மகர ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்






பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் அங்குலம் அங்குலமாக அடிபட்டு வெற்றிகளை சந்தித்ததால் பணம், பட்டம், பதவி வந்தாலும் பகட்டுத்தனமாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல் அதை ஒரு வேள்வியாக எடுத்து நடத்துவீர்கள். சண்டையிட்டுக் கொள்ளும் பெரிய தலைவர்களுக்கிடையே சமயோசிதமாகப் பேசி சமாதானப் பட்டத்தை பறக்க விடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவரை முன்னுக்கு கொண்டு வருவதில் அதிக மும்முரம் காட்டுவீர்கள். அதுவே எதிர்காலத்தில் உங்களுக்கு தர்மசங்கடமாகவும் மாறும்.

உங்களின் கடன், நோய், எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருகிறார். உங்கள் ராசிநாதனான சனிக்கு புதன் நண்பராவார். அதனால் புதன் உங்களுக்கு அவ்வளாக கெடுதல் செய்ய மாட்டார். எதிரிக்குரிய புதன் உங்களின் ஒன்பதாம் இடமான பாக்யாதிபதியாகவும் வருகிறார். அதனால், எதிரி உருவான உடனேதான் வாழ்க்கையே சீரியஸாகும். உங்களிடமிருந்து சக்தி வெளிப்பட வேண்டுமெனில் எதிரி உருவாக வேண்டும். கிட்டத்தட்ட எதிரிதான் உங்களின் உந்து சக்தியாக இருப்பார். நாலு பேர் விமர்சனம் செய்தால்தான் முன்னேறவே ஆசை வரும். மேலும், தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் இடத்திற்கும் புதன் வருவதால் தந்தையை விட்டு அவ்வப்போது பிரிந்து வாழும் சூழ்நிலை வரும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தந்தையைப் பிரிய வேண்டிய சூழல் தொடங்கும். அப்பாவுக்கும் உங்களுக்கும் அதீதமான பாசமெல்லாம் இருக்கும். அதேசமயம் கருத்து மோதல்களும் வந்துபோகும். அப்பாவாக இருந்தாலும் சரி, அண்ணனாக இருந்தாலும் சரிதான்... உங்களை தாழ்த்திப் பேசினால் பிடிக்காது. இதனால் இந்த ராசியில் பிறந்த பிள்ளைகளின் பெற்றோர், பள்ளிப் பருவத்தில் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசாமல் இருத்தல் நல்லது. அது ஆழமான வடுக்களை உண்டாக்கி விடும்.

வித்தைகாரகனான புதன் ஆறாம் இடத்தின் அதிபதியாக வருவதால் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க முடியாமல் போகும். அதேபோல கல்லூரியிலேயே யு.ஜி., பி.ஜி. போன்றவற்றிலேயே சப்ஜெக்ட் மாறிப் படிப்பீர்கள். தாய்மாமனுக்குரிய கிரகமாகவும் புதன் வருவதால் தாய்மாமன் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவார். அவர் நண்பனா, எதிரியா, உதவுபவரா என்றே தெரியாது. ஆனாலும், தாய்மாமனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்கள். என்ன படித்தாலும் சரிதான் 35 வயது வரை அடுத்தவர்களுக்காக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். பிறகுதான் உங்களுக்கானதை நீங்கள் பெறுவீர்கள். பல இடங்களில் சொல்லக் கூடாததை சொல்லி மாட்டிக் கொள்வீர்கள். எதைச் சொல்ல வேண்டுமோ அதை மறந்து விடுவீர்கள். பள்ளியில் படிக்கும்போது காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டு அரசுத் தேர்வுகளில் கோட்டை விடுவீர்கள்.  



