கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மீண்டும் கோகிலா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். அவர் கையில் பிரம்பை வைத்து மிரட்டினாலும், சுதாகரும் சரிதாவும் களுக்கென்று சிரிக்கும் இந்தப் புகைப் படத்தை அவரிடம் காட்டினோம்.
‘‘ஆஹா... ‘ருசிகண்ட பூனை’ படத்தின் பாடல் காட்சியப்போ எடுத்த படம் இது. சுதாகரை எப்படி செல்லமா அடிக்கணும்னு சரிதாவுக்கு சொல்லித் தர்றேன். என்ன பாட்டுன்னு ஞாபகத்துல இல்ல. ஆனா இந்தப் பாட்டை எடுக்கும்போது நடந்த நிகழ்வுகளை என்னால மறக்க முடியாது. குன்னூர்ல இந்தக் காட்சியை ஷூட் பண்ணப் போயிருந்தோம். தலையை உரசிட்டுப் போற மாதிரி அடிக்கடி மேகம் சூழ்ந்துகொள்ளும். அது போகும் வரை காத்திருப்போம். சும்மாவே இருந்தா போரடிக்கும்ங்கறதால நான், சரிதா, சுதாகர், கேமராமேன்னு யூனிட்ல உள்ளவங்க எல்லாரும் சேர்ந்து கபடி விளையாடுவோம்.
திடீர்னு மேகம் விலகி வெளிச்சம் எட்டிப் பார்க்கும்போது பரபரப்பா ஷாட்டுக்கு ரெடியாவோம். டேக் சொல்லி நடிக்க ரெடியாகும்போது மறுபடியும் மேகம் சூழ்ந்துகொண்டு அது ஒரு பக்கம் கண்ணாமூச்சி காட்டும். இப்படி காத்திருந்து காத்திருந்து அந்தப் பாடல் காட்சியை ஒரு வழியா எடுத்து முடித்தோம். இன்னிக்கு எவ்வளவோ டெக்னாலஜிகள் வந்துட்டதால இந்த மாதிரி இயற்கை சூழ்நிலைகளை எல்லாம் சமாளிச்சு படம் எடுத்துட முடியும். அந்தக் காலத்தில் அதற்கான வசதி இல்ல.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்றதுபோல, இருக்குறத வச்சி வேலை செஞ்சோம். நவீன கேமரா வராத காலத்திலேயே ‘கல்யாணராமன்’ படத்தில ஒரு சாதனையை பண்ணியிருக்கோம். தமிழ் சினிமா வரலாற்றில் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்ட முதல் இரட்டை வேடப் படம் இதுதான். அதுக்கு முன்னாடி இன்டோரில் (உள் அரங்கம்) மட்டும்தான் இரட்டை வேட படத்தை எடுக்க முடியும். ஹீரோ கமல், கேமராமேன் இரண்டு பேரும் எனக்கு இரண்டு கரங்களாக இருந்ததும், புரிதலோட வேலை செஞ்சதும்தான் இந்த சாதனைக்குக் காரணம். கொஞ்சம் பிசகினாலும் டோட்டல் ஃபிலிமும் காலியாகிடும். ஒன் டூ த்ரி சொல்லி கணக்கு வச்சிக்கிட்டு ரெண்டு கமல் கட்டிப்பிடிக்கிற மாதிரியான சீனையெல்லாம் எடுத்து முடிச்சோம்.
படத்தைப் பார்த்துட்டு மெய்யப்ப செட்டியாரெல்லாம் போன் பண்ணி பாராட்டினார். நாம செய்யுற வேலையில மத்தவங்களைவிட ஒருபடி வித்தியாசமா யோசிச்சா கண்டிப்பா அந்த வேலை சாதனையா மாறும்’’ எனும் ரங்கராஜனின் அனுபவம், புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு டானிக்.
- அமலன்
படம் உதவி: ஞானம்