கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் இருக்கு! சேரன்





‘‘எப்படி இருக்கீங்க?’’ - கண்களால் சிரிக்கிறார் சேரன். சந்திக்கும்போதெல்லாம் மனசைப் பிடிக்கிற மனிதர். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை இயக்குகிறார். ‘‘எனக்கு இன்னும் சினிமா தீராத கனவுதாங்க. வாழ்க்கையை இன்னும் அர்த்தப்படுத்துவதற்கு எனக்கு சினிமாதான் ஆதாரம். ‘பொக்கிஷ’த்துக்குப் பிறகு கொஞ்சம் நடிச்சுக்கிட்டு இருந்தேன். கூடின கடன் சுமையால நாலா பக்கமும் ஓடி திரவியம் தேட வேண்டியிருந்தது. காசு சம்பாதிக்கறது மட்டுமே வெற்றி ஆகிடாது; ஆனால் ஒரு கட்டத்தில் காசு தேவையா இருந்தது. ‘மாயக்கண்ணாடி’யும் ‘பொக்கிஷ’மும் என்னை பணத்தேவையில் ஆழ்த்திய பிறகு திரும்பிப் பார்த்தேன். நல்லா நின்னு யோசிச்சப்ப மனசிற்குள் வந்த ஸ்கிரிப்ட். இந்த வாழ்க்கையை இன்னும் இளைஞர்களுக்கு அழகாக் காட்டணும்னு செய்த படம்தான் இது’’ - தீர்மானமாகப் பேசுகிறார் சேரன்.

‘‘இத்தனை நாள் இடைவெளி ஏன்?’’
‘‘சினிமா வேற மாதிரி மாறிவிட்டது. எப்பவும் நம்மளை புதுப்பிச்சுக்கிட்டு இருந்தால்தான் ஜெயிக்க முடியும்ங்கிற காலம் வந்தாச்சு. நம்மில் நிறைய பேரு திறமையை முழுவீச்சில் பயன்படுத்திக்கறதில்லை. ஓரளவு நம்மை வெளிப்படுத்திக்கிட்டு வாழ்க்கையை முடிச்சுக்கறோம். நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன்னு திரியும்போது எல்லாத்துக்கும் நமக்கு இடம், நேரம் இருக்குன்னு புரிஞ்சது. ஒவ்வொரு இளைஞனுக்கும் 20 வயசில எதுவும் சொன்னா ஏறாது. ஆனா, முப்பது வயதுக்குப் பின்னாடி எல்லாம் புரியும். என்ன தப்பு பண்ணினோம்னு யோசிச்சுப் பார்த்து, நம்மை நிலைநிறுத்திக்கிற இடம் ஒண்ணு வரும். அந்த இடத்தை சொல்லியிருக்கேன். வேற ஒரு இடத்துக்கு வந்திருக்கோம்னு என்னையே நினைக்க வைக்கிற லெவல்ல வந்திருக்கு இந்தப் படம்.’’



‘‘ஏன் நீங்க நடிக்கலை?’’
‘‘நான் இதுல நடிச்சா, முரளி சார் கையில ரோஜாவைக் கொடுத்து காதல் சொல்லச் சொன்னது மாதிரி ஆயிடும். நிறையப் ஹீரோக்களைக் கேட்டால், அடுத்த வருஷம் வரைக்கும் காலண்டரைக் கிழிச்சு வச்சிருந்தாங்க. அப்புறம்தான் ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த் நினைவுக்கு வந்தார். அருமையான, களையான முகம். யாருக்கும் பிடிக்கும். மனசில நினைச்ச கேரக்டருக்கு ‘நச்’னு பொருந்தி வந்த முகம். ‘சுடச்சுட’ன்னு மாறுகிற முகபாவனைகளில் என்னை ஆச்சரியப்பட வைத்தார். இவ்வளவு இளைஞராய் இருந்து விட்டு, இவ்வளவு அடர்த்தியாக நடிக்கிறது ஆச்சரியம். இந்தப் படத்திற்கு நித்யா மேனனும் பெரிய ப்ளஸ். பெரிய கண்ணை வச்சுக்கிட்டு, ஜாலம் பண்றாங்க. இப்படியான முக பாவங்கள் மட்டும்தான் சாத்தியம்னு இருக்குறப்ப, அதுக்கும் மேல அந்தப் பொண்ணு தாண்டிப் போகுது. நடிக்கிறதில் ராட்சசி மாதிரி இருக்கு நித்யா. அவங்க ரெண்டு பேரும்தான் இந்தப் படத்துக்கு அழகு!’’

