இசை





நாரத கான சபையில் சிக்கில் குருசரண் கச்சேரி. ‘ஸ்வாமி நீ’ என்ற ஸ்ரீரஞ்சனி ராகத்தில் பாபனாசம் சிவன் எழுதிய பதவர்ணத்தைப் பாடி கச்சேரியைத் தொடங்கினார். கச்சேரிக்கு வர்ணம் முதலில் பாடுவது ரொம்ப அவசியம். முதலில் இருந்து மங்களம் வரைக்கும் நிகழ்ச்சி வர்ணஜாலமாக இருக்கப் போவதை முதலிலேயே வர்ணத்தில் காட்டி விடலாம். அதோடு, ‘கேன்டீன்லேர்ந்து எல்லாரும் அரங்கத்துக்குள்ளே வரணும்’ என்பதையும் அது பூடகமாகச் சொல்லி விடும்.

குருசரணுக்கு மைசூர் மஞ்சுநாத் வயலின். அவர் தொட்ட இடமெல்லாம் வயலினில் ஸுஸ்வரம். ஏற்கனவே குருசரண் குரல் இனிமை. வயலினோடு சேர்ந்து இரட்டைப் பாட்டு கேட்பது போலவே இருந்தது. நம் மக்கள் குடியேறி இருக்கும் உலகத்தின் எந்த மூலையில் நடன அரங்கேற்றமோ, கச்சேரியோ நிகழ்ந்தாலும், அதிலெல்லாம் இந்த ‘ஸ்வாமி நீ’ பதவர்ணம் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. ‘இந்த பராகா’ என்ற மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த கீர்த்தனையை குருசரண் ஆரம்பித்த உடனேயே செம்மங்குடி மாமா நினைவுக்கு வந்தார். அந்தப் பாட்டை செம்மங்குடி பாடாத மேடையில்லை. குருசரண் பாடிய ஸ்வரங்களுக்கு திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கத்தில் மாயாஜாலம் காண்பித்தது பரம சௌக்கியம். மீசு கிருஷ்ண ஐயர் என்ற ஒரு சாகித்ய கர்த்தா இருந்தார். சதாசிவ ப்ரம்மேந்திராளுடைய பரம பக்தர் அவர். கிருஷ்ண ஐயர் இயற்றிய பாடல்கள் பலவற்றை ஆலத்தூர் வெங்கடேச ஐயர் ஸ்வரப்படுத்தி இருக்கிறார். அவருடைய ‘பரமபாவனா’ என்ற ரஞ்சனி ராகக் கீர்த்தனையை குருசரண் பாடியது சிறப்பு.

குருசரண் அன்று கோகிலப்ரியா ராகத்தை மெயினாக எடுத்துக்கொண்டார். இது 11வது மேளகர்த்தா ராகம். ‘கோகிலராவம்’ என்று இந்த ராகத்தை முத்துஸ்வாமி தீட்சிதர் வழியில் கூறுவார்கள். வயலினில் மஞ்சுநாத் ப்ரியமுடன் அதை வாசித்தார். ‘தாசரதே’ என்ற தியாகராஜர் கீர்த்தனையை குருசரண் பாட, வைத்தியநாதன் மிருதங்கத்திலும், கிரிதர் உடுப்பா கடத்திலும், குருசரண் எந்தப் போக்கில் கோகிலப்ரியாவை சுவையாகப் பாடினாரோ, அதே நோக்கில் வாசித்தது சிறப்பு.

