ஏ.ஆர்.ரஹ்மானும் சுஜாதாவும்
‘‘தமிழ்த் திரையுலகில் இளையராஜா கோலோச்சிய ஒரு காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே நுழைந்ததற்கு இணையான ஒரு சம்பவம் தமிழ் இலக்கியத்திலும் நடந்தது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று ஒருமுறை ஒரு நவீன இலக்கிய விமர்சகர் என்னிடம் கேட்டார். நான் அவரையே யோசனையாகப் பார்த்தேன். ‘‘ஜெயகாந்தன் தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்த காலத்தில் சுஜாதா உள்ளே வந்ததுதான் அது’’ என்றார். அந்த ஒப்பீட்டில் இருந்த பல பொருத்தங்கள் என்னை வியப்பிலாழ்த்தின. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழர்களின் இசை கேட்கும் முறையையே மாற்றியமைத்தார் என்றால், சுஜாதா தமிழர்களின் படிக்கும் முறையையே மாற்றியமைத்தார்.
ஒவ்வொரு வருடமும் சுஜாதா பிறந்த தினமான மே 3ம் தேதி அவரது பெயரில் 6 விருதுகளை வழங்கி வருகிறோம். சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, இணையம், சிற்றிதழ் என்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திரா பார்த்தசாரதி ஒருமுறை, ‘‘நாடகத்துறையில் சுஜாதாவின் பங்கு மிகப் பெரியது. எனவே அவர் பெயரில் நாடகத்திற்கான விருது வழங்கவேண்டும்’’ என்றார். பாலுமகேந்திரா, ‘‘வருடா வருடம் சிறந்த திரைக்கதைக்கான விருதை சுஜாதா பெயரில் வழங்க வேண்டும்’’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். சிறந்த அறிவியல் எழுத்திற்கான விருது, சிறந்த துப்பறியும் கதைக்கான விருது, சிறந்த சங்க இலக்கிய ஆராய்ச்சிக்கான விருது, சிறந்த பத்தி எழுத்திற்கான விருது, சிறந்த பத்திரிகையாளருக்கான விருது, சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது, சிறந்த வரலாற்று எழுத்திற்கான விருது என, தன் வாழ்க்கையில் எந்த அதிகாரபூர்வ விருதையும் பெற்றிராத சுஜாதாவின் பெயரில் வழங்க என்ன விருதுதான் இல்லை?
ஒரு முழுமையான எழுத்தாளன் என்பவன் ஒரு முழுமையான விளையாட்டு வீரனைப்போல. ஒரு விளையாட்டு வீரனுக்கு தன்னுடைய உடல் மீதும் மனம் மீதும் குவியும் அந்த இடையறாத தீவிரமே ஒரு எழுத்தாளனுக்கு தனது சொல் மீது குவிகிறது. சுஜாதா விட்டுச் சென்றிருக்கும் பக்கங்களைப் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர் தினம் தினம் எழுதினால் ஒழிய இவற்றை உருவாக்கியிருக்க முடியாது என்று தோன்றுகிறது. எழுத்தை ஒரு பொழுதுபோக்காகவோ, எப்பொழுதோ நிகழும் அற்புதமாகவோ நினைக்கும் எழுத்தாளர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. அது இடையறாத அபரிமிதமான சக்தி. எழுத்திற்குள்ளும் எழுதுவதிலும் இருந்த அந்த வேகம் அவரது மரணத் தறுவாயின் கடைசி வரை தணியவே இல்லை. அப்போலோ மருத்துவமனையில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கடைசி தினங்களில் அவர் ‘குங்கும’த்திற்காக பதில்களை டிக்டேட் செய்துகொண்டிருந்தார். அந்த பதில்கள் எதிலும் மரணத்தின் நிழலையோ, துக்கத்தின் வாசனையையோ, வலியின் முனகலையோ ஒருபோதும் கேட்க முடியாது. அதுதான் சுஜாதாவின் மேஜிக்.
அவர் இருந்த காலத்தைவிட, அவர் இல்லாத இந்த நாட்களில்தான் அவரை அவ்வளவு ஆழமாக நினைக்கிறேன். என்னால் கையாள முடியாத ஏதாவது ஒன்றில் நான் சிக்கிக் கொள்ளும்போதெல்லாம், ‘ஸார் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்றுதான் முதலில் தோன்றுகிறது. ‘பெரிய மனுஷன்’ என்று சொல்லக்கூடிய மனிதர்களே இல்லாத உலகில் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கிறது. சுஜாதா, நான் சந்தித்த கடைசி பெரிய மனிதர். புத்தகங்களை எரிப்பதன் பலன்கள் ஏப்ரல் 23ம் தேதி ‘உலக புத்தக தினம்’ கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையின் காந்தி சிலை அருகில் ஒரு கவிதை வாசிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் போயிருந்தேன். ஈரோடு தமிழன்பன் முதலில் கவிதை வாசித்தார். எங்கிருந்தோ நாலைந்து போலீஸ்காரர்கள் தோன்றினார்கள். ‘‘ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதியில்லை; எனவே அதை அகற்ற வேண்டும்’’ என்றார்கள். உடனே ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டது.
