எழுத்தாளர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?
சமீபத்தில்
‘உயிர்மை’யின் ஒரு நூல் வெளியீட்டு விழா பலரையும் ஆச்சரியத்திற்கும்
குழப்பத்திற்கும் ஆளாக்கியது. சிவகாமியின் புதிய நாவல் பற்றிப் பேச
ஜெயமோகன் அழைக்கப்பட்டிருந்தார். ‘உயிர்மை விழாவில் ஜெயமோகனா?’ என்று
ஆளாளுக்கு விசாரித்தார்கள். உண்மையில் பலரும் என்னை ஒரு சதிகாரனைப்
பார்ப்பது போல பார்த்தார்கள். இந்த சதிகாரன் இமேஜ் எனக்கு நீண்டகாலமாக
இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் நடத்தும் ஏதாவது ஒரு கூட்டம்
பிரச்னையில் முடிவது வழக்கம். யாராவது ஒருவர் துப்பட்டாவை எறிவார்; அல்லது
மேடையிலேயே புத்தகத்தைக் கிழிப்பார். யாராவது தனது ஜென்மப் பகையைத்
தீர்த்துக்கொள்ள தனது துருப்பிடித்த வார்த்தைக் கருவி ஒன்றை யார் மீதாவது
ஏவுவார்கள். அந்தப் புத்தகக் கண்காட்சி முழுக்க அதுதான் பேச்சாக இருக்கும்.
கண்காட்சியில் எங்கள் ஸ்டாலில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு
நவீன எழுத்தாளர் ஒருமுறை கேட்டார், ‘‘இவ்வளவு கூட்டத்துக்கு இந்த
சண்டைகள்தான் காரணமா?’’ என்று. இதையெல்லாம் நான்தான் திட்டமிட்டு
உருவாக்குகிறேன் என்று அவர் திடமாக நம்புவது தெரிந்தது.
ஜெயமோகன்
அரங்கத்திற்குள் நுழைந்ததும் என்னுடன் கை குலுக்கினார். ஏதோ ஆச்சரியமான
சம்பவம் போல எல்லோரும் அதைப் பார்த்தார்கள். பலர் புகைப்படம் எடுத்தார்கள்.
எனது புகைப்படக்காரர் பிரபு வேகமாக அந்தக் காட்சியைப் பதிவு செய்தார்.
அவரிடம், ‘‘உங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை
எடுத்துவிட்டீர்களா?’’ என்றேன். வெட்கத்தில் அவர் முகம் சிவந்துவிட்டது.
அன்றைய
கூட்டத்திற்கு வழக்கத்தைவிட அதிகமானோர் வந்திருந்தனர். ஏதாவது நடக்கும்
என்று எதிர்பார்ப்புடன் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒன்றும்
நடக்கவில்லை. ஜெயமோகன் நாவலைப் பற்றி மட்டும் பேசிவிட்டு இறங்கிச்
சென்றார். பலரும் அதற்குப் பின் வெளியேறிவிட்டனர். எனக்கு ஏதோ ஒரு அபத்த
நாடகத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. என் நண்பர் ஒருவர் வந்து, ‘‘என்னய்யா
இப்படி ஏமாத்திப்புட்டீங்க?’’ என்று முனகிக்கொண்டே சென்றார். ‘இலக்கியக்
கூட்டங்கள் எப்போது சர்க்கஸ் கூடாரங்களாக மாறின’ என்று நினைத்துக்கொண்டே
வீட்டுக்கு வந்தேன்.
ஜெயமோகனுக்கும் எனக்கும் நிறைய சண்டைகள்
இருந்தன. இனியும் இருக்கும். அதனால் என்ன? அவர் நான் ஏற்பாடு செய்யும் ஒரு
கூட்டத்திற்கு வருவதோ, இணக்கமாகப் பேசுவதோ ஏன் இவ்வளவு விசித்திரமான
எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும்? எதிர்நிலையில் உள்ள இரண்டு அரசியல்வாதிகள்
சந்தித்துக்கொள்வது போன்றதா இரண்டு எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்வது?
சண்டைகளைப் போலவே சமாதானங்களுக்கும் நம்முடைய காலத்தில் எந்த அர்த்தமும்
இல்லை. எல்லாமே தற்காலிக மனநிலையின் விபத்துகள்; நிறைய நேரம் சண்டைதான்
நினைவில் இருக்கிறது. சண்டைக்கான காரணங்கள் யாருக்கும் நினைவில்
இருப்பதில்லை. என்னிடம் மோசமாகப் பகைத்துக்கொண்ட பல நண்பர்களிடம், ‘‘ஏன்
என்கிட்ட சண்டை போட்டீர்கள்?’’ என்று ஆறு மாதம் கழித்துக் கேட்கும்போது
என்ன சொல்வதென்று தெரியாமல் மோட்டுவளையைப் பார்ப்பார்கள்.
பொதுவாக
எழுத்தாளர்கள் சீக்கிரம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சந்தேகப்பிராணிகள்.
தான் எப்போதும் துரோகத்திற்கும் அவமானத்திற்கும் புறக்கணிப்பிற்கும்
ஆளாவதாகத்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.
