நையாண்டி
கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைப் பார்ப்பதை விட பரவசமானது ஒரு பெண் ஆபீஸ் கிளம்புவதைப் பார்ப்பது. குளித்து முடித்து காய வைத்த கூந்தல், பள்ளிக் குழந்தைகள் போல சொல் பேச்சு கேட்காது. முதலமைச்சருக்குக் கூட மூன்றடுக்கு பாதுகாப்பு இருக்குமா தெரியாது, ஆனா ஒவ்வொரு பொண்ணோட முகத்துக்கும் சோப்பு, முக அழகு கிரீம் மற்றும் பவுடர் என நிச்சயம் மூன்றடுக்கு பாதுகாப்பு உண்டு. பொய் பேசுதோ... மெய் பேசுதோ... நிச்சயம் அந்தக் கண்கள் ரெண்டும் மையோடும் மஸ்கராவோடும் பேசும்.
அவர்கள் சென்ட் அடிப்பது, பூவுக்கு பாடி ஸ்ப்ரே அடிப்பது போல. உதடு சிவக்க பெண்கள் போடும் லிப்ஸ்டிக்கினால் உதடு சிவப்பாகிறது என்பது பொய், உண்மையில் அவர்கள் உதடு பட்டே அந்த உதட்டு சாயங்கள் சிவப்பாகின்றன. எல்லா மேக்கப்பும் முடிந்தது, முகத்தில் அழகு கவிதை எழுதியாச்சு என்பதைத் தெரிவிக்க வைக்கப்படும் முற்றுப்புள்ளியே நெற்றிப் பொட்டு. சென்னையில் நம்மைப் போன்றவர்களுக்கு புரியாத விஷயம் என்னவென்றால், இந்தப் பெண்கள் அவ்வளவு நேரம் அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் பண்ணிட்டு, அப்புறம் எந்த லாஜிக்கோடு முகத்தை கர்சீப்பாலும் துப்பட்டாவாலும் மூடிக்கொண்டு வெளியே கிளம்புகிறார்கள்?
* ஒரு பையனும் பொண்ணும் ஒண்ணா டூவீலர்ல போறதப் பார்த்தா உங்களுக்கு நெஞ்சுக்கு கீழ இடுப்புக்கு மேல எரிச்சலா இருக்கா? * ரேஷன் கடை முதல் டிரெயின் டிக்கெட் வரை க்யூவில் காத்து நிக்கிறது பழகிப் போச்சா? * டச் ஸ்க்ரீன் போனுக்கு பதிலா கீ பேட் வச்ச மொபைல் போன்தான் பயன்படுத்தப் புடிக்குதா? * புதுப் பட திருட்டு விசிடிய கூட படம் வந்து நாலு வாரம் கழிச்சுத்தான் வாங்கிப் பாக்கறீங்களா? * மேனேஜர்கிட்ட உண்மையான காரணங்கள் சொல்லித்தான் ஆபீசுக்கு லீவு கேட்கறீங்களா? * ஊட்டி, கொடைக்கானல் தவிர வேறு எந்த சுற்றுலா தளமும் உங்களுக்கு ஞாபகம் வர்றதில்லையா? * பிளாஸ்டிக் தண்ணி பாட்டில் வாங்கி குடிச்சதுக்கு அப்புறம் காலி பாட்டில வீட்டுக்குக் கொண்டு போறீங்களா? * வீட்டுக்குப் போன உடனே, தேவையில்லாம எரியுற லைட், மின்விசிறிய அணைக்க கை போகுதா? * வீட்டைப் பூட்டிய பிறகு பூட்டையும் தாழ்ப்பாளையும் நாலு தடவ இழுத்துப் பார்க்கத் தோணுதா? * மனசு, மாசா மாசம் மளிகை சாமான் லிஸ்ட்ல இருந்து நூடுல்ஸ், ஹேண்ட் வாஷ் போன்றவற்றைத் தூக்க நினைக்குதா? * இப்பவெல்லாம் பெட்ரோல் ரிசர்வா இருக்கிற மாதிரி டூவீலர ஓட்டுறதில்லையா? * ஐஸ்கிரீம் என்ற வஸ்துவை கல்யாண விசேஷ வீடுகளைத் தவிர வேற சமயம் வாங்கி சாப்பிடுறதில்லையா? * ஹேர் ஸ்டைல் எக்கேடு கெட்டா என்னன்னு நினைப்பு வந்திடுச்சா? வாழ்த்துகள், நீங்கள் அங்கிள் (அ) ஆன்ட்டி ஆயிட்டீங்க! 40 வயசுல நாய் குணம் வராம, நல்லா வாழுங்க...
இந்த வார குட்டிச்செவுரு போஸ்டர் பாய்... கடலை வித்தே 27,000 கோடி ரூபாய் அமெரிக்க கடன் பத்திரங்கள் வாங்கி வைத்திருக்கும் தாராபுரம் ராமலிங்கம்! (எல்லாம் நாம பீச்சுல கடலை போட்டுக்கிடே திங்கிற கடலையாலதான்!)
