‘‘அடிக்கடி நேரும் மின்தடையால், ஐஸ்கிரீம், கேக் மற்றும் உறைநிலையில் வைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகள் பலவும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விஷமாக மாறக்கூடும்’’ என்றும் அதிர்ச்சித் தகவல் தருகிறார் மருத்துவர் கீதா மத்தாய். ‘‘கிரீம் கேக்குகள், ஐஸ்கிரீம்கள் போன்றவை குறிப்பிட்ட குளிர்நிலையில் இருக்க வேண்டும். அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் குளிர்நிலை குறைகிறது. இதனால் ஐஸ்கிரீம் உருகும்போது, அதில் ஷிtணீஜீலீஹ்றீஷீநீஷீநீநீus வகையைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும். அந்த பாக்டீரியாக்கள் விஷங்களை வெளியிடும். மின்சாரம் வந்து மீண்டும் குளிர்நிலை சரியான பிறகு ஐஸ்கிரீம் மறுபடி உறைந்துவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செத்துவிடும். ஆனால் அவை வெளியிட்ட விஷம் அப்படியே இருக்கும். ஐஸ்கிரீமில் பெரும்பகுதி இருப்பது பால், சர்க்கரை மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றும்தான். இந்த மூன்றுமே பாக்டீரியா கிருமிகளை எளிதில் ஈர்ப்பவை. அதனால் ஐஸ்கிரீம் கெட்டுப் போவதற்கான ஆபத்து மூன்று மடங்கு இருக்கிறது’’ என்கிறார் கீதா. தகிக்கும் கோடையில் நிறைய பேர் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருமுறை கடையில் ஐஸ்கிரீமை எடுக்க ஃப்ரீசர் பெட்டியைத் திறக்கும்போதும் உள்ளே ளிர்நிலை குறையும். வெளிக்காற்றோடு கிருமிகள் உள்ளே போகும். பவர்கட் நீடிக்கும் நேரங்களில் இப்படி அடிக்கடி திறந்தால், ஐஸ்கிரீம் உருகும். இப்படி உருகும் நேரத்தில் பாக்டீரியாக்கள் அதி வேகத்தில் வளருமாம். இதனால் ஐஸ்கிரீம் கண்டிப்பாகக் கெட்டுப்போகும். ‘‘இப்படி கெட்டுப்போன ஐஸ்கிரீமை சாப்பிடுவதால் பல்வேறு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். எனவே மின்தடை சீராகும்வரை குழந்தைகள் ஐஸ்கிரீம், கேக் வகைகளை தவிர்ப்பது நல்லது’’ என்கிறார் கீதா.
‘‘இன்றைய சூழலில் தடுப்பூசிகள் மிகப்பெரும் வரப்பிரசாதம். பெரியம்மை போன்ற கொடிய நோய்களை தடுப்பூசி மூலம்தான் இந்தியாவிலிருந்து விரட்டினோம். போலியோ, மூளைக் காய்ச்சல் போன்ற பல கொடூர நோய்கள் தாக்காமல் தடுப்பூசிகள் மூலம் தடுக்கிறோம். நோய்க்கிருமிகளை குணம் மாற்றி, தடுப்பூசிகளைத் தயாரிக்கிறார்கள். உதாரணமாக போலியோ தடுப்பூசியில், உயிருள்ள போலியோ வைரஸ்தான் இருக்கும். நோயைத் தராமல், நோய் தாக்காமல் இருக்க எதிர்ப்புசக்தியைத் தரும்விதமாக அதன் குணத்தை மாற்றியிருப்பார்கள். குறிப்பிட்ட குளிர்நிலையில் இவற்றைப் பாதுகாக்காவிட்டால், செயலிழந்து வெறும் தண்ணீர் போல மாறிவிடும். அதைப் போட்டுக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. பல மருந்துக் கடைகளில் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வசதி இல்லை. கிட்டத்தட்ட 8 மணியிலிருந்து 10 மணி நேரத்துக்கு மின்சாரம் தடை செய்யப்படுவதால் ஃபிரிட்ஜின் குளிர்நிலை குறைந்து விடுகிறது. அதனால் மருந்துகள் கெட்டுப்போகும். இதனால், தடுப்பூசி போட்டால் நோய் வராது என்ற நம்பிக்கை தகர்ந்துவிடும். சீரான தட்பவெப்பம் இல்லாவிட்டால் இன்சுலின் மற்றும் ஆன்ட்டிபயாடிக் போன்ற மருந்துகளின் சக்தியும் குறைந்துவிடும்’’ என்கிறார் வேலூர் குழந்தைகள் நல மருத்துவர் கீதா மத்தாய்.
