உலலலா சினிமா விமர்சனம்





காதலியை தூண்டில் மீனாகப் பயன்படுத்தி பல மீன்களைப் பிடிக்க நினைத்த காதலன், உண்மைக் காதலை உணரும் கதை. அதில் புது விஷயம், ஜோதிகிருஷ்ணா ஹீரோவாகியிருப்பது. படத்தை  இயக்கியிருப்பதும் அவரே. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் ஆகாமல், பார்க்கிற பெண்களையெல்லாம் காதலியாக நினைக்கும் விடலை வேடத்தைத் தேர்ந்தெடுத்த ஜோதிகிருஷ்ணாவின்  துணிச்சலைப் பாராட்ட வேண்டும். ஐந்து வயதிலேயே பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து சினேகம் கொள்ள நினைக்க, அவள் அதை வைத்து இன்னொரு பையனுடன்  நட்பாவதிலிருந்து ஆரம்பிக்கிறது விவகாரம். தெருவை துப்புரவு செய்யும் பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்து அடி வாங்குவது வரை அவமானம் பார்க்காமல் நடித்திருக்கிறார். துக்கடா  பெண்களிடமெல்லாம் அப்ளிகேஷன் போட்டு கதைக்கு ஆகாமல் போனவருக்கு டெல்லி பாதுஷாவாய் ப்ரீத்தி பண்டாரி சிக்க, அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு போய், ஜொள்விட்ட பெண்களிடமெல்லாம்  காட்டி காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் லந்தில் ரசிக்க வைக்கிறார் ஜோதி. யு.கே.ஜி லெவலிலேயே இருக்கும் வசன உச்சரிப்பை மட்டும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ப்ரீத்தி பண்டாரி அசப்பில் தபு சாயலில் இருக்கிறார். நாகரிக உடைகளில் வளைய வரும் அவர், விரும்பி வரும் ஜோதிகிருஷ்ணாவின் காதலில் விளையாட்டாக சிக்கி, பின்னர் சீரியஸாக காதலிக்க  ஆரம்பித்து விடுவது இயல்பாக இருக்கிறது. ஆனால் பிற பெண்களைக் காதலில் வீழ்த்த தன் காதலை ஜோதிகிருஷ்ணா பயன் படுத்திக் கொள்வதை அறிந்து துவள்வதிலும், காதலின் உச்சத்தில் தான்  முத்தமிட்டது அனைவரது செல்போன்களுக்கும் அனுப்பப்பட்டது தெரிந்து துடிப்பதிலும் நடிக்கவும் தெரிந்திருக்கிறார். தமிழரான தலைவாசல் விஜய்யும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ராணியும்  ஜோதிகிருஷ்ணாவின் பெற்றோராக வருகிறார்கள். கணவனின் அன்புதான் எல்லாவற்றையும் விடப் பெரியது என்று உணர்த்துமிடத்தில் ராணியும், ‘‘எனக்காக அவள் தமிழ் கத்துக்கிட்டா, அவளுக்காக நான்  ஒரு வார்த்தை கூட இந்தி கத்துக்க நினைச்சதில்லை...’’ என்று ராணியின் மறைவுக்குப் பின் கதறும் தலைவாசல் விஜய்யும் மனதில் பதிகிறார்கள். ப்ரீத்தியின் அப்பா என்றால் நம்பும் விதத்திலேயே  இருக்கிறார் அவரது அப்பாவாக வரும் பட்டிமன்றம் ராஜா. ஜோதிகிருஷ்ணாவின் எல்லா லீலைகளிலும் உடனிருந்து அல்லல்களுக்கு உள்ளாகும் நண்பராக வரும் சேகர் பிரசாத்தும் கவனிக்க வைக்கிறார்.

இரண்டாவது பாதியில் கதைக்குள் வர நினைத்த ஜோதிகிருஷ்ணா, முதல் பாதியை நகைச்சுவையாகக் கொண்டுசெல்ல முடிவெடுத்தது புத்திசாலித்தனமான சிந்தனைதான். ஆனால் அது கைகூடாமல்  போனதுதான் வேதனை. போகிற போக்கில் ஜோக்கடித்து கைத்தட்டல் வாங்கும் காலத்தில், வழக்கொழிந்துபோன ஸ்லாப்ஸ்டிக் காமெடி அவருக்குக் கைகொடுக்கவில்லை. பாத்திரங்களின் தேர்விலும்  கவனம் இல்லை. அவரது சிறு வயதுத் தோற்றங்களில் வரும் மூன்று பையன்களும் எந்தப் பொருத்தமும் இல்லாமல் வகைக்கொன்றாகத் தெரிகிறார்கள். ஹீரோயினை அழகியாகக் காட்ட, பிற  பெண்களையெல்லாம் அவலட்சணமாகக் காட்டி அதைக் காமெடி என்பதும் ரசிக்க முடியவில்லை. உதாரணத்துக்கு முகமெல்லாம் பருவுடன் குண்டாக வரும் சிட்டிபாபுவின் மகள். கிளைமாக்ஸில் ரத்தம்  பார்த்து காதலில் ஜெயிப்பதும் கூட புராதன சிந்தனை. சேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் ஓகே. ஆர்.ஜி.சேகரின் ஒளிப்பதிவில் படப்பதிவு டல்லடிக்கிறது. ஊர்ப்பட்ட லந்துகளடித்தாலும்  லவ்வியதுதான் லாபம்..!
- குங்குமம் விமர்சனக்குழு