எழுத்தாளனிடம்தான் எந்த உணர்ச்சியையும் தீவிரமாகச் சொல்வதற்கான சொற்கள்
இருக்கின்றனவே. நினைத்த மறுகணம் அதற்கு ஒரு இரும்புக் குண்டைப் போன்ற
வடிவம் கொடுத்துவிடுகிறார்கள். முன்னரெல்லாம் கோபம் வந்தால் அதை
வெளிப்படுத்த ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். சிறுபத்திரிகைகள் அந்த கால
இடைவெளியில்தான் வரும். வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றவர்கள் எல்லாம்
எவ்வளவு பொறுமையுடன் காத்திருந்து சண்டை போட்டிருப்பார்கள் என்று
நினைத்தாலே கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. இப்போது இணையதளங்களும் சமூக
வலைத்தளங்களும் யாரும் நிதானிக்க எந்த அவகாசமும் தருவதில்லை.
சினிமாவில்
சண்டைக் காட்சிகளை ரசித்துப் பார்க்கிற, தெருவில் மோடிமஸ்தான்
வித்தைகளுக்கு கை தட்டுகிற ஒரு கும்பல் நைசாக வாசகர்கள் என்கிற போர்வையில்
இலக்கியத்திற்குள்ளும் வந்துவிட்டது. அவர்கள் எழுத்தாளர்களின் சண்டைகளுக்கு
கைதட்டத் தொடங்கினார்கள். எழுத்தாளன் கைதட்டல்களின் ஓசையை முதன்முறையாகக்
கேட்பவன் என்பதால், இந்தச் சத்தம் அவனைக் கொஞ்சம் குழப்பமடைய
வைத்துவிட்டது. கைதட்டல் ஒரு போதை. இப்படித்தான் எழுத்தாளர்களின் கோபதாப
நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் புனிதப் பணியைப் பலரும் ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் வாசகர்கள் அல்ல. எழுத்தாளனின் சின்னப் புகழை அண்டி வாழ
விரும்புகிறவர்கள். அவனது இடத்தின் முக்கியத்துவத்தின் வழியே தங்களுக்கு
ஒரு சிறிய முக்கியத்துவத்தை உருவாக்கிக்கொள்ள முடியாதா என்று தவிப்பவர்கள்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு எழுத்தாளனை சண்டைக்கோழியாக எப்படி
தயாரிக்கிறார்கள் என்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
இந்தச்
சூழல் அவலமானது. இதனால் உண்மையான ஒரு வாசகன் மனதளவில் ஆழமாக
காயப்படுகிறான். எழுத்தாளனை, எழுத்தை தெய்வமாக வணங்கும் ஒரு பண்பாடு இது.
இதற்குள் நடக்கும் அற்பத்தனமான சண்டைகளும் அவதூறுகளும் ஒரு வாசகனை
மனமுடையச் செய்கின்றன. ‘‘ஏன் சார் இப்படி சண்டை போட்டுக்கிறீங்க?’’ என்று
பல வாசகர்கள் என்னிடம் கேட்கும்போது உண்மையிலேயே அவமானமாக
இருந்திருக்கிறது.
என்னோடு நெருக்கமாக இருந்து, எந்தக் காரணமும்
தெரியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டுபோன பல எழுத்தாள நண்பர்கள் பற்றி
அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். ஜெயமோகனோ, சாரு நிவேதிதாவோ, யுவன்
சந்திரசேகரோ, பிரபஞ்சனோ, இன்னும் யார் யாரெல்லாமோ எனக்கு வெறும் நபர்கள்
அல்ல. அவர்களின் எழுத்துக்களின் ஊடாகத்தான் நான் அவர்களுடனான பிணைப்புகளை
உருவாக்கிக்கொண்டிருந்திருக்கிறேன். நபர்களுடன் சண்டையிட்டுக்கொள்ளலாம்.
ஆனால் ஒரு எழுத்தாளனின் எழுத்துகள் தரும் அந்தரங்கமான பிணைப்புகளை எப்படி
வெட்டி எறிவது? நான் எதற்காகவோ மனமுடைந்து கண்ணீர் விடுகிற ஒரு
சந்தர்ப்பத்தில் அந்தத் தருணத்திற்கு உரிய வாக்கியமாக, நான்
சண்டையிட்டுக்கொண்ட எழுத்தாளன் ஒருவனின் சொல்தானே எனக்கு நினைவுக்கு
வருகிறது?
நிறைய இலக்கியக் கூட்டங்களில் இளம் எழுத்தாளர்களிடம் ஒரு
குணம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறேன். அவர்கள் யாருடன்
வந்திருக்கிறார்களோ அவர்களைத் தவிர யாருடனும் பேசுவது இல்லை. கண்ணுக்குத்
தெரியாத ஒரு வெறுப்பின் திரை எல்லோர் முன்பும் எல்லோரைப் பற்றியும்
விழுந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தமிருக்கிறது?
