கைலாசம்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கைலாசம் காலமானார். வயது 53. யார் கைலாசம் என்ற கேள்விக்குப் பதில், அவர் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மகன். இது சட்டென்று தமிழ் வாசகர்களுக்குப் புரியக் கூடிய அடையாளம். ஆனால் கைலாசம் என் நண்பனும் நலம் விரும்பியுமாகும். நான் 197374ம் ஆண்டில் அயோவா என்னும் அமெரிக்கச் சிற்றூருக்குச் சென்றிருந்தேன்.
அன்று அந்த இடம் படைப்பிலக்கியப் பயிற்சிக்கும் மருத்துவப் படிப்புக்கும் பெயர் போனது. ஆனால் அது படைப்பிலக்கியப் பிரிவில் திரைப்படம் எடுப்பதையும் சேர்த்திருந்தது என்று எனக்குத் தெரியாது. ஏற்கனவே பொறியியலில் பட்டம் பெற்றிருந்த கைலாசம், அந்தத் திரைப்பட வகுப்பில் சேர இருந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. முதலில் பாலசந்தர் அவர்களுக்குக் கைலாசம் என்றொரு மகன் உண்டு என்றும் தெரியாது.
டிசம்பர் 1977ல் நானும் கன்னட எழுத்தாளரும் அரசியல்வாதியுமான அனந்தமூர்த்தியும் அயோவா பற்றி உரையாட வேண்டும்; அதை நான் எழுதித் தர வேண்டும் என்று ஒரு பத்திரிகையிலிருந்து வேண்டுகோள் வந்தது. அதற்காக நான் மைசூர் சென்றேன். அப்போது திருமதி இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை, கர்நாடகாவில் சிறிது தீவிரமாக இருந்தது.
கர்நாடக அரசு ஏராளமானோரை சிறையில் அடைத்திருந்தது. அந்த அவசர நிலை காலத்தில் ‘சோஷலிஸ்ட்’ என்ற அடையாளம் கொண்டவர்கள் அரசுக்கு அபாய கரமானவர்கள். அந்த ‘அபாயகரமானவர்கள்’ பலரும் சிறையில் இருந்தார்கள்.
மைசூரில் நிகழ்ந்த சந்திப்பின்போது அனந்தமூர்த்தி என்னிடம் கைலாசம் பற்றிச் சொன்னார். கைலாசம் அயோவாவில் திரைப்படத் தொழில்நுட்பத் துறை தொடர்பாக பயிற்சி பெற்று வருவதாகவும், படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவுடன் என்னை வந்து சந்திப்பார் என்றும் அனந்தமூர்த்தி கூறினார்.
இதெல்லாம் முடிந்து சுமார் ஓராண்டு கழித்துத்தான் நான் கைலாசத்தைச் சந்தித்தேன். அந்த நேரத்தில் ஒலிப்பதிவு, மறு ஒலிப்பதிவு, படத்தொகுப்புக்கு பயன்படக்கூடிய மிக நவீன சாதனங்களை அவர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தார். புகழ்பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி மீது அவருக்கு அபார பக்தி. கணபதி ஸ்தபதி பற்றி சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய ஆவணப் படம் ஒன்றை கைலாசம் எடுத்தார்.
ஸ்தபதி விக்ரஹங்கள் செய்பவர் என்று மட்டுமே நான் அதுவரை தெரிந்து வைத்திருந்தேன். கைலாசத்தின் ஆவணப் படம் மூலம் அவர் சிற்ப சாஸ்திரத்துக்கு அடிப்படையாக வேத சாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்பது தெரிந்தது.
அவருடைய ஞானம் அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் கைலாசம் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஸ்தபதி அவர்களின் படிப்பும் பயிற்சியும் யாரையும் வியக்க வைக்கும். பல்லவர் காலத்திலும், பின்னர் சோழர் காலத்திலும் சிற்பக்கலை ஞானம் இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று தோன்றியது.
