புது பிராண்ட்





‘‘தம்பி, உன்னைத்தானே!’’ என்ற குரல் கேட்டுத் தலையை உயர்த்தினான் பலசரக்குக் கடைக்காரன் சிவதாணு.
பழக்கப்பட்ட மகேந்திரன் நின்றிருந்தார்.
‘‘வாங்க சார்!’’ என்றான் முகமலர்ச்சியோடு.

“வர்றது இருக்கட்டும்ப்பா! ஒன்னைய நம்பித்தானே லிஸ்ட் குடுக்கிறோம்? நீ என்னடான்னா தரமான பொருட்களோட தரமில்லாததையும் சேர்த்து அனுப்பிடறே!’’
தலையைச் சொறிந்தவாறே, “அப்பிடியொண்ணும் இருக்காதுங்களே சார்!’’ என்றான் சிவதாணு.
“இப்படிச் சொல்லுவேன்னுதான் அந்த அயிட்டமெல்லாம் பாக்கெட் உடைக்காம கொண்டாந்திருக்கேன். இந்தா, வாங்கிக்க. வழக்கமா நான் வாங்குற அந்த பிரபல கம்பெனி தயாரிப்புகளையே குடு!’’
அவர் தந்தவற்றை வாங்கிய சிவதாணு, ‘‘சார்! இது அதைவிட நல்லா இருக்கும். நம்ம கஸ்டமர்ஸ் இப்பல்லாம் இதைத்தான் கேட்டு வாங்குறாங்க...’’ என்றான்.
“ப்ச்!’’ - சலித்துக் கொண்டார் மகேந்திரன்.
“அதெல்லாம் பேசக்கூடாது. இந்தக் கம்பெனி பேரே நான் கேள்விப்படலை. புது கம்பெனி! இதுக்கு நீ விளம்பர ஏஜென்ட் மாதிரி பரிஞ்சு பேசுறியே? ரிடையராயிட்டேன்... இந்த மாதிரியெல்லாம் என்னை அலையவிடாத!’’
“இந்த ஒருமுறை இதை உபயோகிச்சுதான் பாருங்களேன்... சரியில்லாட்டா, திருப்பிக் கொண்டாங்க!’’
“இல்லப்பா... எனக்கு வேண்டாம்னா, வேண்டாம்தான்!’’
அதன் பிறகு சிவதாணு விவாதிக்கவில்லை.
சில மாதங்கள் கழிந்தன.
“என்னங்க!’’ என்றவாறு அருகில் வந்த மனைவியை ஏறிட்டார் மகேந்திரன்.
“நல்ல வெயில் காலம்ங்க. இப்ப வத்தல், அப்பளம், வடகம் நெறய போட்டுத் தர்றேன். அதைக் கொண்டு போயி உங்களுக்குத் தெரிஞ்ச கடைகள்ல மொத்தமா சலுகை விலைல போட்ருங்க. உங்களுக்கும் பொழுது போகும். நமக்கு சம்பாத்தியமும் ஆச்சு’’ என்றாள் பர்வதம்.
ஒரு வாரத்திலேயே எல்லாம் தயாராகி பாக்கெட்டுகளில் அடைத்து, ஒரு பெரிய கட்டைப் பையில் ரகம் வாரியாக சைக்கிளில் வைத்துக்கொண்டு போனார் மகேந்திரன்.
கண்ணில் தென்பட்ட ஒரு கடையில் நின்றார். கடைக்காரன் மருதுபாண்டியும் ஓரளவு தெரிந்தவன்தான். ‘‘வாங்க சார்!’’ என்றான் அவன்.
‘‘நிறைய வடகம், அப்பளமெல்லாம் கொண்டாந்துருக்கேன். நீங்க இதை ஒங்க கடைல வச்சு வித்துக் குடுக்கணும்...’’ என்றார் மகேந்திரன்.

‘‘புதுசா தயாரிக்கிறீங்களோ?’’
“ஆமா! என் வீட்டுக்காரியோட கைப்பக்குவம். அருமையா தயாரிப்பா. வறுத்துச் சாப்பிட்டா அப்பத் தெரியும் டேஸ்ட்!’’
‘‘நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். ஆனா, நம்ம ஜனங்க புது தயாரிப்புனா துணிஞ்சு வாங்கமாட்டாங்களே!’’
‘‘நீங்க எடுத்துச் சொல்லுங்க தம்பி!’’

‘‘என்னத்தை எடுத்துச் சொல்றதுங்க. பிரபலமான கம்பெனின்னா அவனோட விளம்பரச் செலவு, சம்பளச் செலவுன்னு எல்லாத்துக்கும் சேர்த்து அதிக விலைதான் வைப்பான். உங்களை மாதிரி சின்ன அளவுல புதுசா பண்றவங்க பக்குவமா தயாரிச்சு குறைஞ்ச விலையில தருவீங்கன்னு எங்களுக்குத் தெரியும். ஆனா, அதைச் சொன்னா நம்ம மக்கள் எங்கே புரிஞ்சிக்கிறாங்க? நீ என்ன அந்தக் கம்பெனிக்கு விளம்பர ஏஜென்ட்டானு கேக்கறாங்க’’ என்று ஒரு பாக்கெட்டைக் கூட வாங்க மறுத்துவிட்டான் மருதுபாண்டி.

தான் சொன்ன வாசகங்களே தன்னிடம் திரும்பி வருவதை எண்ணிக் குமைந்தபடி வீடு திரும்பினார் மகேந்திரன்.