அந்தக் காலத்து வித்வான்கள், தங்கள் சமகாலத்து வித்வான்களை மதித்தார்கள். ஏதாவது ஒரு ராகத்தையோ, பாட்டையோ ஒரு வித்வான் பிரபலப்படுத்தி, ரசிகர்கள் அதை விரும்பிக் கேட்க ஆரம்பித்தால், ‘அந்தப் பாட்டு அவருடைய சொத்து’ என்று தீர்மானித்து, தான் அதைப் பாடாமல் கண்ணியமாக இருந்த காலம் உண்டு. ‘ஸரஸஸாமதான’ கீர்த்தனையை மதுரை மணி ஐயர் பிரபலப்படுத்திய பிறகு, முன்னாடியே பாடிக்கொண்டிருந்த வித்வான் அதைப் பாடுவதை நிறுத்தி விட்டார். அரியக்குடி என்றால் ‘கார்த்திகேய’, ஜி.என்.பி என்றால் ‘தாமதமேன்’, முசிறி சுப்ரமணிய ஐயர் என்றால் ‘திருவடி சரணம்’, மதுரை மணி ஐயர் என்றால் ‘ஸாரஸமுகி’, செம்மங்குடி என்றால் ‘ராமநீ ஸமான’... இப்படி கீர்த்தனைகளுக்கு தனி கௌரவம் தரப்பட்டது. இப்போது நாகநந்தினி ராகம் ஒருத்தர் பாடி முடித்த அடுத்த நாளே அது யூ டியூப்பில் வந்துவிடுகிறது. இன்னொருவர் அதைக் கேட்டுவிட்டு, ‘இந்த அபூர்வ ராகத்தை நான்தான் முதலில் பாடுகிறேன்’ என்று அறிவித்து பாடும் காலம் ஆகிவிட்டது இது.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபையில் காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரி. ‘ஸரஸிஜநாப’ வர்ணத்தை நாட்டை ராகத்தில் ஆரம்பித்தபோது இருந்த விறுவிறுப்பு ராஜபாட்டையாக கடைசி வரை தொடர்ந்தது. ‘ஆண்டவனே உன்னை’ ஷண்முகப்ரியா ராக கீர்த்தனை தொடர்ந்து கச்சேரியை மெருகேற்றியது. ‘தாண்டவமாடும்’ என்ற இடத்தில் நிரவல். நிஜமாகவே ஆடியது மைசூர் ஸ்ரீகாந்த் வயலினில் வாசிக்கும்போது! நிரவலிலேயே எல்லா தாண்டவமும் வந்துவிட்டதால், நேரே கீர்த்தனையை முடித்து ‘ஆனந்த நடன ப்ரகாசம்’ கீர்த்தனைக்குச் சென்றார் காயத்ரி. மனோஜ்சிவா மிருதங்கமும் ஆலத்தூர் ராஜகணேஷ் கஞ்சிராவும் சரியான பக்கபலம். எந்த சபையில் இந்த தீட்சிதர் கீர்த்தனையைப் பாடினாலும், சிதம்பரத்தில் இருக்கிற சித்சபைக்கு நேரே அத்தனை பேரையும் கொண்டு நிறுத்துகிற அளவுக்கு அந்தப் பாட்டுக்கு ஒரு மகிமை. சித்சபை, கனகசபை என்று சிதம்பர நடராஜர் இருக்கும் இடத்தின் மகிமையை முத்து ஸ்வாமி தீட்சிதர், பஞ்சபூத ஸ்தல கீர்த்தனையாகப் பாடியுள்ளார். இந்த கேதார ராக கீர்த்தனை விசேஷமானது.



