‘தேடிக் கொண்டிருக்கிறேன், ‘சின்னச் சின்ன ஆசை’ பாடிய மின்மினியை! சூரியனை பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி. இந்தியாவை சுழற்றியடித்த பாட்டுக்கு சொந்தக்காரி. என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? அன்புள்ள மின்மினி, உன் தங்கக்குரலால்தான் உலகம் என் தமிழ் கேட்டது. ஆனால் உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை’’
- இப்படி எழுதினார் போன மாதம் கவிஞர் வைரமுத்து. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘உயிர்மை’ இதழில் ‘திரும்பி வராத மின்மினிகள்’ என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில், ‘‘ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் திரைப்பாடலான ‘சின்னச் சின்ன ஆசை’யைப் பாடியவர் மின்மினி என்று தெரியாதவர்கள் யாருமே இல்லை. ஒரே ஒரு பாடலின் வழியாக ரஹ்மானுக்கு நிகரான புகழைப் பெற்ற மின்மினிக்கு பின்னர் என்ன நடந்தது என்றோ, அவர் எங்கே போனார் என்றோ யோசிப்பவர்கள் இன்று யாருமில்லை’’ என்று எழுதியிருந்தேன்.
அப்பாடலின் இந்தி, தெலுங்கு வடிவங்களுமே மின்மினியின் குரலில் பெரும் புகழடைந்தவை! ரஹ்மானின் அற்புதமான இசைக்காகவும் வைரமுத்துவின் அசாத்திய வரிகளுக்காகவும் மட்டுமல்லாமல், மின்மினியின் உயிர்த் துடிப்புள்ள பாட்டுக்காகவும், அந்த கொஞ்சும் குரலுக்காகவும்தான் அப்பாடல் கடந்த இருபதாண்டுகளாக உலகமெங்கும் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்பாடலுக்காக தமிழக அரசின் விருது, சிங்கப்பூர் அரசின் விருது, ஃபிலிம்ஃபேர் விருது என விருதுகள் வந்து குவிந்தன மின்மினிக்கு!
அதுதான் மின்மினியின் முதல் பாடல் என்றே பலர் நினைத்தார்கள்! ஆனால் ‘ரோஜா’விற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே திரைப் படங்களில் பாடி வந்திருக்கிறார் மின்மினி. அவரது முதல் திரைப்பாடல் 1988ல் மலையாளத்தில் வெளிவந்தது. ஆனால் அப்போது அவர் மின்மினி அல்ல! மினி. அவரை தமிழில் அறிமுகப்படுத்தியது பலர் நினைப்பதுபோல் ரஹ்மான் அல்ல, இளையராஜா. மினி என்ற பெயரை ‘மின்மினி’ என்று மாற்றியதும் அவரே.
ஒரு மின்மினிப் பூச்சியைப் போல் அற்புதமாக ஒளிர்ந்து, அனைவரின் கவனத்தையும் கவர்ந்து, பின்னர் வந்ததைவிட வேகமாக காணாமல் போன மின்மினி, கேரளாவில் கொச்சிக்கு பக்கத்தில் பிறந்தவர். ஐந்து வயது முதலேயே மேடைகளில் பாட ஆரம்பித்தவர். புகழ்பெற்ற மேடை நிகழ்ச்சிகள், மாநில அளவிலான பரிசுகள், பக்திப் பாடல் ஒலிநாடாக்கள் என குழந்தைப் பருவத்திலேயே புகழடைந்த மின்மினியின் வீட்டில் மின்சாரம், ரேடியோ, ஒலிநாடாக்கருவி, தொலைபேசி என எதுவுமே இருந்ததில்லை!
ஏழைக் குடும்பம். நான்கு பெண் குழந்தைகளில் கடைசியாக பிறந்தவர். அப்பா ஒரு தொழிற்சாலையில் பகுதி நேர ஊழியர். அம்மாவுக்கு நன்றாகப் பாடும் திறன் இருந்தது. பல நல்ல இந்தி, தமிழ், மலையாளத் திரைப் பாடல்களை மனப்பாடம் செய்து மின்மினிக்கு சொல்லித் தந்தார். அதுதான் மின்மினியின் ஒரே இசைக் கல்வி! மின்மினி முறையாக இசை கற்கவில்லை. கீர்த்தனைகள் பாடவோ, ராகங்களை அடையாளம் காணவோ அவரால் முடிந்ததுமில்லை! ஆனால் சிக்கலான ராகங்களில் அமைந்த பல பாடல்களை எந்தப் பிழையுமின்றி சிறப்பாகப் பாடினார்! கர்னாடக இசையில் அமைந்த சிக்கலான மெட்டுகளை மிக எளிதாக மின்மினி பாடியதைக் கேட்டு, ‘அவர் இசை கற்றதில்லை’ என்பதை நம்ப மறுக்கிறார்கள் இன்றும் பல இசையமைப்பாளர்கள்!
