தோழிக்கு கல்யாணம்





அனிதா, இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. நன்றாகப் படிக்கக் கூடியவள்தான். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. விடுதி மெஸ்ஸிலும் ஏதோ கொஞ்சம் கொறித்து விட்டு வந்து விடுகிறாள்.

எல்லாம் சமீபமாக ஏற்பட்ட அவஸ்தைதான். கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, ஒருநாள் அவளை யாரோ உற்றுப் பார்ப்பதுபோல தோன்ற, சடக்கென்று திரும்பினாள். ஏக்கமும் தயக்கமுமாக அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான் அந்த இளைஞன். அழகாக அமைதியாக தினம் தினம் அதே பார்வையை வீசும் அவன் மேல் நாளாக ஆக அவளுக்கும் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. இப்போதெல்லாம் அவளுக்கு எங்கிருந்தாலும் குறுகுறுவென்று அந்த இளைஞன் தன்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
நெருங்கிய தோழி கீர்த்தனாவிடம் மட்டும் இதைச் சொன்னாள்.
‘‘தினமும் என்னைப் பார்க்கறான்டீ... ஆனா, வந்து பேசத்தான் மாட்டேங்கறான்!’’
‘‘அவன் பேசலைன்னா என்ன... நீயே போய் அப்ரோச் பண்ண வேண்டியதுதானே?’’ - சுலபமாகச் சொன்னாள் கீர்த்தனா.
‘‘அது எப்படிடீ? ஆம்பளயே பேசாம இருக்கும்போது, நாம எப்படி...’’ - இழுத்தாள் அனிதா.
‘‘அப்ப ஒண்ணு செய். உன் மனசில உள்ளதையெல்லாம் ஒரு லெட்டரா எழுதி அவன்கிட்ட கொடு. எத்தனை நாளைக்குத்தான் நீயா இப்படி அவஸ்தைப்படுவே?’’
அது நல்ல யோசனையாகப் பட, ஒரு கடிதமாக எழுதி கைப்பையில் போட்டு வைத்தாள் அனிதா.

மாணவியர் விடுதி. மாலை மணி ஆறு. நாளை அவனிடம் கடிதத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தை மனதுக்குள் அசை போட்டவாறே தன் அறையில் உட்கார்ந்திருந்தாள் அனிதா.
‘‘அனிதா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ்’’ என்றபடி அவள் ரூம்மேட் கலா உள்ளே வந்தாள். அனிதாவுக்கு ஒரு வருடம் சீனியர் அவள். செமஸ்டருக்குப் பிறகு காணாமல் போகப் போகும் கடைசி வருட மாணவி.
‘‘நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேனே’’ என்றாள் அனிதா.
‘‘அப்ப நீயே சொல்லு!’’
‘‘நோ... நோ... நான் உன்கிட்ட அந்த மேட்டர் பத்தி ஆலோசனையும் கேட்கணும். அதனால நீயே முதல்ல சொல்லு...’’
‘‘சரி, நானே சொல்றேன். எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கு. இன்னிக்கு அப்பா கூரியர்ல மாப்பிள்ளையோட போட்டோ அனுப்பியிருக்காரு. இதான் மாப்பிள்ளை’’ என்று அந்த போட்டோவைக் காட்டினாள் கலா..
ஒரு நிமிடம் அதிர்ந்தாள் அனிதா. அதே பஸ் ஸ்டாப் வாலிபன், போட்டோவில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான். அனிதா அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
‘‘சூப்பர்... உனக்கு நல்ல பொருத்தமான மாப்பிள்ளையதான் உங்கப்பா பார்த்திருக்காரு!’’
‘‘தேங்க்ஸ்டீ... சரி உன் நியூஸை சொல்லு!’’
‘‘ஒரு பையன் என்னைச் சுத்தி சுத்தி வந்தான். என்ன பண்றதுன்னு உன்னை கன்சல்ட் பண்ணலாம்னு இருந்தேன். நீ உன்னோட மேட்டரை சொன்னவுடனேயே நானும் முடிவு பண்ணிட்டேன், பெத்தவங்க பார்க்கிற பையனுக்கே கழுத்தை நீட்டிடலாம்னு’’ என்றாள் அனிதா, கடிதத்தையும் ஏமாற்றத்தையும் ஒருசேர மறைத்தவாறு.