மாவோயிஸ்ட்களுக்கு நியாத்தைப் புறிய வைப்பார் அலெக்ஸ்!





தமிழார்வமும் எழுத்தார்வமும் மிகுந்த அலெக்ஸ், கல்லூரிக் காலத்திலிருந்தே நிறைய கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை, தமிழ்வழிக் கல்வி பற்றி  அவர் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கலெக்டராக பணிபுரியும்போதும் ‘குறைகுடம்’ என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி சமூக அக்கறையோடு எழுதி வருபவர். 2005ல்  ஐ.ஆர்.எஸ் தேர்ச்சி பெற்று நாக்பூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணியில் இணைந்த அலெக்ஸ் அதற்கு அடுத்த ஆண்டே ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பணி நியமனம்  பெற்றார். எஞ்சினியரிங் படித்தவர் என்றாலும், இவரது முதன்மைப் பாடம் தமிழ் இலக்கிய வரலாறு. ‘‘சட்டீஸ்கர் மாநிலம்னு சொன்னவுடனே, ‘அங்கே நிலைமை சரியில்லைடா’ன்னு சொன்னேன்.

அந்த மாதிரி பகுதிகள்லதான் மாப்ளே வேலை செய்யணும். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை மேலே கொண்டு போகணும்...’னு சொன்னான். மாசத்துக்கு ஒருமுறையாவது போன்ல பேசிடுவோம். ஊருக்கு  வந்தா கலெக்டரா அவனைப் பாக்க முடியாது. எங்ககூட ஜாலியா சுத்துவான். நிச்சயமா மாவோயிஸ்ட்களுக்கு அவன் நியாயத்தைப் புரிய வைப்பான்...’’ என்கிறார் அலெக்சின் நண்பர் பாளையங்கோட்டை  ஜெபராஜ்.


புதிதாக உருவாக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தின் முதல் கலெக்டராக கடந்த ஜனவரி 16ம் தேதிதான் அலெக்ஸ் நியமிக்கப்பட்டார். ஆந்திர, ஒடிசா எல்லைப்பகுதியில் உள்ள சுக்மா, மாவோயிஸ்ட்களின்  ஆதிக்கம் நிறைந்த பிரதேசம். கலெக்டர் பங்களாவிலிருந்து நான்காவது கிலோமீட்டரிலேயே காடு தொடங்கிவிடுகிறது. இங்கு வாழும் பழங்குடிகள் மிகவும் பின்தங்கியவர்கள். சாலை, கல்வி, சுகாதாரம்  உள்பட எந்த வசதிகளும் இல்லை.

நல்ல உணவைக்கூட பார்த்தறியாத இம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அலெக்ஸ் தீவிர முயற்சி எடுத்தார். ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்ய மூன்று மணி நேரம் ஆகுமளவுக்கு வசதிகளற்ற  சாலைகளில் மாவட்டம் முழுக்க பயணம் செய்தார். ‘கிராம ஸ்வராஜ்’ திட்டத்தை மலைவாழ் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றார். கால்நடை வளர்ப்பு, முந்திரி வளர்ப்புத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.  கடன் வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார். குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்தினார். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்தார். பள்ளிக்குச் செல்ல பயந்த ஆசிரியர்களுக்கு நம்பிக்கையூட்டி அனுப்பி  வைத்தார். விடுமுறை நாட்களில் கிராமங்களுக்குச் சென்று மாணவர்களோடு விளையாடினார். பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கினார். எப்போதும் அரசு அதிகாரிகளை சந்தேகக் கண்ணுடனே பார்த்துப்  பழகிய பழங்குடி மக்களுக்கு அலெக்ஸ் மீது பிடிப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சை மதிக்கத் தொடங்கினர். பிரச்னையின் மையம் அதுதான்.



‘‘அலெக்ஸ் ரொம்ப தைரியமானவன். நேரம், காலம் பார்க்காம கிராமங்களுக்கு கிளம்பிப் போவான். அதிகாரிகளை கடத்த வாய்ப்பிருக்குன்னு உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருந்துச்சு. இருந்தாலும்,  ‘விவசாயிகள் கலந்துக்கிற நிகழ்ச்சி. இப்பத்தான் அவங்க நம்மகூட நெருங்கி வர்றாங்க. போகலன்னா நல்லாயிருக்காது’ன்னு சொல்லிட்டு கிளம்பியிருக்கான். அவன் திறமைசாலி. எதையும் சமாளிக்கிற  திறமை அவனுக்கு இருக்கு...’’ என்கிறார் அலெக்ஸின் அப்பா வரதாஸ்.

