற்றின் கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்தான்.

அப்போரில் அண்ணனோடு இணைந்து களமாடிய தம்பி இரண்டாம் ராஜேந்திரன், தம் சகோதரனின் மரணத்தால் நிலைகுலைந்து போகாமல், களத்திலேயே சோழ தேசத்தின் மன்னனாக முடிசூடி படையை வழிநடத்தி சாளுக்கியர்களை வென்றான். இவன் 12 ஆண்டுகள் சோழதேசத்தை வழிநடத்தினான். இவன் மறைவுக்கு முன்பே இவனது மகனும் அரச வாரிசுமான ராஜமகேந்திரன் இறந்து விட்டதால் ராஜேந்திரனின் மூன்றாம் மகனான வீர ராஜேந்திரன் அரியணை ஏறினான்...’’ என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

வீர ராஜேந்திரன் காலத்தில் சோழ தேசம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. நான்கு புறங்களிலும் எதிரிகள் தலையெடுத்தனர். குறிப்பாக மேலை சாளுக்கியர்கள் கடும் சவாலாக வளர்ந்தெழுந்தனர். ஆனால் இவன் சண்டையை விட சமாதானத்தை விரும்பினான். மேலை சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடன் நட்பு பாராட்டினான்.

அவனுக்கு தம் மகளை மணம் முடித்துக் கொடுத்து கீழை சாளுக்கியத்தைப் போலவே மேலை சாளுக்கியத்தையும் உறவாக்கிக் கொண்டான். கி.பி.1070 வரை இவன் ஆட்சி தொடர்ந்தது. இவனுக்குப் பிறகு இவன் மகன் அதிராஜேந்திரன் ஆட்சிக்கு வந்தான். ஆனால் சில மாதங்களிலேயே அவன் இறந்துபோனான். இவனுக்கு வாரிசுகளும் இல்லை.

430 ஆண்டுகாலம், நேரடி ஆண்வழி வாரிசுகளில் ஆளப் பட்டு வந்த இடைக்காலச் சோழப்பேரரசு முதன்முதலாக பெண்வழி மரபுக்கு மாறியது. ராஜேந்திரனின் மகள் அம்மங்கையின் மகனும் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவனுமான முதலாம் குலோத்துங்கன் சோழதேசத்திற்கு மன்னனாக நியமிக்கப்பட்டான்.

பொதுவாக சோழர்கள் எவரும் தம் அரண்மனையில் இறந்ததாக சரித்திரம் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தம் வாரிசுகளின் கையில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ‘வானப் பிரஸ்தம்’ மேற்கொண்டு விடுவார்கள். ராஜேந்திரனும் அவ்வழியைத்தான் நாடினான். மகன் ராஜாதிராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்த ராஜேந்திரன், மனைவியர்களில் ஒருவரான வீரமாதேவியுடன் பயணித்து, நாடு முழுவதும் பரவிக் கிடந்த சிவாலயங்களை தரிசித்தான்.

இறுதியில் காஞ்சிபுரத்துக்கு அருகில் பாலாறும் செய்யாறும் சங்கமிக்கும் பிரம்மதேசம் என்ற சிறு கிராமத்தில் குடியிருந்த சமயப் பெரியோர்கள் மத்தியில் நிலை கொண்டு தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டான். கி.பி.1044ல் அந்த கிராமத்திலேயே (சுமார் 80 வயதில்) இறந்தும் போனான். கணவனுக்கு மூட்டிய சிதையிலேயே உடன்கட்டை ஏறி வீரமாதேவியும் உயிர் துறந்தாள். அதே ஊரில் ராஜேந்திரனின் அஸ்தியை வைத்து அதன்மேல் ஒரு நினைவாலயம் (பள்ளிப்படைக் கோயில்) எழுப்பப்பட்டது.

தஞ்சையில் பிறந்து, உலகின் கால்பாகத்தை வென்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நிலைகொண்டு, செய்யாறில் நீங்காத் துயில்கொண்ட ராஜேந்திரன் ஒரு பெருஞ்சரித்திரம். அவன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு இது. இத்தருணத்தில் அவனது சரித்திரத்தை நினைவு கூர்வது பெருமையும் பெருமிதமுமான அனுபவம்.

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம், சங்கர்

வெ.நீலகண்டன்