கமலுக்கு முதல் வாழ்த்து என்னுடையதுதான்





தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் தவிர்க்க முடியாதவர். சிணுங்கி இசைக்கிற அலைபேசியில் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் பதில் சொல்கிறார் பிரகாஷ். அடர்த்தியான குளிர் அறையில் வெளியேற இடம் தேடி அலைகிறது சிகரெட் புகை. ‘‘பிரகாஷ்ராஜுக்கு என்னன்னா, இப்போதைக்கு இந்த சந்திப்பை அழகாக்கணும். எது வேணும்னாலும் கேளுங்க...’’ என்றார். இருபது வருட சீனியர் பேசினால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது!

மறுபடியும் ராதாமோகன்... இந்தத் தடவை ‘கௌரவம்’, எப்படியிருக்கும்?
‘‘இது நிஜமாகவே இளைஞர்களுக்கான படம். இப்ப பேப்பரைப் பிரித்தால் ‘கௌரவக்கொலை’ன்னு ஒரு வரி திரும்பத் திரும்ப வருது. கௌரவம் பிறப்பில் வருதா, வாழ்கிற முறையில் வருதான்னு ஒரு கேள்வி நம்மைத் துரத்திக்கிட்டே வருது. இந்தப் பிரச்னையில் எந்தத் தரப்பில் நியாயம் இருக்கு? எவ்வளவோ இதுபற்றி வாதங்கள் இருக்கு. அதுல மக்களுக்குப் பயன்படுற நியாயத்தை சொல்றார் ராதாமோகன்.
ராதாமோகன்னா ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு. கார், பங்களான்னு என்னையே சுத்தி சுவர் கட்டிட்டு இருந்தா என்ன ஆகும்? இந்த வாழ்க்கை எனக்கு பக்குவம் கொடுத்தது. தரமான படங்களைக் கொடுத்தால் மரியாதை தருவோம்னு மக்கள் சொன்னாங்க. அந்த மரியாதையை அனுபவிச்ச பிறகு நல்ல சினிமா எடுக்காம இருக்க முடியலை. அதுதான், இந்த ‘கௌரவம்’.’’
நீங்கள் ஒரே மாதிரி நடிச்சிட்டிருக்கீங்கன்னு ஒரு பேச்சு இருக்கே...
‘‘பிரகாஷ் ஒரே மாதிரி நடிக்கிறார்னு தயங்கிக்கிட்டே கேட்கவேண்டாம். அதுதான் உண்மை. 10 வருஷமா காலநேரம் பார்க்காம நடிச்சிட்டு இருக்கிறதால அப்படி நடந்திருக்கலாம். உலகத்தின் சிறந்த நடிகர்களுக்கெல்லாம் இது மாதிரி நேர்ந்திருக்கு. நல்ல வேஷம் கிடைச்சா ‘மொழி’, ‘காஞ்சிவரம்’, ‘இருவர்’, ‘கௌரவம்’னு ஒரு வேறுபட்ட பயணம் போக முடியும். அதே சமயம் கமர்ஷியல் சினிமான்னா வேண்டாம்னு சொல்லிட முடியாது. சினிமாவுக்கு நான் உதவியா இருக்கேன். அதுவும் எனக்கு உதவியா இருக்கணும். நான் இப்படித்தான் இருப்பேன்னு ஒரு ஜோல்னா பையைத் தூக்கிக்கிட்டுத் திரிய முடியாது. நல்ல படம் எடுக்க காசு வேணுமில்லையா?’’



இந்தியில் ‘ரவுடி ராத்தோரு’ம் போகுது. ‘கஹானி’யும் வரவேற்பு அடையுது. இங்கே எப்பவும் ஸ்டார்களுக்குத்தான் முதலிடம்... ஏன்?
‘‘அப்படியெல்லாம் தமிழ் சினிமாவைத் தூக்கிப் போட்டுட முடியாது. நாலஞ்சு வருஷமா பல எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் இங்கே வந்திருக்காங்க. நல்ல சிந்தனை, நுணுக்கமா சில விஷயங்கள் நடந்திருக்கு. அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி இருந்த ஸ்டார் சிஸ்டம் இப்ப வித்தியாசமா இருக்கு. பெரிய பெரிய நடிகர்கள் இப்ப தோல்வியைப் பார்க்கறாங்க. ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பண்ணும்போது தோல்விதான் வரும். இப்ப பாருங்க ‘பீட்சா’ ஓடுது. ‘கும்கி’க்கு என்ன குறைச்சல்?’’

கமல்... ‘விஸ்வரூபம்’... டிடிஹெச் ரிலீஸ்... - எப்படி எடுத்துக்கறீங்க?
‘‘வரவேற்கணும். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கமலுக்கு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். டெக்னிகலா அடுத்த கட்டம் போறது நல்ல விஷயம். பீட்ஸா, உணவுகள் ஹோம் டெலிவரிக்கு போயிட்ட மாதிரி படமும் போறது நல்லதுதான். தியேட்டரில் உட்கார்ந்து ரெண்டரை மணி நேரம் பார்க்கணும். தியேட்டருக்குப் போக, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்படிப் போயிட்டுவர நிறையப் பேருக்கு முடியலை. ஆனா, அவங்க படம் பார்க்க ரெடியா இருக்காங்க. அவங்களுக்கு வீட்ல படம் காட்டுறது தப்பில்லையே?
இது கமலால் மட்டும்தான் முடியும். தைரியமும் தொலைநோக்கும் அவர்கிட்டே இருக்கு. நடக்கட்டும்... அதில் ஒரு விஷயம் புரிபடும். இழந்தால் அவருக்குத்தான் இழப்பு. அப்படி ஆகாமல் அவருக்குக் கை கொடுப்போம். சிந்தித்தது, பணம் போட்டது, படம் எடுத்தது எல்லாம் அவர்தான். எவ்வளவு தலைமுறை அனுபவம் இருக்கு அவர்கிட்டே. சும்மா விளம்பரத்திற்காக ரீவீனீனீவீநீளீs பண்றவர் இல்லை. அவர் பெரிய ஆள். அவருக்கு முதல் வாழ்த்து என்னுடையதுதான்!’’



