நிழல்களோடு பேசுவோம்






நீங்கள் மனிதர்கள்தானா?
என் வீட்டில் வளரும் ஒரு பூனை, குட்டிகளை ஈன்ற சில தினங்களில் காணாமல் போய்விட்டது. அதே சமயத்தில் குட்டி போட்ட இன்னொரு பூனை இந்தக் குட்டிகளையும் தன்னோடு அரவணைத்துக்கொண்டது. தன் குட்டிகளோடு சேர்த்து இவற்றிற்கும் பாலூட்டியது. நான் அந்தப் பூனையிடம், ‘‘இது உனக்கு எப்படி சாத்தியமானது’’ என்று கேட்டிருந்தால் அது சொல்லியிருக்கும்... ‘‘நான் என்ன மனிதப் பிறவியா, அவ்வளவு கேவலமாக நடந்துகொள்வதற்கு?’’ என்று.

சகவாழ்வு என்பது உண்மையில் ஒரு சமூக குணமல்ல. அது இயற்கையின் விதிகளில் ஒன்று. பிராணிகளும் பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் யாரும் சொல்லித் தராமலேயே இந்த இயற்கையின் விதியைப் பின்பற்றுகின்றன. அவற்றின் உலகில் அன்பைப் பற்றியும் கருணையைப் பற்றியும் மனிதர்கள் எழுதி வைத்திருப்பதுபோல போதனைகளோ கவிதைகளோ இல்லை. மனிதர்கள் எப்படி இயற்கையின் எல்லா விதிகளையும் அழித்தார்களோ, அதே போல இயல்பாக இருக்கவேண்டிய அன்புணர்ச்சியையும் அழித்து விட்டார்கள். அவர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் மிகக் கொடூரமாக வேட்டையாடுகிற ஒரு விலங்கைக்கூட அதிர்ச்சியடைய வைத்து விடும்.

ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் ரெய்கர் என்பவர் சென்றுகொண்டிருந்தார். சுரங்கச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சரக்கு வாகனம் அவர்களது வாகனம் மீது மோதியது. இதில் அவரது மனைவி குட்டி மற்றும் 6 மாத குழந்தை ஆருஷி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ரெய்கரும், அவரது மகன் தனிஷும் லேசான காயத்துடன் தப்பினர். இதனையடுத்து, தனது செல்போன் மூலம் உறவினர்களையும், போலீசாரையும் தொடர்பு கொள்ள முயன்றார் ரெய்கர். சிக்னல் கிடைக்காததால், அங்கு சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டார். போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில், ரெய்கரும் சிறுவன் தனிஷும் கதறினர். ஆனாலும் எந்த வாகனமும் நிற்கவில்லை. விலையுயர்ந்த சில கார்கள் கீழே கிடந்த பெண்ணை உரசிக்கொண்டு சென்றன. பாதசாரிகள் இவர்களைக் கண்டும் காணாதது போல சாலையைக் கடந்துகொண்டிருப்பதையும் காண முடிந்தது.

நகரின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது. விபத்து நிகழ்ந்ததை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த அதிகாரிகள், உடனடியாக முதலுதவி அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தால், ரெய்கரின் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றியிருக்கலாம்.
இது உண்மையில் ஒரு விபத்தல்ல. சமூக மனப்பான்மையினால் செய்யப்பட்ட கொலை. இந்தக் கொலையை நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் செய்துகொண்டேதான் இருக்கிறோம். யாருக்கும் யார்மீதும் எந்தப் பொறுப்பும் இல்லை. எந்த அடிப்படை தார்மீகக் கடமையும் இல்லை. கடலில் உயிருக்குப் போராடும் மனிதர்களுக்கு டால்பின்கள் உதவுவதாகப் படித்திருக்கிறேன். ஒரு மனிதன் ஆயிரக்கணக்கான மனிதர்கள் கடந்து செல்லும் சாலையில் கருணை வேண்டி கதறுகிறான். ஒரு குழந்தை தன் கைகளை உயர்த்தி இந்த உலகத்தின் குரூரத்திற்கு எதிராகக் கூக்குரலிடுகிறது. ஆனால் எந்தக் கண்களும் அவர்களைப் பார்க்கவில்லை; எந்த இதயமும் தங்கள் செயலுக்காக ஒரு கணம்கூட அவமானம் அடையவில்லை. இதேபோன்ற ஒரு சாலையில்தானே சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி கேமராக்கள் படம் பிடிக்க, நடுத்தெருவில் வைத்து ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டாள். இப்படித்தான் அதைப் பார்த்துக்கொண்டே வாகனங்களும் பாதசாரிகளும் கடந்து சென்றன! இவர்களுக்கெல்லாம் அப்படி அவசரமான வேலை என்னதான் இருக்கிறது?

