செயற்கை பூக்களில் செம லாபம்





ரோஜா, மல்லி, சாமந்தி, சூரியகாந்தி, செம்பருத்தி என பூக்களால் நிரம்பியிருக்கிறது சென்னை, நடுக்குப்பத்தைச் சேர்ந்த சுமதியின் வீடு. தொட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது அத்தனையும் செயற்கைப் பூக்கள் என்று! சுமதி செய்கிற பூக்களில் அத்தனை நேர்த்தி. விதம்விதமாக பூக்கள் மட்டுமல்ல, பூமாலைகள், தோரணங்கள் செய்வதிலும் நிபுணி அவர்.

‘‘முன்னல்லாம் ஒரு சில மாடல்களை மட்டும்தான் நிஜப்பூக்கள் எஃபெக்ட்டுல பண்ண முடியும். மத்ததெல்லாம் செயற்கைன்னு பார்த்த உடனே காட்டிக் கொடுத்துடும். ஆனா இப்ப கிடைக்கிற மெட்டீரியல்களை வச்சு, இயற்கையா கிடைக்கிற எந்தப் பூவையும், அச்சு அசலா செயற்கையா பண்ண முடியும். சொன்னாதான் ‘இது டூப்ளிகேட்’னு தெரியும். பிளாஸ்டிக், வெல்வெட், பேப்பர், ஆர்கண்டி, சாக்ஸ் துணின்னு எந்த மெட்டீரியல்ல வேணாலும் செயற்கைப் பூக்கள் பண்ண முடியும்ங்கிறது தான் இதுல சிறப்பான விஷயம். வெறுமனே தனித்தனி பூக்களாகவும் செய்து, பூங்கொத்து மாதிரி அழகுக்காக வைக்கலாம். அதையே மாலையா கட்டி, சாமிபடங்களுக்கும் போடலாம். தோரணமா செய்து வாசலையும் அழகுபடுத்தலாம்’’ என்கிற சுமதி, இவற்றைச் செய்வதும் மிகச் சுலபம் என்கிறார்.
‘‘சில வகையான பூக்கள் கிலோ கணக்குல பாக்கெட்ல போட்டுக் கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து, பிரிச்சு, நமக்குத் தேவையான மாடல்ல, எண்ணிக்கை கணக்குல மாலையா கட்டணும். பூ பண்றதுக்கான மெட்டீரியல் தவிர, மணிகள், டியூப், ஸ்ட்ரா, நூல், மகரந்தம், உல்லன் நூல், கம்பி, பச்சை கலர் டேப்... இப்படி மொத்த பொருட்களுக்கும் சேர்த்து 500 ரூபாய் செலவழிச்சா போதும். ஒரு கிலோ பூ பாக்கெட்ல, 3 பெரிய மாலை பண்ணலாம். சம்பங்கி மாலை, கதம்ப மாலை, கலர்ஃபுல் மாலை, சாமந்தி மாலைன்னு நிறைய மாடல்கள் இருக்கு. பெரிய மாலையை 3 நாள்ல முடிக்கலாம். சின்ன மாலைன்னா ஒரு நாளைக்கு ஒண்ணும், தோரணம்னா ரெண்டும் செய்யலாம். ஒற்றைப் பூக்களா வித்தாலே லாபம்தான். ஒரு பூவை 10 - 15 ரூபாய்க்குக் கொடுக்கலாம்.
ஃபேன்சி ஸ்டோர், பூஜை சாமான்கள் விற்கற கடைகள், கண்ணாடி ஃபிரேம் போடற கடைகள்ல விற்பனைக்கு வைக்கலாம். இந்த செயற்கைப் பூக்களையும், மாலைகளையும் எத்தனை முறை வேணாலும் கழுவி, காய வச்சு உபயோகிக்க முடியும். வருஷங்கள் கடந்தாலும் வாடாது’’ என்கிறார் சுமதி.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்