குக்கர் குண்டு... பைக் குண்டு!





‘‘குக்கர்ல பருப்பு வேக வைப்பா... பாம் வைப்பாளோ?’’ என ‘உதயகீதம்’ பட உசிலைமணி இப்போது கேட்டால், ‘‘வச்சுட்டாளே!’’ என கவுண்டமணி சொல்லியிருப்பார். பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகம் அருகே ஒரு பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்த அதே வேளையில் அமெரிக்காவில் அந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. பாஸ்டன் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகளுக்குக் காரணம், ‘குக்கர் குண்டு’கள் என்பதே அந்தத் தகவல்!

உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகழும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு, பாஸ்டன் சம்பவம். உளவு வேலையையும் கண்காணிப்பையும் தீவிரமாக்கி, இடையில் தடுத்த பயங்கரங்கள் எத்தனையோ! அத்தனை கண்காணிப்பையும் மீறி, மாரத்தான் போட்டி நடக்கும் நேரத்தில், போட்டி நிறைவுறும் எல்லைக் கோட்டுக்கு மிக அருகே இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது. தோளில் மாட்டிச் செல்லும் கறுப்புநிற பைக்குள் குக்கர் குண்டுகளை வைத்து, சாலையோர பிளாட்பார்மில் அந்தப் பைகளை வைத்து வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு பயங்கரத்தை அல்-கொய்தாவோ, ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளோதான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. காரணம், குக்கர் குண்டுகளை அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அங்கு குக்கர் வாங்குவதுதான் கஷ்டமே தவிர, குண்டு செய்வது அப்படி ஒன்றும் கஷ்டமில்லை.

அமெரிக்காவில் கலாசார கலக இயக்கம் தோன்றிய 1971ம் ஆண்டில் 'கிஸீணீக்ஷீநீலீவீst's சிஷீஷீளீ ஙிஷீஷீளீ'   என்ற புத்தகம் வெளிவந்தது. குக்கர் குண்டு எப்படிச் செய்வது என்ற ரெசிபி இதில் இருக்கிறது. இந்தப் புத்தகம் இப்போதும் அங்கு விற்கிறது. இதைப் படித்துவிட்டு 1976ம் ஆண்டு நியூயார்க் ரயில்வே ஸ்டேஷனில் ஒருவர் குண்டு வைத்தார். அது வெடித்து பெரும் சேதம் நிகழ்ந்தபோதும், அந்தப் புத்தகம் தடை செய்யப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாத முகாம்களில், புதிதாகச் சேரும் தீவிரவாதிகளுக்கு என்னென்ன பயிற்சி தருவது என விலாவாரியான சிலபஸ் உண்டு. அதில் ‘குக்கர் குண்டு’ செய்வதும் ஒரு பாடம். ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் குக்கர் குண்டு அடிக்கடி வெடிக்கும். எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகள் கடந்த 2006ம் ஆண்டு மும்பை ரயில்களில் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 176 உயிர்களைப் பறித்த எமன், குக்கர் குண்டுதான்!

குக்கரை சமைக்கப் பயன்படுத்தும் இந்த மண்ணில்தான் அதை குண்டு வைக்கவும் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக சின்ன சைஸில் இருக்கும் 6 லிட்டர் குக்கர்தான் தீவிரவாதிகளின் நம்பிக்கைக்கு உரியது. இதில் வெடிப்பொருட்களோடு இரும்பு ஆணிகள், சின்ன சைஸ் பால்ரஸ் குண்டுகள் என எல்லாவற்றையும் கொட்டி, டைமர் பொருத்தி, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்கிறார்கள். வெடிக்கும்போது ஆணிகளும் இரும்பு குண்டுகளும் சிதறி, கூட்டத்தில் இருக்கும் அப்பாவிகளை சிதைக்கிறது.

விலை மலிவானது... எந்த சந்தேகத்தையும் எழுப்பாதது... அதிக சேதம் விளைவிக்கக் கூடியது என குக்கர் குண்டு மிக ஆபத்தான பயங்கரமாக கருதப்படுவதற்குக் காரணங்கள் நிறைய! கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், அல்-கொய்தா அமைப்பு தனது ஆங்கில வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ‘உங்கள் அம்மாவின் சமையலறையில் ஒரு வெடிகுண்டு செய்வது எப்படி?’ என்ற அந்தக் கட்டுரையை இதுவரை 5 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்களாம். அத்தனை பேரையும் இப்போது அலசி வருகிறது அமெரிக்க உளவுத்துறை.

சில நாட்களுக்கு முன்புதான் அந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது... ‘பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அமெரிக்க ஆளில்லா உளவு விமானங்கள் தாக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கும் முகாம்களைத் தாக்கக் கூடாது’ என இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்ட தகவல் அது.

பாஸ்டன் குண்டுவெடிப்பும் பெங்களூரு குண்டுவெடிப்பும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் பெங்களூரு பயங்கரத்தை தடுக்க அமெரிக்கா முனைந்திருந்தால், பாஸ்டன் கோரம் நிகழ்ந்திருக்காது!
- அகஸ்டஸ்