அந்தப் படத்துடன் கைலாசம் ஒரு விளம்பரப் படமும் எடுத்திருந்தார். அது பொதுமக்களுக்கு அல்ல; வங்கி ஊழியர்களுக்கு. அதில் நான் பார்வை பாதிக்கப்பட்ட வயோதிகனாக நடித்தேன். முதலில் படப்பிடிப்பு முடிந்தது.
அதன் பிறகு டப்பிங். இது சுமார் இரு வாரங்கள் கழித்து நடந்தது. அந்த நாளில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரும், விலை அதிகமான இதழ்களை ஒருவர் மட்டுமே படிக்கக் கூடிய விதத்தில் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அந்த அலுவலகத்துக்கு என்று ஒரு ‘ரீடிங் கிளப்’ இருக்கும். எல்லா இதழ்களையும் மொத்தமாக வாங்கி, தினம் ஒருவர் எடுத்துப் போய் பகிர்ந்து படிப்பார்கள்.
படத்தில் ஒரு அதிகாரி அந்த ரீடிங் கிளப்காரரிடம், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து வைப்பா’’ என்று கூறுவார். இது அவருக்கான ஐந்து வார்த்தை வசனம். டப்பிங் தினத்தன்று அந்த அதிகாரி உவகை தெரிய வந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவர் வேலை முடியவில்லை. ஐந்தே சொற்கள்.
அதை எப்படியெல்லாம் உளறிக் கொட்டலாமோ, அதெல்லாம் செய்துவிட்டார். அங்கே ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கில் பணம் போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதரால், ‘‘எனக்கு இண்டியா டுடே எடுத்து வைப்பா’’ என்பதைச் சரியாகச் சொல்ல முடிய வில்லை. அந்த மனிதருக்குக் குளிர் சாதன அறையிலும் தொப்பலாக வியர்த்தது. அன்று என் டப்பிங் முடியவில்லை.
என் டப்பிங் இல்லாமலே கைலாசம் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். அன்று ‘முந்தானை முடிச்சு’ அத்தனை தியேட்டர்களிலும் ஓடு ஓடென்று ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் இந்த அபார வெற்றிக்கு மூன்று காரணங்கள் சொன்னார்கள்.
அதில் ஒன்று, ஊர்வசி வசனம் பேசும் விதம். உண்மையில் அந்தப் படத்தில் ஊர்வசி பேசவில்லை. முழுக்க டப்பிங். அந்த டப்பிங் கலைஞர் பெயர் துர்கா. அந்தக் கலைஞர் அவ்வளவு எளிதாக வேலையை முடித்து விட்டார்! ஆனால், சாதாரண ஐந்து வார்த்தை வசனம், எவ்வளவு பாடு படுத்தியது அந்த வங்கி அதிகாரியை?
கைலாசத்தின் ஆவணப் படம் தேசிய விருது பெற்றது. அது தவிர அவர் வேறு பல படங்கள் எடுத்திருக்கிறார். எதிலும் அவர் கைநேர்த்தி தெரியும். அவர் இன்னொரு மகத்தான முயற்சிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.
அது கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவலை இருபத்தாறு பாகங்களாகத் தொலைக்காட்சித் தொடர் எடுப்பது. அதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த மத்திய அரசு யார் நிர்வாகத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாத நிலை. அப்போது தனியார் அலை வரிசைகள் வரவில்லை.
கல்கி எழுதிய சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதுமான அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர் ‘பொன்னியின் செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு விட்டார்கள்.
‘பார்த்திபன் கனவு’ நிறையப் பணச் செலவில் எடுக்கப்பட்டாலும், சிறப்பான நடிகர்கள் இருந்தாலும், திருப்தி அளிக்கவில்லை. அந்த நாவலின் உயிர் நாடியே சிவனடியார் யார் என்ற மர்மத்தில் இருந்தது. அது எழுத்தில் சாத்தியமாயிற்று. ஆனால் திரையில் அபத்தமாக இருந்தது.