இதை ஆமோதிக்கிற இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக செயலாளர் டாக்டர் ஜெயலால், ‘‘இது சத்தமில்லாத விபரீதம்’’ என்கிறார். ‘‘தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 24 மணி நேர மின்சாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். பல தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர் வசதி இல்லை. பெரும்பாலான மருந்துக்கடைகளில் இன்வெர்ட்டர் கூட இல்லை. பொதுவாக தடுப்பூசிகள் பலவும் -3 முதல் -4 டிகிரி குளிரில் இருக்க வேண்டும். சீரான இடைவெளியில் மின்சாரம் தடை செய்யப்படுவதால் சீதோஷ்ணத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். அதனால் தடுப்பூசிகள், உயிர்காக்கும் மருந்துகளின் தன்மை மாற வாய்ப்புண்டு...’’ என்று கூறும் ஜெயலால், ‘‘இந்த மின்தடையால் ரத்த வங்கிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். ரத்தத்தின் தன்மை மாறும் விபரீதமும் நிகழக்கூடும்’’ என்று அதிர்ச்சி தருகிறார்.
‘‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஐ.எல்.ஆர். எனப்படும் பெரிய அளவிலான குளிர்விப்பான் பயன்படுத்துகிறார்கள். ரத்தம், யூரின் டெஸ்ட் செய்யப் பயன்படும் Ôகிட்Õடுகள் அனைத்தும் இதில்தான் இருக்கும். அதிகநேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் தடுப்பூசிகள் மட்டுமின்றி, இந்த ‘கிட்’டுகளின் தன்மையும் மாறிவிடுகிறது. அதனால் சோதனை முடிவுகளே முன்பின் வர வாய்ப்புண்டு...’’ என்று வருந்துகிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு லேப் டெக்னீஷியன்.
இதை உறுதிப் படுத்துகிறார் மின் பொறியாளர் பிஜிலி. ‘‘சீரான இயக்கத்தில் உள்ள ஃபிரிட்ஜில் ஃபிரீசர் பகுதியில் -5 முதல் -7 டிகிரி பாரன்ஹீட்டும், வெளிப்பகுதியில் இதற்குச் சற்று குறைவாகவும் குளிர்நிலை இருக்கும். சாதாரணமாக ஓரிரு மணி நேரங்கள் ஏற்படும் மின்தடையால் ஃபிரிட்ஜின் இயக்கம் பாதிக்காது. முழுதாக ஒருநாள் மின்தடை ஏற்பட்டு பின் சீராக இயங்கினாலும் பிரச்னை இல்லை. விரைவிலேயே சீராகிவிடும். ஆனால் தினமும் 8 முதல் 10 மணி நேரம் இயங்காமல் இருந்து, பின் இயங்கும் குளிர்விப்பான்கள் சரியான இலக்கில் இயங்க வாய்ப்பில்லை’’ என்கிறார் பிஜிலி. ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மருந்துக்கடைகளை முழுமையாக ஏ.சி செய்ய வேண்டும் என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் உரிய சீதோஷ்ணத்தில் இயங்கும் ஃபிரிட்ஜ் வசதியும் அவசியம். ஆனால் பெரும்பாலான மருந்தகங்களில் ஏசி வசதியில்லை.
இதுபற்றிய நம் கேள்விக்குப் பதிலளித்த தஞ்சை மாவட்ட சில்லறை மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் விஸ்வம், ‘‘மின்சாரம் 8 முதல் 10 மணி நேரம் நிறுத்தப்படுவது உண்மை தான். ஆனால் தொடர்ந்து நிறுத்தப்படுவதில்லை. 2 முதல் 3 மணிநேர இடைவெளியில்தான் நிறுத்துகிறார்கள். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. பல மெடிக்கல் ஸ்டோர்களில் தடுப்பூசிகளை இருப்பு வைத்து விற்பதில்லை. தேவைப்படும்போது ஏஜென்சிகளிடம் வாங்கிக்கொள்கிறோம். தடுப்பூசி சப்ளை செய்யும் ஏஜென்ஸிகளில் ஜெனரேட்டர் வசதி உள்ளது. மற்றபடி, மருந்தகங்களை ஏசி செய்வது பற்றி இதுவரை எங்களுக்கு தகவல் ஏதும் தரப்படவில்லை...’’ என்கிறார். எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என நாளொரு நோய் வந்து மக்களை வாட்டுகிறது. இதற்கெல்லாம் தடுப்பூசியே தீர்வு என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் குலைக்கும் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
- வெ.நீலகண்டன்