பதினெட்டாவது வயதில் தனது முதல் திரைப்பாடலைப் பாடினார் அவர். ‘புதிதாக நல்ல பாடகிகள் யாருமே வருவதில்லை’ என்று பாடகர் ஜெயசந்திரனிடம் இளையராஜா ஒருநாள் ஆதங்கம் தெரிவிக்க, அவருக்கு மின்மினியை பரிந்துரை செய்தார் ஜெயசந்திரன். உடனடியாக அழைத்து வருமாறு சொன்னார் இளையராஜா. மின்மினி அப்போது பாடிவந்த இசைக்குழுவின் அலுவலகத்தில் இதைத் தெரிவித்தார் ஜெயசந்திரன். ஆனால் தங்களது முக்கியப் பாடகியை இழந்திடுவோமோ என்ற அச்சத்தினால் அவர்கள் இத்தகவலை மின்மினியிடம் சொல்லவில்லை!
கடைசியில் 1991ல் ஒருநாள் சென்னையில் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குள் மின்மினி நுழையும்போது, அங்கு அவரது ஆதர்ச பாடகி ஆஷா போன்ஸ்லே பாடிக்கொண்டிருந்தார். அது கனவா நிஜமா என்று தெரியாமல் நின்ற மின்மினியிடம் ஒரு பாடலை பாடிக் காட்டும்படி சொன்னார் இளையராஜா. சிலமணி நேரங்களுக்குள் மினி, மின்மினியாக மாறி ஆஷா போன்ஸ்லே நின்ற அதே இடத்தில் நின்று பாடினார். ‘லவ் என்னா லவ்வு...’ அதன்பின் எத்தனையோ அற்புதமான பாடல்களை இளையராஜாவுக்காக மின்மினி பாடினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத் தொடர்ந்து ‘சித்திரை நிலவு’ (வண்டிச்சோலை சின்னராசு), ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’
(காதலன்), ‘பச்சைக்கிளி பாடும் ஊரு’ (கருத்தம்மா), ‘ராசாத்தீ என் உசிரு என்னதில்லெ’ பாடலின் பின்குரல் (திருடா திருடா), ‘பார்க்காதே பார்க்காதே’ (ஜென்டில்மேன்) போன்ற பாடல்களைப் பாடினார்.
‘சின்னச் சின்ன ஆசை’க்குப் பிறகு சில நாட்களில் 12 பாடல்கள் வரை பாடிப் பதிவு செய்யுமளவுக்கு பரபரப்பாக இயங்கினார்!
1993ல் ஒருநாள்... லண்டன் நகரில் நடந்த ஒரு தமிழ்த் திரை நட்சத்திர இரவில் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மின்மினியின் குரல் வெளிவராமல் நின்றுபோனது. பல மாதங்கள் அவரால் பேசவே முடியவில்லை. ‘பல வருடங்கள் இடைவிடாமல், ஓய்வே இல்லாமல் பாடி வந்ததனால் குரல் தந்துகிகளின் மேல் ஏற்பட்ட அளவுக்கதிகமான அழுத்தம் ஒரேயடியாக வெளிவந்ததால் இப்படி ஆகியிருக்கலாம்’ என்று சொல்லப்பட்டது. தொடர்ந்த சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பேசவும், ஓரளவு பாடவும் முடிந்தது. ஆனால் மின்மினியின் பாட்டிலிருந்த மந்திரஜாலம் காணாமலாகி விட்டிருந்தது! பாடுவதிலிருந்து விலகிக் கொண்டார் மின்மினி. சம்பாதித்த அனைத்தையும் சிகிச்சைக்காக செலவிட்டார்.
எல்லாவற்றையும் இழந்த மின்மினி, சென்னையில் வாழ வழியில்லாமல் கேரளா திரும்பினார். சில ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் கொச்சியில் ‘ஜாய்ஸ்’ எனும் இசைப்பள்ளியை ஆரம்பித்தார். இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களுடனும் இரண்டு கிளைகளுடனும் அது சிறப்பாக இயங்கி வருகிறது. கணவர் ஜாய் அதைப் பராமரித்து வருகிறார். பதினான்கு வயதான மகன் கருவி இசையில் நாட்டத்துடன் இருக்கிறான். எட்டு வயதான மகள் சிறப்பாகப் பாடுகிறாள். ‘‘எனது குரலின் சிக்கல்கள் மாறிவிட்டது. என்னால் பழையபடியே பாட முடிகிறது’’ என்று சொல்கிறார் மின்மினி. சமீபத்தில் சில மலையாளப் படங்களில் பாடியிருக்கிறார். மேடை நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். இசை நிகழ்ச்சிகளுக்காக வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
தன்னைப் பற்றியான வைரமுத்துவின் கருத்துகளை அறிந்து நெகிழ்ந்துபோனார் மின்மினி. ‘‘இளையராஜாவும், வைரமுத்துவும், ரஹ்மானும் என்னை வாழவைத்த தெய்வங்கள். அவர்கள் இல்லையென்றால் மின்மினி என்ற பாடகி இல்லை. எனக்காக எல்லாமே செய்தவர்கள் அவர்கள். இன்று திரும்பிப் பார்க்கும்போது அவர்களின் புண்ணியத்தினால் எனக்கு நிறைகள்தான் அதிகம். ஆனால் என்னை சொந்தமாக ஏற்றுக்கொண்ட எனது தமிழ் மொழியில் மீண்டும் சில பாடல்களைப் பாடவேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்கு இன்னும் இருக்கிறது’’ என்கிறார்.
மின்மினியின் சின்னச் சின்ன ஆசை நிறைவேறுமா?