அவசியமிருக்கிறது? இந்தப் பகையுணர்ச்சியில் தனது வெற்று ஈகோ ஒரு கணம்
விம்மித் தணிவதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்கிறது? வாழ்க்கையில்
எங்கெல்லாமோ சொந்த ஆதாயங்களுக்காக எப்பேர்ப்பட்ட கீழ்மைகளோடும் சமரசம்
செய்துகொள்பவர்கள் தனது சக படைப்பாளியைக் கண்டதும் தார்மீக குண்டாந்தடியைத்
தூக்குவதுதான் பெரும் வேடிக்கை.
எனது சக கவிஞன் ஒருவன் தற்செயலாக
எதிர்ப்பட்டுவிட்டால் எந்த மனச்சிக்கலும் இல்லாமல் ஒரு ஹலோ சொல்வதுதான்
இப்போது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பிரச்னை.
டிபன் பாக்ஸும்
துப்பாக்கியும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்கள் தங்களை
எப்படியெல்லாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆளாளுக்கு படு பயங்கரமாக
யோசனைகள் எல்லாம் சொல்லி வருகிறார்கள். பெண்கள் அனைவரும் ‘சேஸ்டிடி பெல்ட்’
போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லாததுதான் பாக்கி. ஆனால் இவற்றில் ஒரு
யோசனை என்னை மிகவும் கவர்ந்தது. புனே நகர போலீஸ் கமிஷனர், பெண்கள்
எப்போதும் கையில் ஒரு சிறிய கத்தியும் கொஞ்சம் மிளகாய்ப் பொடியும்
வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்தியாவில்
ரேப்பிஸ்டுகள் செயல்படும் வேகத்தைப் பார்த்தால், ஒரு அம்மா தனது பெண்
வீட்டை விட்டுக் கிளம்பும்போது கையில் டிபன் பாக்ஸுடன் ஒரு பிஸ்டலையும்
கொடுத்தனுப்பும் காலம் வெகு துரத்தில் இல்லை.
ஒரு விளம்பர நற்செய்தி
சமீபத்தில் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர வாசகம்,
‘கட்டாமலேயே வச்சுக்கலாம்’. திருமணமான ஆண்கள் இந்த விளம்பரத்தை எவ்வளவு
ஏக்கத்துடன் பார்க்கிறார்கள் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது.
(இன்னும் நடக்கலாம்...)
நான் படித்த புத்தகங்கள்‘கேட்டிருப்பாய்
காற்றே’ என்று மனம் கசந்து கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்களின் அவல
வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த
முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும்
வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம்-பர்மா ரயில் பாதை
அமைப்பதற்காக கூலிகளாக ஜப்பானியர்களால் கொண்டுசெல்லப்பட்ட பல ஆயிரம்
தமிழர்கள், அந்தப் பணியில் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதை இந்த இரண்டு
நூல்களும் மனம் பதைக்கச் செய்யும் வகையில் விவரிக்கின்றன.
இரண்டாம்
உலகப்போரில் பர்மா, சயாம், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளைக்
கைப்பற்றிய ஜப்பான், இந்தியாவின்மீது தாக்குதல் தொடுக்க விரும்பியது.
இதற்கு ஜப்பானிலிருந்து படைகளைக் கடல் வழியாகக் கொண்டுவர நீண்ட காலம்
பிடிக்கும். எனவே சயாமிலிருந்து பர்மா வரை 416 கிலோ மீட்டர் தூரத்திற்கு
அது குறுகிய காலத்தில் ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது. ஐந்தாண்டுகள்
செல்லக்கூடிய இந்தப் பணி 16 மாதங்களில் முடிக்கப்பட்டது. இந்தப் பணியில்
சுமார் இரண்டரை லட்சம் பேர் இறந்துபோயினர். சரியாக வேலை செய்யாதவர்களை
ஜப்பானியர்கள் கொன்றனர். கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கினர். இந்தத்
திட்டத்தில் வேலை செய்தவர்களில் 60 சதவீதத்தினர் தமிழர்களே. இந்த இரண்டு
நூல்களுமே மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் போர்க் குற்றம் குறித்த
சாட்சியம் சொல்கிறது.
(சயாம்-பர்மா மரண ரயில் பாதை - விலை ரூ.130/-,
சயாம் மரண ரயில் - விலை ரூ.150/-, வெளியீடு: தமிழோசை பதிப்பகம், 21/8
கிருஷ்ணா நகர், மணியக்காரம்
பாளையம் சாலை, கணபதி, கோவை-641 012. அலைபேசி: 9788459063.)
எனக்குப் பிடித்த கவிதைதொட்ட இடத்தைத்
துடைத்து விடலாம்
முத்தமிட்ட வாயைக்
கொப்பளிக்கலாம்
கலந்த உடம்பைக்
குளித்துக் கழுவலாம்
உணர்வு கலந்த
குருதி முழுதையும்
சாத்தியப்படுமோ
சலவை செய்வது?
- இன்குலாப்
மனுஷ்ய புத்திரனின்
ஃபேஸ்புக் பக்கம்போகிற
போக்கைப் பார்த்தால் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு
காவல்துறையிடமிருந்து டெய்லர்களிடம் மாற்றப்பட்டுவிடும் என்று தோன்றுகிறது.