பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தீர்வாகுமா?





தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மிருகம் போல, டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடூரம், இந்தியாவின் தேசிய அவமானமாகி விட்டது. அதற்குக் காரணமான காம மிருகங்களைத் தூக்கிலிட வேண்டும் என்று தொடங்கி விதவிதமான தண்டனைகளை நாடே ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில்தான் ‘கெமிக்கல் காஸ்ட்ரேஷன்’ எனப்படும் வேதியியல் ஆண்மை நீக்கத்தைப் பரிந்துரைத்திருக்கிறார் தமிழக முதல்வர். அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக இந்த தண்டனை தரப்படுகிறது. சட்ட ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இது சாத்தியமா? இதைச் செய்யலாமா, வேண்டாமா? என்று பல விவாதங்கள் தொடர்கின்றன...

‘‘ஆதிகாலம் தொட்டே இப்படி ஆணுறுப்பு மற்றும் விரைகளை நீக்குவது, சிதைப்பது உள்ளிட்ட வழிகளால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. காட்டுமிராண்டித்தனம் என்று இப்போது அந்த தண்டனைகள் அனைவராலும் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால், இன்றைய நவீன மருத்துவ முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, கொடூரமாகத் தெரியாத வண்ணம் அதையே கொஞ்சம் டீசன்ட்டாக செய்வதுதான் கெமிக்கல் காஸ்ட்ரேஷன்!’’ என்று அடிப்படை விளக்கம் தந்தார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரமேஷ்குமார்.
‘‘பெண்களுக்கு பெண்மைத் தன்மையைக் கொடுப்பது ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன். அதே போல, ஆன்ட்ரோஜென் என்ற ஹார்மோன்தான் ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையைக் கொடுக்கிறது. அந்த ஆன்ட்ரோஜெனின் செயலைக் குறைக்கும் ஆன்ட்டி ஆன்ட்ரோஜென் மருந்துகளை உட்செலுத்தி ஒரு மனிதனின் ஆண் உணர்வுகளைக் குறைக்க முடியும். ஆனால் இது தண்டனைக்காக கண்டுபிடிக்கப்பட்டதல்ல. வயது வந்த ஆண்களுக்கு விரைகளில் உள்ள ப்ராஸ்டேட் க்ளாண்ட் எனப்படும் ஒருவித சுரப்பிகளில் ஏற்படும் கேன்சரைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக இல்லாமல் சாதாரண நபர்களிடம் இந்த முறையைப் பயன்படுத்தும்போது, அது பலவித பக்க விளைவு களை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக ஒருவருக்கு ரசாயன மருந்துகளைக் கொடுக்கும்போது அவரின் எலும்புகளின் திடம் குறையலாம், சதைப்பற்று இல்லாமல் போகலாம், ரத்தம் உறைந்து இதய நோய் வரலாம். மூளை நோய்கள்கூட ஏற்படலாம். விரைகள் சுருங்கலாம். உடலளவிலான பெண்தன்மை மாற்றங்களும் ஏற்படும். உதாரணமாக, குரலில் மாற்றம், மார்புப் பகுதிகள் பெரிதாவது போன்றவையும் நிகழலாம்.

இந்த சிகிச்சையில் ஆண்மைத் தன்மையை நிரந்தரமாக அழிக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று வாழ்நாள் முழுக்க ஆன்டி ஆன்ட்ரோஜென் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மருந்துகளுக்கு எதிராக ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் ஹார்மோன் மருந்துகளும் கிடைக்கிறது என்பதால், குற்றவாளி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதும் சாத்தியம்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாய்க்குக்கூட ஆண்மை நீக்கம் செய்யக் கூடாதென விலங்கியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில், மனிதர்களுக்கு இதுபோன்ற ரசாயன ஆண்மை நீக்கம் தேவையா என்பதும் விவாதத்துக்குரியது’’ என்றார் அவர்.

‘‘இந்த தண்டனை உடலளவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனரீதியாக குற்றவாளிகளை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. செக்ஸ் விருப்பம் குறையலாம் என்பது உண்மைதான். ஆனால், செக்ஸ் விருப்பம் அதிகமாக உடையவர்கள்தான் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்வது சரியாகாது. ஏனெனில் ஆண்மைத்தன்மை அற்றவர்கள்கூட உளவியல் பிரச்னைகளால் பெண்களிடம் வெறுப்பு கொண்டு இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு கொலை செய்வதைக் கேள்விப்படுகிறோம்.