பயம். பொறுப்பேற்றுக்கொள்ள பயம். தங்களைப் பிறருக்காக சிறிதும் அளிக்கத் தயாராக இல்லாத குரூரமான சுயநலம். இப்படி ஒரு குரூரமான சுயநல அமைப்பை உருவாக்கினால், அது தங்களையும் இதேபோலத்தான் வேட்டையாடும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

இதற்கு நிகராக மனம் கசங்கச் செய்யும் இன்னொரு சம்பவமும் சமீபத்தில் நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சேலத்திற்கு பிழைப்புத் தேடி வந்த சாமுவேல் என்பரின் மனைவி லட்சுமி. சரியாக வேலை இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் தெருவோரம் வசிக்கும் குடும்பம். கர்ப்பிணியான லட்சுமிக்கு பிரசவ வலி எடுத்தபோது, ஒரு மூதாட்டி மனமிரங்கி அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரம் கால்நடையாக நடத்தி அழைத்துச் சென்றார். 1000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பிரசவம் பார்க்க முடியும் என்கின்றனர் அங்கு. பணம் கொடுக்க முடியாததால் அந்தப் பெண் அங்கிருந்து விரட்டி அடிக்கப்படுகிறாள். வேறு வழியின்றி பேருந்து நிலைய கழிப்பறை வாசலில் வைத்து லட்சுமிக்கு பிரசவம் பார்க்கிறார் அந்த மூதாட்டி.

ஆயிரம் ரூபாய் இல்லாமல் போனதற்காக நீங்கள் கர்ப்பிணியை துரத்தினால், அவள் வழியே இந்த உலகத்திற்கு வரவேண்டிய ஒரு உயிர் வராமல் போய்விடுமா? நீங்கள் ஒரு மனிதன் இந்த உலகத்திற்கு வருவதற்கு நிர்ணயிக்கும் விலை இவ்வளவு அற்பமானதாக இருக்க வேண்டுமா? அரசு மருத்துவமனையின் கொடூரங்களை முன்வைத்து சுஜாதா ‘நகரம்’ என்ற புகழ்பெற்ற கதையை எழுதினார். அந்தக் கதையில் சொல்லப்பட்ட எதுவுமே இன்றும் மாறிவிடவில்லை. அவ்வப்போது இது போன்ற ஒரு சம்பவம் பரபரப்பான செய்தியாகும்போது, கண் துடைப்பிற்கு சில நடவடிக்கைகள். ஆனால் அதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.

லஞ்சம் என்பது ஒரு குரூரமான சாத்தானாக மாறிவிட்டது. அது எந்த நிலையிலும் மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கத் தயங்குவதே இல்லை. ஒரு சாதாரண நிலையில் கற்பனைகூட செய்ய முடியாத சம்பவங்களை லஞ்சத்தின் பெயரால் செய்வதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். லஞ்சப் பேர்வழிகள் கொள்கைகளில் தீவிரமானவர்கள். அவர்கள் எந்த நிலையிலும் தங்கள் வழிமுறையை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆத்மாநாம், ரெடிமேட் கார்மென்ட் ஒன்றில் நடக்கும் சம்பவத்தை வைத்து இந்தக் கவிதையை எழுதுகிறார். எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் இக்கவிதை, இப்போதும் பொருந்துகிறது...

