கவிதைக்காரர்கள் வீதி





ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு

தண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும்தானிருக்கிறது
நம்மிரு குடும்பங்களுக்கான மனசு;
என் வீட்டுத் தோட்டத்தைக் காட்டிலும்
அழகான பூக்கள்
உன் வீட்டு வாசலில் மட்டுமே
பூத்துக் கிடந்தன உனக்கு
என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட உனக்கு
உன் வீட்டு ஜன்னல்
வழியே தெரியும் வெளிச்சம்
மிகப் பிரகாசமாக இருந்தது
இங்கே தேனில் அரிசி சமைத்தாலும்
அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து
சிந்தும் சோற்றுப் பருக்கைகூட
உனக்கு இனிப்பாகவே பட்டது
எதற்குத்தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாகக் கட்டப்பட்டதோ
இக் குடும்பத்தின் அன்புச் சங்கிலியென
அழாமல் உடையும் மனசை
விதியென்று
தேற்றிக் கொள்ள முடியவில்லை என்னால்
எங்கேனும் அறுபட்டு
எப்படியேனும் போய்த் தொலையட்டும்
அதற்கான திசையில் என
மௌனமானேன்
அது சாய்ந்து,
அதன் விளக்கு சாய்ந்து,
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கின்றன வீடுகள்