ஸ்பேர் பார்ட்ஸ்!





உலகின் மிகக் கேவலமான திருட்டு அது; மிக வன்மமான வியாபாரமும் அதுதான். வாழ்க்கையின் புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் ஏழைகள், அதிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையில் விற்கும் மிகப்பெரிய சொத்தும் அதுதான். ஆம், தங்கள் சிறுநீரகத்தை விற்றுவிட்டு அடிவயிற்றில் தழும்போடும் மனதில் வலியோடும் எஞ்சிய நாட்களை நகர்த்துகிறார்கள்.

எதிர்காலத்தில் இந்தத் திருட்டோ, வியாபாரமோ நடக்காது என நம்பிக்கை தந்திருக்கிறது அந்தக் கண்டுபிடிப்பு. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஓட் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள், செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

ஒரு எலியின் சிறுநீரகத்திலிருந்து ஒற்றை செல்லை எடுத்து, அதை ஆய்வுக்கூடச் சூழலில் வளர விட்டு, முழுமையான சிறுநீரகத்தை உருவாக்கினார்கள். இதை எலிகளுக்குப் பொருத்தியும் பார்த்தனர். கழிவுகளை அகற்றி, சிறுநீரைப் பிரித்து, இயல்பான சிறுநீரகத்தின் வேலையைக் கச்சிதமாகச் செய்தது. அடுத்து மனிதர்களுக்கு இப்படி உருவாக்கி பரிசோதிக்க வேண்டியதுதான் பாக்கி!
அநேகமாக இன்னும் ஐந்து ஆண்டுகளில் செயற்கை சிறுநீரகம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிடும்!
- அகஸ்டஸ்