மஞ்சிபாரா என்ற கிராமத்தில் நடந்த முந்திரி வளர்ப்புத் திட்டப் பிரசாரத்துக்கு சென்றபோதுதான் கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தலுக்கு மூளையாக இருந்தவர், சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்  தலைவர் கிஷன்ஜியின் சகோதரர் வேணுகோபால் ராவ் என்கிறார்கள். அவரின் வழிகாட்டுதலில் கத்ரி சத்யநாராயண ரெட்டியின் தலைமையிலான தண்டகாருண்யா சிறப்பு மண்டல் கமிட்டி இதில்  ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்குழுவில் 12 பெண்களும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.


ஆரம்பத்தில் காவல்துறையும் துணை ராணுவப்படையினருமே மாவோயிஸ்ட்களின் இலக்காக இருந்தார்கள். அலெக்ஸ் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் இளம் அதிகாரிகளின் துடிப்பான  செயல்பாடுகளால், பழங்குடி மக்களிடம் அரசு மீது நம்பிக்கை ஏற்படுவது அவர்களின் கண்ணை உறுத்தியது. அதனால் அவர்களின் இலக்கு அதிகாரிகள் பக்கம் திரும்பிவிட்டது. இப்படி கடத்தி  மிரட்டுவதன் மூலம் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதோடு, பிற அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, உள்ளே நுழையவிடாமல் செய்து, தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள  நினைக்கிறார்கள். இதுபோல பல்வேறு சூழல்களில் 22 உயர் அதிகாரிகளை மாவோயிஸ்ட்டுகள் கடத்தி, மிரட்டி காரியம் சாதித்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாக மார்தட்டிக் கொள்ளும் மாவோயிஸ்ட்டுகள், அந்த மக்களுக்காக பாடுபடும் அதிகாரிகளைக் கடத்துவது சரியா? ‘உண்மை அறியும் குழு’க்களில் பங்கேற்று,  சட்டீஸ்கர் உள்ளிட்ட மாவோ ஆதிக்கம் மிகுந்த வனப்பகுதிகளில் களப்பணியாற்றி அனுபவமுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸிடம் கேட்டோம்.



‘‘இந்த விவகாரத்தை மத்தியதர வர்க்க மனநிலையோடு பார்க்கமுடியாது. போலீஸ், ராணுவம், துணை ராணுவப் படைகள் பழங்குடி மக்களின் மீது மிகப்பெரும் அடக்குமுறைகளைத் திணிக்கிறது.  கிஷன்ஜி போன்ற தலைவர்களை பிடித்து, கொடுமைப்படுத்தி சுட்டுக் கொன்றார்கள். மாவோயிஸ்ட்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி அப்பாவி பழங்குடி மக்களை கொன்றொழித்தார்கள்.  பல்லாயிரம் பேரை சிறையில் அடைத்துக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள். பழங்குடி மக்களை விரட்டி விட்டு, பூமிக்குக் கீழேயிருக்கும் கனிமங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதே  அரசின் நோக்கமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அரசே சட்ட விரோதமாக நடந்து கொள்கிறபோது அதன் எதிர்வினை இப்படித்தான் இருக்கும். அரசு மோதல் போக்கை  கடைப்பிடிக்காமல், அரசியல் பிரச்னையாக கருதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாவோயிஸ்ட்டுகளும் வன்முறையை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும்’’ என்கிறார் மார்க்ஸ்.
‘‘தாண்டேவாடா பகுதிக்கு நான் சென்றிருந்தபோது, பல கிராமங்கள் முற்றிலும் எரிக்கப்பட்டிருந்தன. உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவம் எதுவும் அந்த கிராமங்களில் இல்லை. நாங்கள் உணவு  கொடுக்க முனைந்தபோது போலீஸ் மிரட்டியது. பலமுனைத் தாக்குதல்களால், பழங்குடி மக்கள் போக்கிடம் தெரியாமல் தவிக்கிறார்கள்’’ என்கிறார் மார்க்ஸ்.
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, அலெக்ஸ் விடுவிக்கப்படும் செய்தியை எதிர்பார்த்து சட்டீஸ்கர் மட்டுமின்றி தமிழகமும் தவிப்போடு காத்திருக்கிறது.

- வெ.நீலகண்டன்
படங்கள்: பரமகுமார்