உறவுகளைத் தேட ஒரு படம்!





‘‘சுண்டு விரல்ல சின்ன கீறல் விழுந்தா கூட பலத்த காயம்னு பப்ளிசிட்டி பண்ணிக்கிற ஹீரோக்கள் இருக்காங்க. ஷூட்டிங் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சண்டைக் காட்சியில் நடிச்சப்போ என் தோள்பட்டை கீழ இறங்கிடுச்சு. அதையெல்லாம் தாங்கிட்டு ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தில உயிரைக் கொடுத்து நடிச்சேன். ஏன்னா, எனக்கு இப்ப பெரிய வெற்றி தேவை!’’ - வலி மறந்து பேசும் தருண்கோபியின் வார்த்தைகளில் நம்பிக்கை நெருப்பு.

‘‘படம் ஆக்ஷனோ..?’’
‘‘இல்லீங்க. சின்ன விசேஷம்னாகூட மாமன், மச்சான், பங்காளின்னு ஒண்ணா கூடி கொண்டாட்டத்தை அனுபவிச்ச கிராமத்து உறவுகளில் இன்னிக்கு இடைவெளி ஏற்பட்டுருச்சு. இந்த இடைவெளியை அகற்றி, தொலைந்துபோன உறவுகளைத் தேட வைக்கும் படம்தான் இது.
பேச்சியக்கா கேரக்டரில் கலக்கி எடுத்திருக்கிறார் ஊர்வசி. எவ்வளவோ கேரக்டரில் நடிச்சவங்க, எத்தனையோ விருதுகளை வாங்கினவங்க. ‘இந்தப் படம் நிம்மதியும், திருப்தியும் கொடுத்திருக்கு’ன்னு இப்பவும் சொல்லிட்டு இருக்காங்க. எனக்கு ஜோடி பிரியங்கா. திரைக்கதை, வசனம் எழுதி பாலகுமார் இயக்கியிருக்கார்.’’

‘‘ஊர்வசி உங்களுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களாமே?’’
‘‘நிஜம்தான். உங்களை மாதிரியே மாமியார் எனக்கு அமையணும்னு ஷூட்டிங் ஸ்பாட்லயே சொல்வேன். அவங்களும் என்னை ‘மருமகனே’ன்னுதான் கூப்பிடுவாங்க. ‘எனக்கொரு பொண்ணு இருந்தா உனக்கே கட்டி வச்சிடுவேன்’னு கேமராவுக்கு பின்னாடியும் பாசம் காட்டுவாங்க. ‘உங்க மனசு மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க அத்தை... கட்டிக்கிறேன்’னு நானும் சொல்லி வச்சிருக்கேன்.’’
‘‘வரிசையா ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘பேச்சியக்கா மருமகன்’னு நடிக்கிறீங்க... கிராமத்து நாயகனா மாறப் பார்க்கறீங்க போல..?’’
‘‘அதுவா அமைஞ்சது இது. என் இயக்கத்துல ‘திமிரு’ படம் ஹிட்டாகியும் என்னை யாரும் திரும்பிப் பார்க்கல. ‘காளை’ படம் ஓரளவு போனாலும் யாரும் கண்டுக்கல. ‘மாயண்டி குடும்பத்தார்ல நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு பாராட்டு வந்தாலும், வாய்ப்போ, பெரிய அங்கீகாரமோ கிடைக்கல. இந்தக் குறைகள் எல்லாத்தையும் இந்தப் படம் உடைக்கும். படம் சூப்பர் ஹிட் ஆகலைன்னா சினிமாவை விட்டே போயிடறேன். இப்படிச் சொல்ற தைரியத்தை ‘பேச்சியக்கா மருமகன்’ கொடுத்திருக்கு. இந்தப் பட ரிலீசுக்குப் பின்னாடி என் வீட்டிலும் பத்து தயாரிப்பாளர்களோட கார் நிற்கும். என் கால்ஷீட்டுக்காக காத்திருப்பாங்க. இது சத்தியம்!’’
- அமலன்