இலக்கணம் உடையும் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒன்று துளிர்க்கிறது. போட்டோகிராபியில் அவ்வப்போது இலக்கணத்துக்கு எதிர் திசையில் நிற்பதால்தான் நானும் இந்தத் துறையில் நிற்கிறேன்’’ - கண்கள் ஈர்க்கும் அழகிய புகைப்படமாக கவனம் ஈர்க்கிறது கார்த்திக் ஸ்ரீநிவாசனின் பேச்சு. தென்னிந்தியாவின் சிறந்த புகைப்பட கலைஞர்களின் பட்டியலில் கட்டாயம் கார்த்திக்கின் பெயர் உண்டு. இவர் கேமரா மின்னல் துவங்கிவிட்டால் சினிமா நட்சத்திரம், விளம்பர மாடல்களென எல்லா மயில்களும் தோகை விரிக்கும். கார்த்திக் தன் அனுபவங்களை நம்மிடம் க்ளிக்கியதிலிருந்து...
‘‘பொதுவா சினிமா நட்சத்திரங்கள் பலர் போட்டோவில் தங்களோட முகம் பளிச்னு இருப்பதைத்தான் விரும்புறாங்க. ஆனால், முகத்தில் சின்னதா ஒரு நிழல் படும்படி எடுப்பதுதான் என்னோட ஸ்டைல். அது தனி அழகு. இதனாலயே ஃபோட்டோ ஷூட்டில் சில நடிகர், நடிகைகள் முதலில் என் ஐடியாவை மறுப்பார்கள். ஷூட் முடிந்ததும் அவர்களாகவே வந்து பாராட்டுவார்கள்.
ஹன்சிகா அவ்வளவா ஒத்துழைக்காம அலட்டல் காட்டுவார்னு பலர் என்கிட்ட சொன்னாங்க. ஆனா அவங்க ஸோ சிம்பிள்! ஷூட் பண்ணினப்போ, ‘நீங்க செம ஃபாஸ்ட்டா ஷூட் பண்றீங்க’ என பாராட்டினார். ஹன்சிகாவையும் அவரது அம்மாவையும் சேர்த்து எடுத்த போட்டோவை ரசித்து, ஒரு காப்பி கேட்டு வாங்கிக் கொண்டார்.
அமலா பாலிடம் கண்கள்தான் பெரிய பிளஸ். அதை நான் மூட வைத்து எடுத்த படத்தை பார்த்துட்டு கண்களை இன்னும் ஒரு பங்கு அகல விரித்தார் அமலா’’ என்னும் கார்த்திக்கை, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகச் சொல்லப்படும் நயன்தாராவே அடிக்கடி போன் செய்து அன்புத் தொந்தரவு கொடுத்தாராம். எதற்காக?
‘‘நம்ம போட்டோவுக்குத்தான் அப்படியொரு மரியாதை. ‘3’ படத்தின்போது ஸ்ருதிஹாசனைக் கூட க்ளிக்கினேன். போட்டோவைப் பார்த்துட்டு ‘எனக்கொரு காபி கொடுங்க... அப்பாவுக்குக் காட்டணும்’னு ஆர்வமா இருந்தார். அப்படித்தான் நயன்தாராவும். ஒரு மேசினுக்காக நான் எடுத்த படத்தை பார்க்கும் ஆர்வத்தில் துளைச்சு எடுத்துட்டாங்க. மாடர்ன் பேலஸ் பின்னணியில் பெருமையும், திமிரும் பிரதிபலிக்கிற மாதிரி ரம்யாவை படம் எடுத்தேன். அப்போ ரம்யா காட்டிய எக்ஸ்பிரஷன், கண்காட்சி!
ஹேண்ட்சம்னா சூர்யாதான். எந்த காஸ்ட்யூம் போட்டாலும் கச்சிதமா தெரிவார். ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஃபர்ஸ்ட் லுக்குக்காக பெரம்பூர் பக்கம் கார்த்தியை ரயில் மேல ஓடி வரச்சொல்லி எடுத்தேன். நார்த் இண்டியாவிலிருந்தெல்லாம் ‘அந்தப் படத்தை எப்படி எடுத்தீங்க’ன்னு அவர்கிட்ட கேட்டாங்களாம்.
ஒரு முறை, கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக யுவனை படம் எடுக்கச் சொன்னாங்க. அத்தனை பிஸி ஷெட்யூலிலும் பாண்டிச்சேரிக்கு அவரைக் கூட்டிட்டுப் போனோம். பல லட்சம் மதிப்புள்ள கிராண்ட் பியானோவை சென்னையிலிருந்து எடுத்துட்டுப் போனோம். கடலுக்குள் இருக்கிற ஒரு பாறை திட்டில், சூரியன் உதயமாகும் நேரத்தில் பியானோவை அவர் வாசிக்கிற மாதிரி எடுத்தோம். அந்தக் குட்டிப் பாறைக்கு மேலே கிரேனில் உட்கார்ந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு எடுத்த அந்தப் படத்தைப் பார்த்து யுவன் ‘வாவ்’ சொன்னபோது உள்ளுக்குள் சிம்பொனி இசைத்தது.
இப்போ சினிமாவை விட விளம்பரங்களுக்குத்தான் நிறைய வொர்க் பண்றேன். சமீபத்தில் என்னோட ஸ்டூடியோவில் நகைக்கடை விளம்பரத்துக்காக ஷூட் பண்ணினேன். அந்த மாடல் போட்டிருக்கும் எல்லோ டைமண்ட் நகை எவ்வளவு இருக்கும்னு நினைக்கிறீங்க?’’ என்ற கார்த்திக், ‘இரண்டரை கோடி ரூபாய்’ என விலை சொன்னபோது மயக்கமே வந்தது!
இதுதான் அழகுல மயங்குறதா?
- அமலன்