‘சிவகாமியின் சபதம்’, சரித்திர நாவல்களில் ஓர் காவியத்துக்குரிய சோக அம்சம் கொண்டிருந்தது. இருபத்தாறு பாகங்கள் எது எது என்று நிர்ணயித்தாயிற்று. முதல் பாகத்தை அன்று விசேஷத் தொடர்களுக்குக் கட்டாயம் என்று நியமித்திருந்தபடி இந்தியில் மொழிபெயர்த்தாகி விட்டது.
தெற்கிலிருந்து ஒரு மகத்தான தொலைக் காட்சித் தொடர் வரும், வந்தே விடும் என்றிருந்த வேளையில் மீண்டும் மத்தியில் யார் தலைமை என்ற குழப்பம் வந்தது. ‘சிவகாமியின் சபதம்’ அச்சிலேயே மேலும் தொடரச் சபிக்கப்பட்டது.
ஆனால் கைலாசம் மனம் தளரவில்லை. தொடர்ந்து நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையை திட்டமிட்டு இந்தியாவிலேயே மிகச் சிறந்த அலைவரிசையாக உருவாக்குவதில் கடைசி ஆண்டுகள் உழைத்தார்.
அவர்களும் சினிமா சார்ந்த அலைவரிசைக்கு அடியெடுத்து வைத்தபோது அவர் விலகி விட்டார். காரணம், அவர்
சினிமாக்காரரே அல்ல. மகத்தான இலக்கு, மகத்தான அறிவு, மகத்தான பயிற்சி ஒரு சுதந்திர தினத்தன்று மறைந்து விட்டது.
(பாதை நீளும்...)கல்கி எழுதிய சரித்திர நாவல்களிலே ஒரு முழுமையும் வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதுமான அம்சத்தை ‘சிவகாமியின் சபத’த்தில் நன்கு உணர முடியும். பலர் ‘பொன்னி யின் செல்வன்’ மீது நிறையக் கவனம் செலுத்திக் கடைசியில் கைவிட்டு விட்டார்கள்.
படிக்க... கன்னட இலக்கிய உலகில் அனந்தமூர்த்திக்கும் எஸ்.எல்.பைரப்பாவுக்குமான மோதல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த ஒன்று. சமீபத்தில் மறையும் வரைகூட, ‘பைரப்பாவுக்கு நாவலே எழுதத் தெரியாது’ என்று விமர்சனம் செய்து வந்தார் அனந்தமூர்த்தி. அவருடைய கோஷ்டியினரும் நாற்பது ஆண்டுகளாக பைரப்பாவை தாக்கி வருகிறார்கள். அந்த பைரப்பாவின் சுயசரிதை ‘பிட்டி’ என்னிடம் வந்து சேர்ந்தது.
பைரப்பாவின் வாழ்க்கை எவரையும் உலுக்கி விடும். வாரச் சாப்பாடு உண்டு பள்ளியில் படிக்கும்போது பதினைந்து வயது முடிவதற்குள் டிக்கெட் இல்லாமல் பம்பாய் ஓடிப் போய், இரண்டாண்டுகள் சுமை கூலியாக உழைத்து, நடைபாதையில் படுத்துக் காலம் தள்ளினார். அதன் பின் மீண்டும் கர்நாடகா திரும்பிப் படிப்பைத் தொடர்ந்தார்.
‘பிட்டி’ என்றால் சுவர். அவருடைய இலக்கிய வாழ்க்கை விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘‘பைரப்பா இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்’’ என்று அர்விந்த் அடிகா கூறுகிறார். (பிட்டி(BHITTI), Prism Books Pvt. Ltd, 1865, 32nd Cross, 10th Main, BSK II Stage,Bangalore 560070; Ph: 08026714108,)
அசோகமித்திரன்