‘சந்த்ரஜ்யோதி’ ராகத்தை பாடப்போகிறேன் என்று காயத்ரி சொன்ன உடனே, வந்திருந்த எல்லோருக்கும் முகம் சந்திரன் போல மலர்ந்தது. அன்று மோகன ராகத்தை அவர் பாடின விதம் அருமை!
நாரத கான சபையில் அபிஷேக் ரகுராம் கச்சேரி. அலாதி கற்பனை. அற்புதமான குரல் வளம். சின்ன வயதிலேயே அப்படி ஒரு ஞானம். அவர் வந்த பரம்பரை அப்படிப்பட்டது. ‘அலகுல’ சங்கராபரண கீர்த்தனையோடு கச்சேரி ஆரம்பம். இது அன்னமாச்சார்யா எழுதிய அருமையான சாகித்யம். அனந்த கிருஷ்ணன் மிருதங்கம் நர்த்தனம் ஆடியது. அன்றைக்கு அபிஷேக்கின் பைரவி ராகம் ரொம்ப சிறப்புதான். மைசூர் ஸ்ரீகாந்த் வயலினில் அமர்க்களமாக வாசித்தார். ‘ஜனனி மாமவ’ என்ற ஸ்வாதித் திருநாள் கீர்த்தனை கேட்டு நீண்ட காலம் ஆகிறது. ஸ்வரம் பாடும்போது, ச்யாமா சாஸ்திரியின் பைரவி ஸ்வர ஜதி ஸ்வரங்களை அபிஷேக் கையாண்டது அழகாகத்தான் இருந்தது. நாகநந்தினி ராகத்தை விஸ்தாரமாக அபிஷேக் பாடி, தியாகராஜர் கீர்த்தனையைப் பாடியது ரொம்ப விசேஷம். அபிஷேக், அனந்தா கூட்டணி வெற்றிக் கூட்டணிதான்.

கிருஷ்ண கான சபையில், லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தத்தின் மகளான அனுராதா ஸ்ரீதரின் வயலின் இசை. லால் குடியின் பாணியே ஒரு சுகமான அனுபவம்தான். அனுராதாவின் வயலின் இசையில் ராகம், ஸ்வரங்கள் எல்லாம் விஸ்தாரமாக, அறிவுபூர்வமாக, மனதைத் தொடக்கூடியதாக இருந்தன. ‘அநுபம குணாம்புதி’ அடாணா ராகத்தில் அமைந்த கீர்த்தனையோடு ஆரம்பித்தார். கல்யாண வசந்தம், ஹமீர்கல்யாணி ராகங்கள் காலை வேளையில் கேட்க சுகமாக இருந்தது. ‘தூமணி மாடத்து’ என்ற ஆண்டாள் திருப்பாவையை ஹமீர் கல்யாணி ராகத்தில் கேட்க ரசிகர்கள் கொடுத்து வைத்திருந்தார்கள். ‘தோடி ராகம்’ அசல் லால்குடி ரகம். ‘நிந்நே நம்மி’ கீர்த்தனையின் சங்கதிகள் அருமை. ரமேஷ் மிருதங்கத்தில் அருமையாக வாசித்து கூடவே வந்தார். நளினகாந்தி ராகத்தில் ராகம், தானம், பல்லவி. காலை ராகங்களாக பௌளி, கானடா, சுநாத விநோதினி ராகங்களில் ராகமாலிகை ஸ்வரங்கள். பிறகு முத்தாய்ப்பாக லால்குடியின் ‘மிச்ர சிவரஞ்ஜனி’யின் தில்லானா. ஒரு நிறைவான, நிம்மதியான, மனதைத் தொடும்படியான கச்சேரி, அனுராதாவின் வயலின் இசை.

ராகினிஸ்ரீ புகழ்வாய்ந்த இளம் பாடகி. அவரது மடியான கச்சேரி மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபையில். கல்யாணி வர்ணம், ‘கரிமுக வரத’ நாட்டை ராகத்தில் ஜி.என்.பி கீர்த்தனை, ஹிந்தோளத்தில் பாபனாசம் சிவனின் ‘மாரமணன்’, அழகாக கரஹரப்ரியாவில் ராகம் தானம் பல்லவி, சதுச்ர ஜாதி திரிபுட தாளம், திச்ர நடையில் பாடியது ரொம்ப சிறப்பு. நல்ல குரல், தாளக்கட்டு என்று சிறப்பு அம்சங்கள் ராகினி பாட்டில். பாட்டுக்கு நடுவில் சாப்பாட்டு அயிட்டமும் தேவையாகத்தான் இருக்கிறது. சபா என்று சொன்னால், இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றுதான். மீனாம்பிகை கேட்டரிங் வாழைப்பூ வடை, நம்மை வசப்படுத்தி இழுக்கத்தான் செய்கிறது.
படங்கள்: புதூர் சரவணன், தமிழ்வாணன்