கவாஸ்கர் தோள் மேல இன்னொரு கவாஸ்கர நிக்க வச்ச உசரத்துல இருக்காரு பாகிஸ்தான் அணி பவுலர் முகமது இர்பான். தமிழ்நாடு மின்சார வாரியத்துல வேலைக்கு வந்தார்னா, வீதில நின்னுக்கிட்டே ஃபியூஸ் போன தெரு விளக்க மாத்திடுவாரு போல. அவரு முன்னாடி நம்ம டிண்டா சின்ன நண்டாதான் தெரியிறாரு. நம்ம பேட்ஸ்மேன்கள் எல்லாம் பேட் புடிக்கப் போறாங்களா, இல்ல பஸ் ஸ்டாண்ட் கட்டணக் கழிப்பிடத்தில உச்சா போறாங்களான்னு தெரில. உள்ள போற வேகத்துலயே திரும்பி வந்துடுறாங்க. கவுதம் காம்பீர் நன் ஓடுற வேகத்த பார்த்தா அது லைவ்வா ரீப்ளேவான்னு சந்தேகமா இருக்கு. இந்த பய விராட் கோலி... நாலு விளம்பரத்துல நடிக்கிற வரைக்கும் நல்லாத்தான்யா ஆடுனான். இப்ப, விளம்பரத்துல வர்ற நேரங்கூட மைதானத்துல ஆடுறதில்ல. சொந்தமா ஓட்டல் திறந்துட்ட ஜடேஜா, எவனாச்சும் கல்லாவுல கைய வச்சிருவானோன்னு பதறியே சீக்கிரம் கிளம்பிடுறார் போல. மறைந்த சங்கர் தயாள் ஷர்மா கூட சிக்ஸ் அடிச்சிடுவாரு போல, இந்த ரோஹித் ஷர்மா சிங்கிள் கூட அடிக்கிறதில்லை. சேவாக் ஒரு பழம்பெரும் பேட்ஸ்மேன் ஆயிட்டாரு, சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. என்னய்யா கிரிக்கெட் அணிய எடுத்திருக்காங்க. தேர்வாளர்கள் இந்திய அணிய மாத்துறது இருக்கட்டும்... மொதல்ல இந்திய அணித் தேர்வாளர்கள் அணியவே மாத்தணும்!
எம்.ஜி.ஆர் ஸ்s சிவாஜி, ரஜினி ஸ்s கமல், அஜித் ஸ்s விஜய், தனுஷ் ஸ்s சிம்பு மாதிரி இப்போ இணையம் முழுக்க இசைஞானி இளையாராஜா ஸ்s இசைப்புயல் ரகுமான் ரசிகர்களின் ஜாலி லந்துதான். இந்த தமிழர் திருநாளிலாவது இந்த இரு உன்னதத் தமிழர்களின் வேறுபாடுகளை அறியுங்கள் ரசிகர்களே. தமிழ் சினிமால பாட்டுன்னா அது எப்படி இருக்கணும்னு தமிழர்களுக்குக் காட்டியது இளையராஜா, தமிழ் சினிமால பாட்டுன்னா அது எப்படி இருக்கணும்னு உலகத்துக்கு காட்டியது ரகுமான். தன்னுடைய இசையால் உலகம் முழுக்க தமிழர்களைத் தூங்க வைத்தவர் இளையராஜா; தன்னுடைய இசையால் உலகம் முழுக்க தமிழர்கள் திறமையை ஓங்க வைத்தது ரகுமான். ரகுமான் ஆஸ்கார் தமிழன், இளையராஜா தமிழர்களின் ஆஸ்கார். மொத்ததுல சிம்பிளா சொல்லணும்னா, இளையராஜா சார் வேட்டி கட்டிய ரகுமான், ரகுமான் சார் பேன்ட் போட்ட ராஜா!
மாதம் ஒரு முறையே காணச் சென்றாலும் என்னை வாரி கட்டியணைத்து ஏந்திக்கொள்ளும் இன்னொரு தாய் நீ. புத்தருக்கு போதி மரம், விவேகானந்தருக்கு குமரி பாறை என்பது போல எங்களைப் போன்ற சாமானியர்களின் சிந்தனையில் தீப்பந்தம் கொளுத்தும் சிந்தனை கடல் நீ. ஓட்டு போடும்போது மட்டுமே இந்த இந்திய தேசத்தின் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படும் என்னைப் போன்ற வெட்டி பசங்களுக்கு பொன்னாடை போர்த்தாவிட்டாலும், பழைய பருத்தியாடையாவது போர்த்த வைக்கும் பெருந்தன்மை புரலவன் நீ. எவ்வளவு தலைக்கனத்தோடு வந்தாலும் அதைக் குறைத்து பக்குவப்படுத்தும் வாத்தியார் நீ. உன்னோடு இருக்கும் மணித்துளிகளில் எல்லாம் நான் மிக அழகாய் இருப்பது போல உணர்கிறேன். ஜனநாயக முறைப்படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான் எனினும், எந்த அரசியல்வாதியும் என்னோடு போட்டி போடாத நாற்காலி நீ. அன்பே, சலூன் நாற்காலி! நீயே என்னை துக்கத்திலிருந்து மீட்டு தூக்கத்தில் பறக்க வைக்கும் பலூன் நாற்காலி.
|