டிபனுக்கு முன் அல்வா!





திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் மின்துறையில் வேலை பார்ப்பது அசத்தல் ஆச்சரியம். கரன்ட் பில்லில் சலுகை கூட இல்லை என்ற இவர்களின் ஆதங்கம் நியாயமானது. இல்லாத கரன்ட்டுக்கு என்ன பில் வந்திடப் போகுது... கொடுங்க சார்!
- ஏ.சுகுமார், காட்பாடி; மு.சுயம்புலிங்கம், சென்னை-63.

ஷீரடி பாபாவின் புனித சரிதம் பெரிதும் எங்களை ஆகர்ஷிக்கிறது. புத்தகம் வீட்டிற்கு வந்தவுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு படிக்கத் துவங்குகிறோம்.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

இந்த வருட ஐ.பி.எல் அழகிகளைப் பற்றி ஃபுல் பயோடேட்டா கொடுத்ததற்கு நன்றி! ஆட்டம் தொடங்குவதற்கு முன் இவர்கள் பேசுவது டிபனுக்கு முன் வைக்கும் அல்வா போல!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘காதலோ... கல்யாணமோ... மனசுக்கு சந்தோஷத்தையும் வாழ்க்கைக்கு பாதுகாப்பையும் கொடுக்கணும்! இந்த இரண்டையும் தராதது காதலும் இல்ல, கல்யாணமும் இல்ல!’ - இது ‘லவ் ஸ்டோரி’ படத்தில் வரப்போகும் வசனமா? இல்லை நயன்தாராவின் ‘லவ் ஸ்டோரி’யில் வந்த வசனமா? டைரக்டருக்கே வெளிச்சம்!
- பேச்சியம்மாள் மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

‘சிங்கம்-2’ பற்றி இயக்குநர் ஹரி கொடுத்திருந்த பேட்டியே சென்டிமென்ட், ஆக்ஷன், மசாலா எல்லாம் கலந்த அஞ்சறைப் பெட்டியாக இருந்தது. அறுசுவை உணவுக்காகக் காத்திருக்கிறோம்!
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்; ஆர்.பிருந்தா, பெங்களூரு.

பிரமாண்ட கடலுக்குள் இறங்கி மீன் பிடிக்கும் பெண்கள் உண்மையான ‘தைரிய லட்சுமிகள்’தான். அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்க நினைப்பவர்கள் மனிதர்கள்தானா?
- அ.இராஜப்பன், கருத்தம்பட்டி; ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்-1.

குழந்தையின்மைக்கு பெண்தான் காரணம் என்ற அறியாமையால் நம் ஊர் பெண்கள் ‘30 வயதில் மெனோபாஸ்’ நிலைக்குத் தள்ளப்படும் செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அறியாமையே கொடுமையான நோய் என்பது உண்மைதான்!
- எம்.பர்வீன்பாத்திமா, சென்னை-91.

இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் காரணம், ஒரு வேளை உயிர் பிழைத்தால் அமைதியாக வாழலாம் என்ற ஆசையில்தான். நம் கண் முன் நமது இனம் இப்படி அல்லல்படுவதைப் பார்க்க இதயம் கனக்கிறது!
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

‘மனுஷ்யபுத்திரனின் பதில்கள்’ செம ஹாட்! வளர்ப்பு மகன் திருமணத்தில் ஜெ. ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்று கூறியது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் நல்ல சாட்டயர்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வரும் வேலை’ தொடர், நம்பிக்கையூட்டும் நல்வழிகாட்டும் அனுபவ அறிவுத் தொடர். வேலையில் இருப்பவர்களையும் வேலைக்குச் செல்ல இருப்பவர்களையும் வீறுநடை போட வைக்கும் வெற்றித் தொடர்.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.