கவிதை வாசிப்பை யாரோ வீடியோவில் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு காட்சி அமைப்பிற்காக ஒலியில்லாத ஒலிபெருக்கியின் முன்பு நின்று கவிதை வாசிக்கத் தொடங்கினார்கள். போலீஸ் மறுபடி வந்தது. சத்தம் ஏதும் கேட்காதபோதும், ‘ஏதும் தில்லுமுல்லு செய்கிறார்களா’ என்று அந்த மைக்கை சோதனை போட்டார்கள். அது உயிரில்லாமல் இருந்தபோதும், அந்த மைக்கை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றார்கள். அது அகற்றப்பட்டு கவிதை வாசிப்பு தொடர்ந்தது. ஒரு பெண் தனது ரெக்கார்டரில் ஹேண்ட் மைக் மாட்டி, அதை வாசிப்பாளர்களின் முகத்திற்கு எதிராக நீட்டி பதிவு செய்துகொண்டிருந்தார். மீண்டும் போலீசிற்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘‘அந்த மைக்கைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யக் கூடாது’’ என்றார்கள். அந்தப் பெண் தனது ரெக்கார்டரை பேக்கில் வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார்.
இருட்டில் ஒருவர் குரல் ஒருவருக்கு கேட்காத வண்ணம் கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். ஒரு போலீஸ்காரர், ‘‘புத்தகம் படிக்கிறதுன்னா வீட்ல போய் படிக்க வேண்டியதுதானே... இங்க வந்து ஏன் பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்றீங்க’’ என்றார். வந்திருந்த கவிஞர்கள் தாங்கள் கொண்டு வந்த கவிதைகளுக்கு பதில், ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகர கவிதைகளை வாசிக்கத் தொடங்கினார்கள். எனக்கு ஒரு பயங்கரமான அபத்த நாடகம் பார்ப்பது போலிருந்தது. ‘புத்தகங்களை எரிப்பதன் பலன்கள்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எனக்கு நானே கேட்கும்படி சத்தமாக வாசித்தேன். இரண்டு குதிரைகள் எங்களையே சுற்றிச் சுற்றி வந்தன. எந்த நேரம் காலைத் தூக்கிவிடுமோ என்று பயமாக இருந்தது. போலீஸ்காரர்கள் கடும் கண்காணிப்புடன் அந்த இடத்தையே சுற்றி வந்தார்கள்.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எல்லோரையுமே புத்தகங்கள் ஏன் அமைதியிழக்க வைக்கின்றன? ‘அவை தம்மை எள்ளி நகையாடுகின்றன’ என்பதை அவர்கள் எப்படியோ புரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘நிறைய ஆண்களால் ஒரு விபசாரம் செய்கிற மனைவியைக் கூட சகித்துக் கொள்ள முடியும். ஆனால் புத்தகம் படிக்கிற பெண்ணை சகித்துக் கொள்ள முடியாது’ என்கிற அளவுக்கு அவர்களின் வன்முறை உணர்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு சனிக்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு எத்தனை பேர் குடித்து விட்டு வருகிறார்கள்? எத்தனை பேர் ரகசிய பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? எத்தனை சிறு திருட்டுகள் நடக்கின்றன? ஆனால் படிப்பவர்கள், கவிதை வாசிப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. எழுத்துச் சீர்திருத்தம் சமீபத்தில் ஒரு அறிஞரை சந்தித்தேன். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க முடியுமா என்று கேட்டார். டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள், ஓய்வுபெற்ற ஸ்கூல் வாத்தியார்கள், பரோட்டா மாஸ்டர்கள், அஞ்சல் வழியில் படித்து இன்னும் பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணாதவர்கள், மின்வாரியத்தில் பணிபுரிபவர்கள் என எழுத்துச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ‘‘ஐயா! இந்த சமூகத்திலும், உங்கள் வீட்டிலும், உங்களிடமும் சீர் திருத்த ஏராளமான விஷயங்கள் இருக்கும்போது, தமிழ் எழுத்தை சீர்திருத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. தனது இருபதாண்டு கால உழைப்பு இது என்றார். ‘‘நீங்கள் சொல்கிறபடி தமிழ் எழுத்துகளை மாற்றிவிட்டால், இவ்வளவு காலம் நாம் எழுதி வைத்திருக்கும் புத்தகங்களையெல்லாம் அடுத்த தலைமுறையினர் எப்படிப் படிப்பார்கள்?’’ என்று கேட்டேன். ‘‘இந்த எழுத்தில் எழுதிய புத்தகங்களை படிக்கட்டுமே’’ என்றார். அவருக்கு நான் ஒரு யோசனை சொன்னேன்... ‘‘ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைத்த கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளில் என்ன எழுதியிருக்கிறது என்று உலகமே மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் எழுத்து ஆராய்ச்சி மூலம் அதை மட்டும் படித்து ஒரு புத்தகம் எழுதிக்கொண்டு வாருங்கள்... நாம் இருவருமே உலகப் புகழ் அடைந்து விடலாம்’’ என்றேன். சடாரென பையை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.
(இன்னும் நடக்கலாம்...)