கீதா என் காதலி
‘‘சார், ஏறுங்க... பஸ் கிளம்புது!’’ கிட்டத்தட்ட காலியாக இருந்த அரசு பஸ்ஸின் கண்டக்டர் என்னைப் பார்த்துக் கத்தினார். நானும் வேறு சிலரும் ஏறிக்கொள்ள, பஸ் சேலம் நோக்கி விரைந்தது. இடப்புற இரண்டு பேர் சீட் ஒன்றில் எனக்கு முன்னால் ஏறிய இரண்டு இளைஞர்கள் அமர்ந்து கொள்ள, அவர்களுக்குப் பின்னால் இருந்த சீட்டில் அமர்ந்தேன். கண்டக்டர் நிதானமாக வந்து டிக்கெட் போட்டார். முன்புற சீட் இளைஞர்களிடம் வாங்கிய ரூபாய் நோட்டை முகத்தை சுருக்கியபடி பார்த்தவர், ‘‘என்னாங்க... இப்படி ரூபா நோட்ல கண்டபடி கிறுக்கி இருக்கீங்க?’’ என்று அதட்டினார். ‘‘நாங்க எதுவும் எழுதலீங்க, ஓட்டல்ல சாப்பிட்டு பில் குடுத்தப்ப, அவங்க குடுத்த மீதி சில்லறையில வந்த நோட்டுதாங்க இது” என்றான் அந்த இளைஞர்களில் ஒருவன். ‘‘சார், இங்க பாருங்க. ரூபாய் நோட்ல என்னவெல்லாம் எழுதறானுங்க’’ - பத்து ரூபாய் நோட்டு ஒன்றை என்னிடம் காட்டினார் கண்டக்டர். ‘கீதா என் காதலி’ என அந்தப் பத்து ரூபாய் நோட்டின் வெள்ளைப் பகுதியில் கறுப்பு மையினால் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது. பார்த்து விட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். ‘எல்லாம் கலிகாலம் சார்’ என திட்டியபடியே என்னிடம் வந்த கண்டக்டரிடம் ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்து என் டிக்கெட்டையும் மீதிப் பணத்தையும் பெற்றுக் கொண்டேன். ‘‘ஏன்டா முருகேசு, ரூபாய் நோட்ல கண்டதையும் எழுதாதேன்னு எத்தன தடவ சொல்றது. இப்ப பாரு கண்டக்டர் கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு’’ - கண்டக்டர் நகர்ந்ததும் முன் சீட் இளைஞன் ஒருவன் மற்றவனை மெல்ல கண்டித்தான்.
‘‘அடப் போடா! என் ரூபா, என் லவ்வர். நான் அப்படித்தான் எழுதுவேன்’’ - அலட்சியமாக பதில் சொன்னான் அடுத்தவன். இன்னும் எத்தனை பேரிடம் திட்டு வாங்கினாலும் இவன் திருந்த மாட்டான் என அலுத்துக் கொண்டே அன்று அலுவலகத்தில் காத்திருக்கும் பணிகள் பற்றிய எண்ணங்களுக்குள் புதைந்து கொண்டேன். சேலத்தில் பஸ்ஸை விட்டு இறங்கியதும் ஷேர் ஆட்டோ பிடிக்க விரைந்தேன். ஆட்டோவில் சில்லறையாகக் கேட்பார்களே என நினைத்தபடி சட்டைப் பைக்குள் தேடி, கண்டக்டர் கொடுத்த பணத்தை எடுத்துப் பார்த்தேன். அந்த பத்து ரூபாய் நோட்டு, ‘கீதா என் காதலி’ என பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட முருகேசுவின் பத்து ரூபாய் நோட்டு..! முன் சீட்டு முருகேசின் கீதா இப்போது என் காதலி ஆகிவிட்டாள். ‘எது உன்னதோ அது என்னது, எது என்னதோ...’ என பஸ் ஸ்டாண்ட் தொலைக்காட்சிப் பெட்டி விவரம் தெரியாமல் அலறிக் கொண்டிருந்தது.
முருகேசனைப் போல யார் யாரிடமெல்லாம் ஏச்சும் பேச்சும் வாங்கப் போகிறோமோ என்ற கலக்கத்துடன் ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். மனதிற்குள் ஒரு திட்டமும் தயாரானது. ராமகிருஷ்ணா ஸ்டாப்பில் இறங்கும்போது ‘கீதா என் காதலி’யை ஷேர் ஆட்டோக்காரரிடம் தள்ளி விட்டு விடுவது என்பதுதான் அது!
|