மேலும் இப்படிப்பட்ட சிகிச்சை வேறென்ன உளவியல் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது. கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் இன்னும் ஆபத்தானவனாக, கொடூர எண்ணம் கொண்டவனாக குற்றவாளி மாறிப் போனால் பாதிப்பு நமக்குத்தான். இந்த சிகிச்சையைக் கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டால் சிறையில் அதை எப்படிச் செய்ய முடியும் என்ற நடைமுறைச் சிக்கலும் உள்ளது. மருத்துவ ரீதியாக ஒருவருக்கு மருந்தைக் கொடுக்கும்போது அந்த மருந்து பற்றி நோயாளி தெரிந்திருக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் கெமிக்கல் சிகிச்சையில் பலாத்காரமாக கொடுக்க வேண்டியிருக்கும். இது மருத்துவ நெறிக்கே விரோதமானது. பாலியல் குற்றங்களுக்குக் காரணம் அதிகபட்ச பாலியல் உந்துதல்தான் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் முடிவெடுக்காமல், வெளிக்காரணங்களை ஆராய்ந்து இந்தக் குற்றவாளிகளுக்கு கடுமையான சிறைவாசங்களைக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் ஒருவர்.
‘சட்டரீதியாக இந்த தண்டனையை இந்தியாவில் அனுமதிக்க முடியுமா?’ சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரான பிரசாத்திடம் கேட்டோம்.
‘‘ரசாயன ஆண்மை நீக்கம் என்பது கண்ணுக்குக் கண், பழிக்குப் பழி என்ற ஆதி காலத்து நடைமுறைக்குச் சமமானது. குற்றம் செய்தவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லெறிந்து கொல்லும் அரபு நாடுகளின் முறைக்கும் இந்த முறைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரு மனிதனின் உடலை ஊனமாக்கும் உரிமையும் அதிகாரமும் யாருக்கும் இல்லை. மருத்துவத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட நார்கோ அனாலிசிஸ் எனும் உண்மை கண்டறியும் சோதனை முறையைக்கூட குற்றவாளிகளிடம் பயன்படுத்துவதை இந்தியா நிராகரித்துவிட்ட சூழ்நிலையில், ரசாயன ஆண்மை நீக்கம் என்பதெல்லாம் ஒரு குற்றத்தைத் தடுப்பதற்கான சரியான வழியாக இருக்காது.

கற்பழிப்பு கொலைகளுக்கு தூக்கு தண்டனையும் கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனையும்தான் இதுவரை இந்திய சட்டங்களில் உள்ளது. இந்தியாவில் ஆயுள் என்ற சொல்லுக்கே புதிய அர்த்தத்தைக் கற்பித்துவிட்டார்கள். அவரவர் வசதிக்கேற்ப இந்த ஆயுள் தண்டனையானது அதிகபட்சம் பத்து வருடத்திலிருந்து பதினான்கு வருடமாக இன்று உள்ளது. குறைந்தபட்ச தண்டனை அவரவர் வசதிக்கேற்ப நடை முறையில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, இப்படிப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம். அதுவும் கடுங்காவல் தனிமைச் சிறையாக இருக்க வேண்டும்.  



இந்திய தண்டனைச் சட்டத்தில்தான் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளது. விரித்து இயற்றப்பட்ட புதிய பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் பாஸாகவில்லை. தூக்கு தண்டனையாலோ அல்லது ஒருவனை உடல்ரீதியாக துன்புறுத்துவதாலோ மட்டும் இந்த வகையான குற்றங்களைக் குறைத்துவிட முடியாது. சுதந்திர வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்பு இப்படிப்பட்ட கொடூர தண்டனைகளை அனுமதிக்காது. அப்படிக் கொடுத்தால் இந்திய அரசியலமைப்பையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்’’ என்றார் அவர்.
தேசிய அவமானத்தைத் துடைத்தெறியும் முயற்சியில், நம் கரங்கள் கறைபட்டுவிடக் கூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்