‘‘உங்க யூனிட் மொத்தமும் மாறிடுச்சு..?’’
‘‘ஆமா. மியூசிக் ஜி.வி.பிரகாஷ், கேமராவுக்கு சித்தார்த், பாடலுக்கு கார்க்கி வைரமுத்துன்னு மாற்றியிருக்கேன். கிராமத்து சென்டிமென்ட் தெரியும், மெஸேஜ் சொல்றதில் தீவிரமா இருப்பார்னு நம்மை நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இதில் அதை விட்டு விலகியிருக்கேன். ஜி.வி.பிரகாஷின் ‘பிறை தேடும் இரவிலே’ பாடல் கேட்டுட்டு ராத்திரி தூங்க முடியலை. மனதைப் பிசைந்த பாட்டு. ஏதேதோ நினைவுகளில் அழ வச்சுது. அவரோட வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அது இதில் நடந்திருக்கு. பொதுவா என் படத்தின் எண்ணத்தை பாடல்களில் ஏற்றிவிடத் துடிப்பேன். அதைப் புரிந்து கொண்டார் பிரகாஷ். நாலே பாட்டு. மனசை அள்ளிப் போட்டு வேற ஒரு அமைதியில் கொண்டு போய் வைக்கும்.’’



‘‘உங்க படத்திலும் சந்தானம்... ஆச்சரியம் தாங்க முடியலை?’’
‘‘அருமையான மனுஷன் சார். நான் எத்தனையோ ஆர்ட்டிஸ்ட் பார்த்துட்டேன். சந்தானம் இவ்வளவு மேலே போனதற்குக் காரணம் அவருடைய குணம். நாம் நடிச்சா படம் விக்குது, நமக்கு இவ்வளவு புகழ் இருக்கு, எல்லா ஹீரோக்களும் தேடுறாங்க... இப்படி எதையும் தலையில ஏத்திக்காத அருமையான மனுஷன். ‘சார், உங்க போன் வந்தப்போ தூங்கிட்டு இருந்தேன். எங்க அம்மா போனை எடுத்து யாருன்னு கேட்டிருக்கு. நீங்க சேரன்னு சொன்னதும் என்னை எழுப்பி, ‘தம்பி, ‘தவமாய் தவமிருந்து’ எடுத்த சேரன் தம்பி கூப்பிட்டிருக்கார். பேசு. அவர் படத்துல நடிடான்னு சொன்னது’ன்னு சொன்னார். அந்தத் தாய் வாழ்க.

இதில் பிரகாஷ்ராஜ் நடிச்சிருக்கார். ‘நடிப்பாரா... பெரிய ஆர்ட்டிஸ்ட்’னு போன் பண்ணினா, ‘எப்ப வரணும்... எங்கே ஷூட்டிங்’னு அவரே பிளைட் டிக்கெட் போட்டு நடிச்சிக் கொடுத்திட்டுப் போறார்.’’
‘‘ராஜீவ் மேனன் 13 லட்சம் பாக்கின்னு உங்களை கோர்ட்டுக்கு இழுத்தாரே... என்ன ஆச்சு?’’

‘‘ஆமா, என்னோட ஏழு படங்கள் அவர் கம்பெனி கேமரா யூனிட்தான் வேலை செய்திருக்கு. 13 லட்சம் பாக்கி வச்சிருந்தேன். பாதுகாப்பா செக் கொடுத்திருந்தேன். ‘மாயக்கண்ணாடி’, ‘பொக்கிஷம்’னு கையை சுட்டுக்கிட்டேன். அடுத்த படம் பண்ணும்போது அவங்களை பயன்படுத்திக்கலாம்னு பார்த்தா, கோர்ட்டுக்கு இழுத்துட்டாங்க. பணம் கட்டிட்டு வெளியே வந்தேன். என்னால் ரெண்டு கோடிக்கு மேல் சம்பாதிச்சவங்க தான் அவங்க. மூன்று தேசிய விருது, 5 பிலிம்ஃபேர் விருது, நாலு மாநில விருது, சமூக உணர்வுப் பாடங்கள்னு தந்தாலும், சிலருக்கு பணம்தான் முக்கியமா படுது. வாழ்க்கையில கத்துக்க வேண்டிய பாடங்கள் இன்னும் இருக்கு போல. இப்பல்லாம் யாரும் உன்னதம், கலைஞன்னு சொல்லிக்கிட்டு வந்தா கால்ல விழுந்து கும்பிட்டு அவங்களை வழியனுப்பி வைக்கிறேன்.’’
- நா.கதிர்வேலன்