ஒரு மாதமாக டெல்லியை மையம் கொண்டிருந்த புயல், இப்போது புதுவையை நோக்கி நகர்ந்திருக்கிறது. பள்ளி மாணவி ஒருவரை பேருந்து நடத்துனரும், அவரது நண்பர்களும் சேர்ந்து சிதைத்த சம்பவத்தால் அப்பிரதேசம் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. பாலியல் குற்றங்கள் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
‘‘பெண்களே ஆண்களைத் தூண்டுகிறார்கள்...’’ என்று கூறியிருக்கிறார் பிரபல பெண் விஞ்ஞானி அனிதா சுக்லா. ‘‘இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் வெளியே போவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன’’ என்பது அவரது கண்டுபிடிப்பு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘‘மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவதே கற்பழிப்புகள் அதிகரிக்கக் காரணம்’’ என்று பெண்களுக்கு புத்திமதி சொல்கிறார். ‘‘பெண்கள் பர்தா அணிந்து சென்றால் தப்பே நடக்காது’’ என்று அடித்துக் கூறுகிறார் மதுரை ‘மகா சன்னிதானம்’. மத்தியப் பிரதேச பா.ஜ.க எம்.பி ஒருவர், ‘‘லட்சுமண ரேகையை மீறிய சீதாவைப் போல வரம்பு மீறுகிற பெண்கள் இப்படியான தண்டனைகளுக்கு உள்ளாகத்தான் வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்குகிறார். ‘‘பாலியல் வன்முறை செய்யவரும் ஆண்களை ‘அண்ணா’ என பெண்கள் அழைத்துக் கதறினால், தப்பு நடக்காது’’ என ஐடியா சொல்கிறார் ஆஸரம் பாபு என்ற சாமியார்.
இவர்களும் இவர்களைப் போன்றோரும் சொல்ல வருகிற பொது நீதி... ‘நாட்டில் நடக்கிற கொடூரங்கள் அனைத்திற்கும் பெண்களே காரணம். அந்தக் காலத்தைப் போல அவர்கள் உடம்பை மூடிக்கொண்டு அடங்கி, ஒடுங்கி வீட்டுக்குள் உட்கார்ந்து விட்டால் எந்த குற்றமும் நடக்காது’ என்பதுதான். புதுச்சேரி அரசும் இதையே நம்புகிறது. அதனால்தான் மாணவிகள் ஓவர்கோட் போடவும், மாணவிகளுக்கு தனியாக பேருந்து இயக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். ‘பெண்களை தனிமைப்படுத்தி ஒளித்துவைத்து விட்டால், ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ய மாட்டார்கள்’ என்பதே புதுச்சேரி அரசின் நம்பிக்கை.
‘‘பெண்களின் உடைதான் காமுகர்களைத் தூண்டுகிறது என்பது உண்மையானால், இரண்டு, மூன்று வயது குழந்தைகள் எல்லாம் சூறையாடப்படுவதற்கு என்ன காரணம்’’ என்று இவர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் வசந்திதேவி.
‘‘இதை வெறும் பாலியல் வன்முறையாக பார்க்கக் கூடாது. பலவந்தமாக அதிகாரத்தை செலுத்துகிற செயல். ‘பெண் ஒரு அடிமை. அவளை நான் எதுவும் செய்து கொள்ளலாம்’ என்ற எண்ணமே அத்துமீறத் தூண்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தெருக்களில்தான் நடக்கும் என்பதில்லை. தமிழகத்தில் 80 சதவீத பாலியல் வன்முறைகள் குடும்பத்திற்குள்ளாக நடக்கின்றன. நெருங்கிய உறவினர்களே குற்றவாளிகள். ஆண்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிற ஆதிக்க மனோபாவம் இது. தனி பேருந்து விடுவதாலோ, ஓவர்கோட் போடுவதாலோ, தனிவகுப்பு நடத்துவதாலோ இதைத் தடுக்க முடியாது. கலாசாரம், பொருளாதாரம், சமூகம் எல்லாம் மாறவேண்டும்.
இந்தியாவில் வலுவான வன்முறை கலாசாரம் உருவாகியிருக்கிறது. கிரிமினல்கள் பெருகியிருக்கிறார்கள். அதிகார மட்டத்தில் உள்ளவர்களோடு இவர்களது நெட்வொர்க் விரிவடைந்திருக்கிறது. பொது இடங்களில் எந்த அச்சமும் இல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதாக்குறைக்கு டாஸ்மாக். 13 வயது சிறுவர்கள் கூட குடிக்கிறார்கள். தவறான பழக்க வழக்கங்களால் பள்ளிகளில் இடைநிற்பவர்கள் சதவீதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவர்களை திருத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவுமே இங்கு இல்லை. இதன் தொடர்ச்சியாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
‘எல்லா உரிமைகளுமே ஆண்களுக்கானது. பெண்கள் அவர்களுக்கு அடங்கியே இருக்கவேண்டிய அடிமைகள்...’ - நம் குடும்ப அமைப்பே இதைத்தான் வலியுறுத்துகிறது. அங்கிருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த நினைப்போடே வளர்வதால் எழும் பிரச்னைகள்தான் இவை’’ என்று குமுறுகிறார் வசந்திதேவி.
ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் சுதா சுந்தரராமன், ‘உடை மாறினால் எல்லாம் மாறிவிடும்’ என்று நம்புபவர்களுக்கு ஒரு அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறார்.
‘‘நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. கிராமப்புற பெண்கள் மாடர்ன் உடைகளை அணிவதில்லை. நாகரிகமாகத்தான் உடுத்துகிறார்கள். பிறகு ஏன் ஆண்கள் அத்துமீறுகிறார்கள்? இதுபோன்ற முனைமுறிந்த கருத்துகள் குற்றவாளிகளுக்கு சாதகமாக முடிந்துவிடும். இதை பெண்களுக்கு எதிரான பிரச்னையாக மட்டும் கருதக்கூடாது. இது சமூகத்திற்கு எதிரானது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் 3ல் 1 பங்கு ‘மைனர் ரேப்’. பழங்குடிகள், தலித் பெண்களே அதிக வன்முறைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் எல்லாம் மாடர்ன் உடை போட்டு அலைந்தார்களா? ஆழ வேரூன்றியுள்ள ஆணாதிக்க மனோபாவத்தை களையாமல் இதை தடுக்கவே முடியாது. ஆண்மை நீக்குவதோ, தூக்குதண்டனை வழங்குவதோ இதற்கு தீர்வல்ல. ஆண்களின் பிறப்பில் இருந்து மாற்றம் தொடங்கவேண்டும். வளர்ப்பில், கல்வியில் சமநிலை உருவாக வேண்டும். குடும்பத்தில், ஆண் குழந்தையை ஒரு மாதிரியும், பெண் குழந்தையை ஒரு மாதிரியும் கருதும் மனோபாவம் ஒழிய வேண்டும்’’ என்கிறார் சுதா சுந்தரராமன்.
பெண்கள் அணியும் உடை, ஆணைத் தூண்டுமா..? மனநல ஆலோசகர் வசந்தி பாபுவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘பெண்கள் நாகரிகமாக, அடுத்தவர்களை உறுத்தாமல் உடை உடுத்தவேண்டும் என்பதை, ஒரு பெண்ணாக, தாயாக நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதுவே குற்றங்களுக்கு காரணம் என்பதை ஒரு மனநல ஆலோசகராக நான் மறுக்கிறேன். பாலியல் வன்கொடுமை செய்யும் மனநிலை என்பது ‘அப்நார்மல் சைக்காலஜி’ வகையைச் சேர்ந்தது. அதிகபட்ச மனஅழுத்தத்தாலும், அளவுக்கு மீறிய செக்ஸ் உந்துதலாலும் ஏற்படுவது. ‘டிரக் அடிக்ஷன்’, ‘ஆல்கஹால் அடிக்ஷன்’ மாதிரி இது ‘செக்ஸ் அடிக்ஷன்’. தவறான பழக்கவழக்கங்களே இதற்குக் காரணம். மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களே அத்துமீறுகிறார்கள். இதற்கு வளர்ப்புமுறை, கெட்ட சகவாசம், எதிர்மறை எண்ணம் ஏற்படுதல் என பல காரணங்கள் உண்டு. பெற்றோர்களுக்கும் இதில் பங்குண்டு. இன்றைக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்றே பலருக்குத் தெரியவில்லை. கூட்டுக்குடும்பங்கள் குலைந்து விட்டன. தனித்து வாழும் பலர், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அக்குழந்தையின் விருப்பம் போலவே வளர்க்கிறார்கள். பாட்டி, அக்கா, தங்கை, சித்தி என உறவுகளின் தன்மைகளை புரிந்துகொள்ளாமல் வளரும் குழந்தை, தன் பருவத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும்.
தனி பேருந்து, தனி வகுப்பறைகள் வைப்பதால் எதையும் மாற்றமுடியாது. ஈர்ப்பையும், குற்றங்களையும் அது அதிகப்படுத்தவே செய்யும். ‘கோ-எஜுகேஷன்’ சிஸ்டம்தான் ஆண்-பெண் நட்பு பற்றிய புரிதலை உருவாக்கும். பெண்களை சக உயிராகப் பார்க்க வைக்கும்...’’ என்கிற வசந்தி, பெண்களின் பெற்றோருக்கும் சில ஆலோசனைகள் சொல்கிறார்.
‘‘பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். விவாதியுங்கள். அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். திட்டி அச்சத்தை உருவாக்காதீர்கள். வெளிப்படையாக இருங்கள். பள்ளியில், கல்லூரியில், தெருவில் நடந்ததை எல்லாம் கேட்டு, உரிய ஆலோசனை சொல்லுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கத்தியை கொடுத்து அனுப்பத் தேவையில்லை. தைரியத்தை கொடுத்து அனுப்புங்கள்... அது போதும்!’’
பாட்டி, அக்கா, தங்கை, சித்தி என உறவுகளின்தன்மைகளை
புரிந்துகொள்ளாமல் வளரும் குழந்தை, தன் பருவத்தில் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கும்.
- வெ.நீலகண்டன்