அன்பு என்பதே
காண அரிதான உலகில்
கொடூரம் அளப்பரியதாக உளது
ஊசி ஏறிய அவள் கைவிரலில்
ரத்தம் கசிகிறது
துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது
மேலாளன் வருகிறான் அவன்
வணிகப் பேச்சோடு
சிகித்ஸைக்கு வேண்டிய அன்புகூடவா இல்லை
துணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன
மனிதன் நிர்வாணமாய்த் திரிகிறான்
நகரமெங்கும் அன்பைத் தேடி பயத்துடன்
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்


தற்போது தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர் யார்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
படத்தில் நடிப்பதைக் கேட்கிறீர்களா... அல்லது, பிரஸ்மீட்டில் நடிப்பதைக் கேட்கிறீர்களா?
இளம் வயதினர் அறிவுரை கூறினால் கேவலமாகப் பார்க்கிறார்களே?
- ரேவதிப் ப்ரியன், ஈரோடு.
கேவலமான அறிவுரைகள் கூறுவதை நிறுத்துவதுதான் இதற்கு ஒரே தீர்வு.
ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசிப் புகலிடம் எது?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
சிறைச்சாலைகளும் மனநோய் விடுதிகளும்.
வடநாட்டுத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறதா?
- நாசரேத் விஜய், கோவை.
இது இனவெறுப்பின் இன்னொரு வடிவம். தமிழர்களில் குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் என்ன சதவீதத்தில் இருக்கிறார்களோ, அதே அளவில்தான் வடமாநிலத்தவர்களிடமும் இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியினரால் முதல்வரைப் புகழாமல் சட்டசபையில் பேசவே முடியாதா?
- எம் சம்பத்,
வேலாயுதம்பாளையம்.
பேசலாம். ஆனால் அதற்குப்பிறகு வாழ்க்கையில் எப்பவுமே பேச முடியாமல் போய்விடலாம்.
உ.பி. அமைச்சர் ராஜாராம் பாண்டே, ஹேமமாலினி, மாதுரி தீட்சித் போன்றவர்களின் கன்னங்கள் போல வழுவழுப்பான சாலைகள் அமைத்துத் தருவேன் என்று சொன்னதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது பற்றி?
- அ.சுகுமாரன், காட்டுக்கானூர்.
வழுவழுப்பான சாலைகளில் விபத்துகள் சகஜம்.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email: editor@kungumam.co.in)

நெஞ்சில் நின்ற வரிகள்


‘‘நீங்கள் பாடும்போது அது கேட்பவர்களின் காதுகளை மட்டுமல்லாது உள்ளத்தையும் தொடுவதாக இருக்கவேண்டும்’’ என்று சொன்னவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் இடிக்கப்பட இருக்கும் செய்தி வந்த நாளில் அவரை ஷாஜியின் நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். அது குறித்து மனக்கொந்தளிப்புடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது சொந்த வீட்டை யாரோ பிடுங்கிக்கொண்டுவிட்டது போன்ற துக்கம் அவர் முகத்தில் மேலிட்டது.

எந்த மிகையுணர்ச்சியும் நாடகத் தன்மையும் அற்ற குரலில் ஒரு ஆழமான நதியைப்போல பரவும் இசை அவருடையது. அவரது இறப்புச் செய்தி வந்த நாளில், என் வாழ்க்கையில் எத்தனையோ முறை கேட்ட இந்தப் பாடல் வரிகளை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
வசந்தம் உயிர்ப்பின் காலம். ஓவியம் வண்ணங்களின் கலவை. மார்கழி குளுமையின் ரகசியக் கதகதப்பு. மல்லிகை மோகத்தின் மலர். இவை யாவும் சேர்ந்த ஒரு பெண்ணின் சித்திரத்தை பி.பி.எஸ் நம் மனதில் உயிர்த்தெழ வைக்கிறார். எவ்வளவு கேட்டாலும் தேயாத வரிகள். எவ்வளவு நினைத்தாலும் சலிக்காத சித்திரம்.