கொதிக்கிற தார் ரோட்டில் கொத்து பரோட்டாவே போடலாம் போலிருக்கிறது. இளநீர், பதநீர், தர்ப்பூசணி என்று ஜில் அயிட்டங்களை உள்ளே தள்ளினாலும் உடம்புத் தோலை உறிக்கிறது கோடை உஷ்ணம்!
ஸோ, எல்லாரையும் கூல் பண்ணும் ஜிகர்தண்டா மேட்டருக்காக கல்லூரி இளசுகளைத் தேடினோம். லயோலா காலேஜ் விஷால், தீரஜ்... வைஷ்ணவா கல்லூரி மாணவி சுபர்ணா... மூவரும் அகப்பட, அப்படியே மடக்கினோம்.
‘‘பாய்ஸ்... ஒரு கட்டிங் போடுறீங்களா?’’ என்றதும், ‘‘ஐயய்யோ, எங்களுக்கு அந்தப் பழக்கமில்ல...’’ என்று விஷாலும், தீரஜும் பதறினார்கள்.
‘‘ஹலோ... ஹலோ... இது நீங்க நினைக்கிற மாதிரியான கட்டிங் இல்ல. சம்மர் சீசனுக்கு ஏற்ற மாதிரியான ஹேர் கட்டிங்’’ என்று தெளிவாக்கிவிட்டு அனுஷ்கா பியூட்டி சலூனுக்குள் மூவரையும் அழைத்துச் சென்றோம்.
‘‘ஸ்பைக் கட்டிங் ஓகேவா?’’ என்றார் அங்கிருந்த சிகை அலங்கார நிபுணர் ஷிபானி.
‘‘என்னது... தலையில பைக் ஓட்டப் போறீங்களா?’’ - விஷாலுக்கு பதற்றம் குறையவில்லை.
‘‘நோ... நோ... இது ஸ்பைக் கட். பெரும்பாலான பசங்களுக்கு தலைமுடி ஒட்ட வெட்டிக்கப் பிடிக்காது. அவங்க இந்த கட்டிங்கை செஞ்சுக்கலாம். பார்க்க முடி வெட்டாத மாதிரியே தெரியும். அதே சமயம் முடியோட அடர்த்தி குறைஞ்சு காத்தோட்டமாவும் இருக்கும். சம்மருக்கு பெஸ்ட்’’ என்று விளக்கம் தந்தார் ஷிபானி.
‘‘சேச்சே... விஷால் அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணவே மாட்டான். நீங்க போலீஸ் கட்டிங்கே பண்ணி விடுங்க. இல்லன்னா, மொட்டையே போட்ருங்களேன். இந்த வருஷமாவது டென்த்ல பொண்ணுங்களை விட பசங்க அதிகமா பாஸாகணும்னு வேண்டிக்கிட்ட மாதிரி இருக்கும். அப்ப நான் போயி சந்தனம் வாங்கிட்டு வந்துடவா?’’ என்று தீரஜ் எஸ்கேப் ஆகப் பார்க்க, பார்வையால் அவரை எரித்தார் விஷால். ‘‘இ... இல்ல மச்சி... நம்மல்லாம் மொட்டை கூட அடிச்சுக்கலாம். பாவம் இந்த சுபர்ணா மாதிரி பொண்ணுங்க என்ன பண்ணுவாங்கன்னு கேக்க வந்தேன்!’’ என்று தீரஜ் சமாளிக்க, ‘‘அவங்களுக்கு இருக்கவே இருக்கு எஸ் கர்ல்ஸ் ஸ்டைல்’’ என்ற ஷிபானி, சுபர்ணாவின் கூந்தலை ‘எஸ் கர்ல்ஸ்’ ஸ்டைலுக்கு கொண்டு வந்தார்.
சம்மருக்கு மும்பை பெண்கள் அதிக அளவில் விரும்பும் இந்த ஸ்டைல், சென்னைக்கு இப்போதுதான் அறிமுகமாகிறதாம். முடிகற்றைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, அதனை ஆங்கில ‘எஸ்’ வடிவில் சுருளாக்குகிறார்கள். இப்படி செய்வதால் கூந்தல் தனித்தனியாகப் பிரிந்து கோடை யில் கூல் ஃபீலிங்கை தருமாம். ‘‘ஹேர் ஸ்டைல் ஓகே தான். ஆனா, அனுஷ்கா பியூட்டி பார்லர்னு பேர் வச்சுக்கிட்டு ஒரு கோவை சரளாவுக்கு ஹேர்ஸ்டைல் பண்ணி விட வேண்டியதாப் போச்சே! அதை நினைக்கும்போதுதான்...’’ என தீரஜ் முடிக்கும் முன்பே அடிக்கப் பாய்ந்தார் சுபர்ணா. ‘‘வருங்கால அசினைப் பார்த்து என்ன வார்த்தை சொல்றான் பாருங்க அங்கிள்!’’ என்று போகிற போக்கில் அவர் நம் நெஞ்சை பதம் பார்க்க, ‘‘அசின் இல்லம்மா... நீ வெறும் சீன்’’ என்று கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்தார் தீரஜ்!
அதற்குள் ஸ்பைக் கட்டிங்கை முடித்து வந்தார் விஷால். ‘‘எப்பூடி? அசப்புல பாக்கறதுக்கு விராட் கோஹ்லி மாதிரியே இல்ல..?’’ ‘‘ம்ம்... சிக்கன் ஷாப்புக்கு வந்த சீக்கு கோழி மாதிரி இருக்கு. டேய், ஒனக்கெல்லாம் ஆலமரத்தடியில எச்சி தொட்டு கிருதா இழுக்கணும்டா. அப்பதான் ஒழுங்கா பேசுவே!’’ என்றபடி தீரஜும் ஸ்பைக் கட்டுக்கு தலையைக் கொடுத்தார். குளோபஸில் நுழைந்து ஜம்ப் ஷூட், ஸ்டைலஸ் ஜாக்கெட், வொயிட் டெனிம் ஸ்லீவ்லெஸ் டாப் என சம்மருக்கு ஏற்ற காட்டன் டிரஸ்களை அள்ளிவந்து ஒவ்வொன்றாகப் போட்டு காட்டி சுபர்ணா போஸ் கொடுக்க, தங்கள் பங்கிற்கு விஷாலும் தீரஜும் பிரின்டட் காட்டன் டி ஷர்ட், ஸ்லிம் ஃபிட் ஷர்ட், பேஜ் வொர்க் காட்டன் டி ஷர்ட் என சம்மர் ஸ்பெஷல் காஸ்ட்யூம்களை அணிந்து வந்து போஸ் கொடுத்தனர். ‘‘இங்க பாருங்கடா, நான் ஹீரோயின் ஆகும்போது நீங்களும் ஹீரோ ஆகணும்னா சொல்றபடி கேளுங்க. யாரும் கேமராவை பார்க்கக் கூடாது. ஆளுக்கு ஒரு திசையில பராக்கு பார்த்துக்கிட்டு சீரியஸா மொறைக்கிறதுதான் இப்போ விளம்பர டிரெண்ட்’’ என்று சுபர்ணா ஆர்கனைஸ் செய்ய, ஆரம்பித்தது கிளிக்ஸ் நேரம்!
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்