சினிமாவைத் தாண்டி நீங்க உங்களை அடையாளம் காண்பது எங்கே?
‘‘நாம் கண்ணுக்குத் தெரிகிறதை வச்சுத்தான் அடையாளம் பண்ணிக்கிறோம். ஆனால் அது அந்த மனிதன் கிடையாது. எனக்கு 5 சதவீதம்தான் சினிமா. நடிகனா, டைரக்டரா, தயாரிப்பாளரா, சக மனுஷனா என்னை உங்களுக்குத் தெரிஞ்சதைத் தாண்டி, அடுத்து போயிட்டே இருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா மரங்களைப் பத்தியும் தெரிந்த மனுஷனை ராஜமுந்திரியில் பார்த்தேன். அவன்தான் எனக்கு இப்போ அதிசயம். மண்ணோட சேர்ந்த மனுஷங்களோட கஷ்டம் தெரியுது. 30 ஏக்கரில் ஆர்கானிக் காய்களை விளைவிக்க தீர்மானிச்சிருக்கேன். இது புது அனுபவங்களைத் தருது. உரத்தைப் போட்டு காய்கறியெல்லாம் விஷமா மாறுற அவலம் புரியுது. இன்னும் ஆறு வருஷத்திற்குள்ளே உங்களோட நல்ல உணவில் நானும் இருப்பேன்.’’
பிள்ளைங்க எப்படி இருக்காங்க?
‘‘என்னோட பெண் குழந்தைக்கு பதினேழு வயசு. பெயின்டிங், மியூசிக்னு பிடிச்ச விஷயங்கள் தேடுறா. ஸ்கூல்ல கத்துக்கிறதை விட வெளியில் கத்துக்கிறேன்னு சொல்றா. ‘ஹாஸ்டல் சலிப்பா இருக்கு... பிளஸ் 2 முடிச்சிட்டு ஒரு வருஷம் உங்க கூட இருக்கறேன்’னு சொல்றா. ஒரு வருஷம் வீணாகிடுமேங்கிற எண்ணத்தை மாத்தி, ‘ஒரு வருஷம் ஒண்ணும் கெட்டுப் போயிடாது’ன்னு எங்களுக்குப் புரிய வைக்கிறா. அவள் வயசுல இந்தப் பக்குவம் எனக்கு இல்லை. குழந்தைகள் நம்மைத் தாண்டி போயிட்டு இருக்காங்க.’’

இமேஜ் பத்தி கவலையே இல்லையே, ஏன்?
‘‘இமேஜ் என்பது பொய். இருபது வருஷமா ஒரு ஹேர்ஸ்டைலோட வாழற மாதிரி அது. இந்தச் சிரிப்பு அழகா இருக்குன்னு யாரோ சொல்லிட்டா, அதே அளவோட சிரிக்கிற இயல்பு மாதிரிதான் இந்த இமேஜ். ஒரு பொய்யை நம்பிக்கிட்டு எத்தனை நாள் வாழ்றது? பளிச்னு பேசிடுறேன். பொய் பேசுறதைக் குறைச்சேன். குறைந்தபட்ச நேர்மையில வாழ முடியுது. நிம்மதியா இருக்கு.’’
எங்கே பார்த்தாலும் கற்பழிப்புகள். டெல்லி துயரம் வேற... இந்த ஆண்களுக்கு என்ன ஆச்சு பிரகாஷ்?



‘‘காலம்காலமா நடந்துக்கிட்டேதானே இருக்கு. பெண்கள் நாகரிகமா, கொஞ்சம் குறைவா உடுத்தியிருந்தா, ‘ஆமா, ஒரு மாதிரியில்ல’ என்றுதானே நினைக்கிறோம். இளைஞர்கள் இந்தத் தடவை எதிரா நின்னதுதான் நல்ல விஷயம். ‘என்னடா பண்ணிட்டான், கொலையா செய்திட்டான்’னு தானே கொஞ்சம் முன்னாடி வரைக்கும் சொல்லிக்கிட்டு இருந்தோம். இது அசிங்கம்னு இப்ப புரிஞ்சிருக்கு. இனி பொறுப்பதில்லைங்கிற இடம்தான் இப்ப வந்திருக்கு. என்ன காரணம் இதுக்கு? சினிமாவுக்கு இதுல பங்கு இருக்கா? வளர்ப்பா? குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக் கிடக்குறதாலயா? என்ன பிரச்னை? ஊழல், லஞ்சம், வன்முறை தப்புங்கிற மாதிரி இது அசிங்கத்தின் உச்சம் இல்லையா? கொஞ்சமா நடக்கும்போது கண்ணை மூடிக்கிட்டு இருந்ததின் விளைவு, இப்படி பூதாகரமா வளர்ந்துபோய் நிற்குது. இலங்கையில் நடக்கிறபோது டீ குடிச்சிட்டு கேட்டுக்கிட்டுத்தானே இருந்தோம்? இந்த அரசு, போலீஸ்காரங்க, இந்த சமூகம், அப்பா அம்மா வளர்ப்பு எல்லாமே சேர்ந்துதான் இந்த அசிங்கம் நடந்திருக்கு. எங்கே போறோம்னு தெரிஞ்சு போச்சு. நாணித் தலைகுனிவோம். நமக்குத்தான் அது நல்லா வருமே!’’
- நா.கதிர்வேலன்