தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்





போகிற போக்கைப் பார்த்தால், ‘அமெரிக்கப் பொருளாதாரம் மென்மேலும் வளரணும்’ என்று நம்மூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் போலிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் சவரன் இருபத்தையாயிரத்துக்கு விற்ற தங்கத்தின் விலை இன்று பத்தொன்பதாயிரம். இன்னும் கூட குறையலாம் என்கிறார்கள். இதற்கெல்லாம் அமெரிக்கப் பொருளாதாரம் உயர்ந்ததே காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அடுத்த மாதம் வரப் போகும் அட்சய திருதியைக்கு இப்போதே புக்கிங் தொடங்கி விட்டன இங்குள்ள நகைக்கடைகள். ஆனாலும், ‘இன்னும் இறங்குமா சார்?’ என்று ஏங்கி - குழம்பி - தயங்கி நிற்கிறார்கள் வாடிக்கையாளர்கள். அவர்கள் சார்பில் விசாரிக்கக் கிளம்பினோம் நாம்...

‘‘அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் கண்டப்ப, டாலர்ல முதலீடு செய்தவங்க அதை அம்போனு விட்டுட்டு, தங்கத்துல முதலீடு பண்ணுனாங்க. அதனால தங்க விலை ஜெட் வேகத்துல போச்சு. சில பல நடவடிக்கைகள் மூலமா அமெரிக்கா அதுல இருந்து மீள, பொருளாதார சிக்கல் ஐரோப்பா பக்கம் நகர்ந்திருக்கு. அங்க உள்ள சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின்... இப்படி நிறைய நாடுகள்ல இப்ப பொருளாதார நெருக்கடி. இந்த நாடுகள் ஐரோப்பிய யூனியன்ல போய் நிதியுதவி கேட்க, கையிருப்பில் இருக்கற தங்கத்தை வித்து பிரச்னையைச் சரி பண்ண ஆலோசனை வழங்கியிருக்கு யூனியன். சைப்ரஸ் விற்கத் தொடங்கிடுச்சு. அதுதான் விலை குறைவுக்குக் காரணம். மத்த நாடுகள் எந்நேரமும் விற்க முன்வரலாம். அதனால தங்கம் விலை அடுத்த சில நாட்கள்ல இன்னும் குறைய வாய்ப்பிருக்கு’’ என்கிறார் முதலீட்டு ஆலோசகர் நாகப்பன்.

‘‘இன்னும் குறையும்னா, சவரனுக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை குறையலாம். அதுவும் கூட இன்னும் 15 நாள் வரைதான். அதுக்கு மேல் திரும்பவும் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பிருக்கு. திரும்ப பழைய விலைக்கு உடனே வந்துடாதுன்னாலும், 10 சதவீதமாவது விலை ஏறலாம். அதுக்காக விலை குறையும்போதே கடைகள்ல அலைமோதி அதை வாங்கிக் குவிக்கணும்னு அவசியம் இல்ல. எப்பவுமே தங்கத்தின் மீதான முதலீடு லாபகரமா இருக்கும்னு சொல்ல முடியாது. கல்யாணம், சடங்குன்னு தேவை இருக்கறவங்க இந்த நேரத்தைப் பயன்படுத்தி வாங்கிக்கலாம்’’ என்கிறார் அவர். ‘‘அட்சய திருதியை விற்பனைக்காக ஆவலோடு காத்திருந்த நகைக்கடைகள் இந்த விலை வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை’’ என்கிறார் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயந்திலால் சலானி.

‘‘அட்சய திருதியைக்காகவே ஸ்பெஷல் வெரைட்டிகள் வந்து குவிஞ்ச நேரமாப் பாத்து, எதிர்பாராத விதமா விலை சரிய ஆரம்பிச்சிருக்கு. காலை, மதியம், இரவுன்னு மூணு வேளையும் மாறிட்டே இருக்கிற தங்கத்தோட விலை இன்னும் கூட குறையலாம்கிறாங்க. அதனாலதான் அட்சய திருதியைக்கு இப்பவே அட்வான்ஸ் புக்கிங்கை ஆரம்பிச்சாச்சு. ஆனாலும் ‘அன்னிக்கே வாங்கிக்கலாம்’னு வெயிட் பண்றவங்களையும் பார்க்க முடியுது. தங்கத்தைப் பொறுத்தவரைக்கும் வாங்குறவங்களோ விக்கிறவங்களோ விலையை நிர்ணயிக்க முடியாது. இதோட லகான் சர்வதேச சந்தையில இருக்கு. எப்படி இருந்தாலும், ஒரு கிராம் 2000 ரூபாய்க்குக் குறைய வாய்ப்பில்லை. தங்கச் சுரங்கங்கள்ல ஒரு கிராமோட உற்பத்தி விலை அதுதான்’’ என்கிறார் சலானி.



பொதுவாக விலை ஏறிக்கொண்டே செல்வதுதான் தங்கத்தின் கிராஃப். இதற்குமுன்பு கடந்த 93ம் ஆண்டில் ஒருமுறை இறங்கியது. அப்போதுகூட இப்படியான வீழ்ச்சி இல்லை. கடந்த 13 ஆண்டுகளாக தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த விலை, இப்போது அதே வேகத்தில் குறைந்து கொண்டிருக்கிறது. தங்கள் தேசங்களில் பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் மத்திய வங்கிகள் பில்லியன் கணக்கில் டாலரை புழக்கத்தில் விட்டன. இதனால் அரசு பத்திரங்கள் மதிப்பிழந்து, முதலீட்டுக்காக தங்கம், வெள்ளி என நகர்ந்தார்கள் மக்கள். இப்போது அரசுகள் பணப்புழக்கத்தை இறுக்கவே, அரசு பத்திரங்கள் மீண்டும் செல்வாக்கு பெற்றிருக்கின்றன. எல்லோரும் தங்கத்திலிருந்து விலகி அந்தப்பக்கம் ஓடுகிறார்கள்.

இன்னொருபக்கம் விலை உயர்வும், அதிகரித்திருக்கும் வரியும் இந்தியா மற்றும் சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் தங்க நகை விற்பனையை டல் அடிக்கச் செய்தது. ‘தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் தராதோ’ என்ற பீதியை பலருக்கு இது ஏற்படுத்தியது. மஞ்சள் பிசாசை மங்கச் செய்த காரணங்கள் இவை!         

சென்னை நகைக்கடை ஒன்றில் மும்முரமாக பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்த மதுபாலாவிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘வியாபாரம், மார்க்கெட், முதலீடுன்னு என்னவும் சொல்லிட்டுப் போங்க. அதை வாங்கி கழுத்துலயும் கையிலயும் போட்டுட்டு நடக்கிறப்ப, ஒரு பெருமிதம் வருது பாருங்க... அது போதாதா’’ என்கிறார். விலை இறங்க ஆரம்பித்த முதல் நான்கு நாட்களில் மட்டும் சென்னையில் 2000 கிலோ தங்கம் விற்பனையாகி இருக்கிறதாம்.

‘‘இன்னும் இறங்கட்டும் என காத்திருப்பதைவிட, வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது புத்திசாலித்தனம். விலை ஏறினாலும், இறங்கினாலும் பெருமூச்சு விடாமல் இருக்கலாம்’’ என அட்வைஸ் தருகிறார்கள் நிபுணர்கள்.
- அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சந்திரசேகர்