அஜித், விஐய்கூட நடிக்க மாட்டேன்னூ சொன்னேனா?





‘‘விஜய், அஜித், விக்ரம், சூர்யாவுடன் நடிக்க மாட்டேன்...’’ என்று லஷ்மி மேனன் ஏதோ பேட்டியில் சொன்னதாக வெளியான தகவல், தல - தளபதி ரசிகர்களை சூடேற்றியுள்ளது. ‘‘என்ன லஷ்மி, வளர்ந்து வர்ற நேரம் பார்த்து இப்படிச் சொல்லியிருக்கீங்களே?’’ என்று கொக்கி போட்ட நம்மிடம், கொதிக்கத் தொடங்கினார், முட்டைக் கண்ணழகி.

‘‘நீங்க சொல்லித்தான் இந்த செய்தியே எனக்குத் தெரியுது. யாராவது அப்படி சொல்லுவாங்களா? எந்த ஒரு நடிகையோட வாயிலிருந்தும் தப்பித் தவறிக் கூட அப்படியொரு வார்த்தையே வராது. தமிழ்ல நடிக்க வர்ற ஒவ்வொரு நடிகையோட கனவும், அவங்க கூட நடிக்கணும்ங்கறதாதான் இருக்கும். நானும் எத்தனை நாளா அதுக்காக ஆசைப்பட்டுட்டு இருக்கேன் தெரியுமா? இப்போ நான் ஸ்கூல் போய்க்கிட்டே நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாளைக்கே அவங்க ஜோடியா நடிக்க வாய்ப்பு வந்தா, ஸ்கூலை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு ஓடி வந்துடுவேன். அப்படி ஆசையோட இருக்கற நான், அது மாதிரி சொல்லியிருப்பேனா? மீடியாவில சில பேர் இப்படித்தான் சொல்லாததையெல்லாம் எழுதிடுறாங்க.

அதுக்காக நான் கவலைப் படல. எழுதுறவங்க எப்படி வேணும்னாலும் எழுதட்டும். நான் எதுவும் செய்யப் போறதில்ல. சொல்லப் போறதில்ல. ஷூட்டிங் இருக்கும்போது மட்டும்தான் சென்னை வர்றேன். முடிச்சிட்டா அடுத்த நிமிஷமே கிளம்பி கேரளா வந்துடுவேன். வீடு, ஸ்கூல், படிப்புன்னு பொறுப்பான பொண்ணா இருக்கேன். இங்க பாரதிய வித்யா பவன் ஸ்கூல்ல படிக்கிறேன். தமிழ் நல்லா தெரியும். தமிழ் பத்திரிகைகள் அத்தனையும் படிச்சிடுறேன். என்னோட பேட்டி இல்லேன்னாலும், தமிழ் இண்டஸ்ட்ரி பற்றி படிச்சி தெரிஞ்சுக்கிறேன்.’’

‘‘ஆரம்ப ஸ்டேஜிலேயே கிசுகிசு வர்றதை நல்லதுக்குன்னு நினைக்கிறீங்களா?’’
‘‘இது சில நேரம் நல்லதாவும் அமையும், சில நேரம் கெட்டதாவும் அமையும். என்னைப் பொறுத்தவரை நான் பாஸிட்டிவாதான் எடுத்துப்பேன். நான் பாப்புலரா இருக்கறதாலதானே எழுதுறாங்க. ஸோ, கெட்டதா நினைக்க முடியாது. என்ன நடக்குதுன்னு வருங்காலத்துல பார்க்கலாம்’’ என்னும் லஷ்மியின் பேச்சில் ஒரு பக்கம் பக்குவத்தின் முகம். இன்னொரு பக்கம் பாஸ்பரஸின் கொதிப்பு.
‘‘அடுத்த கமிட்மென்ட்?’’

‘‘சசிகுமார் சாரோட ‘குட்டிப்புலி’ பண்றேன். கேரக்டர் பேரு பாரதி. இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். இன்னும் சில நல்ல ஸ்டோரிஸ் சொல்லியிருக்காங்க. எதையும் இன்னும் ஃபைனல் பண்ணல. ‘குட்டிப்புலி’யில் சொந்தக் குரல்ல பேச ஆசைப்படுறேன். ஆனா, சசி சார் கையிலதான் முடிவு இருக்கு’’ - கொஞ்சும் குரலில் சொல்லி முடிக்கிறார் லஷ்மி மேனன்.
இந்தக் குரலுக்கென்ன... இது மும்பை வரைக்கும் பேசுமே!
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்