ஐ.பி.எல். 5வது சீசன் அரை கிணறு தாண்டிவிட்டது. முதல் நான்கு இடங்களைப் பிடிக்க அணிகள் முட்டி மோதுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் நிலைமை மாறிக் கொண்டே இருப்பதால் சுவாரசியம் பொங்கி வழிகிறது. டேர்டெவில்ஸ் பெயருக்கேற்ப மிரட்டிக் கொண்டிருக்கிறது. கேப்டன் சேவக் பார்முக்கு வந்திருப்பதில் மற்ற அணி பவுலர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள். ஓவராய் சீன் போட்ட கங்குலியின் வாரியர்சை புனேவில் வைத்தே புரட்டி எடுத்தார் சேவக். டெல்லியின் ஓட்டத்தைத் தடுப்பது அத்தனை சுலபமில்லை என்றே தோன்றுகிறது. நாற்பதாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மும்பை இந்தியன்சுடன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். அடுத்த நாள் கிங்ஸ் லெவனுடன் நடந்த ஆட்டத்தில் சச்சின், பிராங்க்ளின், ரோகித் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் பஞ்சாப் கை ஓங்கியது. தோல்வி நிச்சயம் என்று முடிவுகட்டிய நிலையில்தான் அந்த அதிசயம் அரங்கேறியது.
சாவ்லா வீசிய 19வது ஓவரில் கிங்ஸ் லெவன் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது. ராபின் பீட்டர்சன் அமர்க்களமாக ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் அடிக்க... களத்தில் இருப்பது இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. வெற்றிகரமாக காப்பி அடித்த மகிழ்ச்சியில் அடுத்து ஒரு சிக்சரையும் தூக்கினார் ராபின். அந்த ஓவரின் கடைசி 2 பந்தையும் ராயுடு பறக்கவிட, வயிற்றுக்குள் இருந்த வெற்றியை வாந்தி எடுத்தது பஞ்சாப்! ஒரே ஓவரில் சாவ்லா 27 ரன் வாரிக் கொடுக்க, ஒட்டுமொத்த உழைப்பும் வீண். நம்ப முடியாத வெற்றியில் மும்பை இந்தியன்ஸ் ஆனந்தக் கூத்தாட, சாவ்லா பிரமை பிடித்து நின்றதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த ஸ்விட்ச் ஹிட் பற்றி ராபினிடம் கேட்க, ‘‘ஏற்கனவே பலமுறை இந்த ஷாட் அடித்திருக்கிறேன். இதற்காக பயிற்சி செய்தது இல்லை’’ என்று படு கூலாக பதிலளித்தார். காயத்தால் களமிறங்க முடியாமல் வேடிக்கை பார்த்த கேப்டன் கில்கிறிஸ்ட், எல்லோரும் திட்டித் தீர்த்த சாவ்லாவுக்கு ஆதரவாக ஆறுதல் வார்த்தை கூறியது எல்லோரும் படிக்க வேண்டிய கிரிக்கெட் பாடம். ‘‘சாவ்லா சிறப்பாகவே பந்து வீசினார். ஸ்விட்ச் ஹிட் ஈஸியா அடிச்சுட முடியாது. நம்பிக்கையோடு விளையாடிய பீட்டர்சனை நாம் பாராட்ட வேண்டும்’’ என்று தத்துவ முத்து உதிர்த்தார் கில்லி.
பெங்களூரில் சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் மோதலுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, வானம் பொத்துக் கொண்டு ஊற்றியதில் வாண வேடிக்கை வாய்ப்பு நமத்துப் போனது. ஒரு புள்ளி கிடைத்ததில் இரு அணிகளுக்குமே பரம திருப்தி. ரஹானேவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை அபகரிக்கும் வாய்ப்பு நழுவியதால் டுபிளெஸ்சிஸ் முகத்தில் மட்டும் ஏமாற்றம். ஈடன் கார்டனில் கொட்டிய மழையில் ஐதராபாத்துக்கு முதல் புள்ளி சார்ஜ் ஏறியது. மற்ற அணிகளை விட குறைவான ஆட்டங்களிலேயே விளையாடி உள்ளதால் இனி சார்ஜர்ஸ் ஸ்பீடு எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. உண்மையில், 9 அணிகளுக்குமே இன்னும் அரை இறுதி வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. டிவி ரேட்டிங் நாளுக்கு நாள் இறங்கு முகமாக இருந்தாலும், சீசன் 5 அமோக வெற்றி என்று அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா. பத்தாவது அணியாய் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஜம்மு காஷ்மீர் விளையாட்டு அமைச்சர். அடுத்த வாரம் புள்ளிக் கோலம் கொஞ்சம் தெளிவாகி விடும். டோனியின் அதிர்ஷ்ட கப் மீண்டும் நிரம்பத் தொடங்கியிருப்பதால், சாம்பியன் சூப்பர் கிங்ஸ் பற்றி மட்டும் எந்தக் கணிப்பும் கூறாதிருப்பது உத்தமம்.
- பா.சங்கர்