போராட்டமெனில் புறமுது கிட்டு ஓட மாட்டீர்கள். பலரின் நலனுக்காக குரல் கொடுக்கும் குணம் இயற்கையாகவே இருக்கும். சில நேரங்களில் அதட்டலாகவும், அலட்டலாகவும் பேசுவீர்கள். உங்களின் ஆறாம் இடம் எனும் கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்ன பிற விஷயங்களை நிர்ணயிப்பவராக மிதுன புதன் வருகிறார். புதன் புத்திக்குரியவராக இருப்பதால் எல்லா விஷயத்தையும் நீங்களே தீர்மானிப்பவராக இருப்பீர்கள். இதனால் கொஞ்சம் அறிவுச் செருக்கு ஏற்படும். அதைக் கொஞ்சம் அடக்கி வைத்தால் இன்னும் நன்கு முன்னேறலாம். ‘‘அவரை நாலு வார்த்தை பாராட்டிட்டா போதும். மயங்கிடுவாரு’’ என்று எளிதாக உங்களை வளைப்பார்கள். ‘உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று யாராவது சொன்னால் நீங்கள் கொதித்தெழுவீர்கள். எந்த உதவியாக இருந்தாலும், கேட்டதை அழகாக செய்து கொடுப்பீர்கள். இதனாலேயே உங்களை பல பேர் சுற்றிச் சுற்றி வருவார்கள். அதில் நல்லோர் யார், தீயோர் யார் என்று பிரித்தறிந்து விலக்க வேண்டும். ஏனெனில், மிகவும் எமோஷனலாக நீங்கள் உங்களை வெளிப்படுத்துவதால் மறைமுகமாக எதிரிகள் உருவாகிய வண்ணம் இருப்பார்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவரை நீங்கள் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.
புதன் கையெழுத்துக்குரிய கிரகமாகும். அதாவது சுயகுறியீட்டிற்குரிய கிரகமாக இதைச் சொல்வார்கள். அதனால் யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தைப் போடாதீர்கள். குறுகிய கால கடன்களுக்கு மட்டும் கேரண்டர் கையெழுத்து போடுங்கள். உதவி செய்ய வேண்டுமென்கிற கட்டாயம் வந்தால் சனிக் கிழமை, புதன் கிழமைகளில் தவிர்த்து விடுங்கள். அல்லது புதன், சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களாக வந்தால் தள்ளிப் போடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் கடன் வாங்கியவர் கட்டாது போய், உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்.

உணவு சார்ந்த விஷயங்களில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், புதன் சட்டென்று வயிற்றை பதம் பார்ப்பார். எந்த ஊரில் என்ன கிடைக்கும்? எது மிகவும் ருசியான பண்டம்? என்கிற விஷயமெல்லாம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் அத்தனை விரிவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதெல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மிகப்பெரிய முடிவையெல்லாம் கோபத்தில் எடுத்து விடக் கூடாது. புதன் சட்டென்று யோசித்து செயல்படும் வேகமான கிரகமாதலால், கோபத்தின்போது தான் விவேகமாக இருக்க வேண்டும். ஏதேனும் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கண்களுக்குத் தொந்தரவாக மாறும்.

மிக முக்கியமாக நிலம், வீடு என்று வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஏனெனில், பூமிகாரகனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே இந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ஒரு சொத்தை வாங்கி, கடனைக் கட்ட முடியாமல் விற்று, மீண்டும் மறுசொத்து வாங்கும்படியான நிலைமை வரும். தங்கத்தை வைத்து பணத்தை கடனாகப் பெற்றால் கடனை சீக்கிரம் அடைப்பீர்கள். சொத்துகளும் விருத்தியாகும். காசோலைகளில் கையெழுத்தை முன்னதாக போட்டு வைத்துக் கொண்டிருக்காதீர்கள். நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு சிக்காதீர்கள்.  

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குரியவராக புதன் வருவதால், ‘தான் சொல்வதுதான் சரி’ என்று இருக்காதீர்கள். அடுத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் வளர முடியும்; அடுத்தவர்களையும் வளர்க்க முடியும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்துப் போகமுடியவில்லையெனில் வீண்பழியை சுமத்தி ஓரம் கட்டுவார்கள். எல்லா விஷயத்திற்கும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்காதீர்கள். புதன் எத்தனை அறிவாளியாக இருந்தாலும், வார்த்தைகளில் கடினமாகப் பேசி அடுத்தவர்களை காயப்படுத்துவார். ‘‘இப்படி பேசலைன்னா சரியா வரமாட்டாங்க’’ என்றும் சொல்ல வைப்பார். மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்; அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள். ஏனெனில், புதன் தன்னுடைய கண்காணிப்பிலேயே எல்லாமும் நடக்க வேண்டும் என்பார். இது உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு குடைச்சலை உண்டாக்கும்.

நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களே நாளைய எதிரிகளாவர். தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைக்கும்போது எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் ஏமாற வேண்டியிருக்கும். ஆரம்ப காலங்களில் எங்கேனும் வேலை பார்த்துக் கொண்டே வியாபாரமும் செய்வீர்கள். பிறகு மாபெரும் நிறுவனங்களையே நடத்துவீர்கள். நீங்கள் கிங்மேக்கராக மாறுவீர்கள். முத்திரைத்தாள் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடுபடுத்துவார்கள். நீங்கள் ஆணாக இருந்தால் பெண் குரல், பெண் சாயலோடு இருக்கும் ஆண்களிடம் எச்சரிக்கையோடும், பெண்ணாக இருந்தால் ஆணின் குரல் மற்றும் சாயலோடு இருக்கும் பெண்களிடம் ஜாக்கிரதையாக நட்பு பாராட்டுங்கள். குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வருமான வரி போன்றவற்றிலெல்லாம் கவனமாக இருங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வந்துவிட்டால் அது அப்படியே இருக்கட்டும். சரியோ தவறோ மாற்றிச் சொல்லிவிட்டோமோ என்று புதன் குழப்பியபடி இருப்பார். ‘சொன்னது சொன்னதுதான்’ என்று உறுதியாக நில்லுங்கள்.

உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். எனவே, உங்களுக்கு ஆறாம் இடமாக புதன் வருவதால், எதிராளியின் பலம் தெரியாது வாதப் பிரதிவாதங்கள் வேண்டாம். புதன் மறைந்திருப்பதால் எங்கு என்ன பேசினாலும் மெதுவாக இடைவெளி விட்டுப் பேசுங்கள். புதனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள். ஆழ்மனதில் அடங்கியிருக்கும் அளப்பரிய ஆற்றலை வீர்யப்படுத்தி வெளிப்படுத்தும் இடமும் ஆறாம் இடமே ஆகும். எனவே, மணற்கேணி ஊற்றுபோல விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக செய்து கொண்டே இருங்கள். பத்தில் ஐந்து விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். யாரும் தொடாத விஷயங்களைத் தொட்டு சாதனை செய்வீர்கள்.

இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அந்த இடத்திற்கு புதன் அதிபதியாவதால் எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை நீங்கள் கவனித்து கண்டுபிடிப்பீர்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால் தொடர்ந்து போராடுங்கள். நெருக்கடியான நேரங்களில், பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து முடிவுகளை எடுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையாக நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள் என்றால், ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள். உங்களின் பிரச்னை தீர்வதை ஆச்சரியமாகப் பார்ப்பீர்கள். நீங்கள் அதிகம் குழம்பினால் அந்த விஷயத்தில் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குழப்பத்தைக் கண்டு பயப்படாதீர்கள்.  

உங்களுக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். ஆனால், தொலைதூரப் பயணமெனில் நீங்கள் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. ஏனெனில், பல வகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும். பழைய வாகனங்களை வாங்காதீர்கள். செகண்ட் ஹேண்ட் வண்டியை வாங்கும்போது விபத்துகள் ஏற்படும்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ புதன் மறைந்தால் நல்லது. இதனால் புதனால் ஏற்படக்கூடுமான மேலே கண்ட பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். சொந்த ஜாதகத்தில் புதனும் குருவும் சேர்ந்திருந்தால், தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருக்கும். யாரும் யாருக்கும் எதிர்பார்த்தபடி இருக்க மாட்டார்கள். பொதுக்காரியங்களில் சட்டென்று ஈடுபடாமல் மறைமுக உதவிகளைச் செய்ய வேண்டும். இதே புதன் சூரியனோடு சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. ஆனால், சந்திரனோடு சேர்ந்திருந்தால் அம்மாவின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.

உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரிதான், அல்லது வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நினைத்தாலும், நீங்கள் செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயமாகும். பொதுவாகவே சனி ஆதிக்கமுள்ளவர்கள் பெருமாளை வணங்குவது நல்லது. அதிலும் சனிக்கு நட்பு கிரகமான புதன் உங்களுக்கு பகையாக வருவதால், மகாக்ஷேத்ரமான காஞ்சியில் அருள்பாலிக்கும் வரதராஜரை வணங்குங்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தை ஆழ்வார்கள் பலர் பாடி பரவியுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு சென்னை மற்றும் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
(தீர்வுகளைத் தேடுவோம்...)