சுட்ட கதை சுடாத நீதி





கவலையோடு பூங்காவில் அமர்ந்திருந்தான் அவன். தொழிற்சாலைகளுக்கு உதிரிப் பாகங்கள் செய்து விற்கும் சிறு கம்பெனி ஒன்றின் முதலாளி அவன். போட்டி காரணமாக லாபமும் குறைவு; நம்பி  வேலைக்கு வைத்தவர்கள் கையாடல் செய்தனர். மூலப்பொருள் சப்ளை செய்தவர்கள் பணம் கேட்டு நெருக்கினார்கள். எங்கும் கடனும் வாங்க முடியவில்லை.

கவலையோடு இருந்த அவனை நெருங்கினார் ஒரு முதியவர். ‘‘ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் போல. நான் உதவுகிறேன்’’ என்றவர், ஒரு செக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒரு கோடி ரூபாய்க்கான  செக்! கீழே இருந்த பெயரைப் பார்த்தான். பெரும் தொழிலதிபரின் பெயர் அது. அவரா இவர்? தன் முகம் கூட பத்திரிகையில் வராமல் எளிமையாக வாழ்பவர் ஆயிற்றே அவர். ‘‘ஒரு வருஷம் கழிச்சு இதே  நாள்ல இங்க வந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும். புரியுதா?’’ என மிடுக்காகக் கேட்டவர், மின்னலாய் நகர்ந்து போனார்.

அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. இந்தப் பணத்தை வைத்து எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நினைத்தவனுக்கு திடீரென ஒரு யோசனை... ‘இது இல்லாமலே நம்மால் சாதிக்க முடியாதா? பிரச்னை  வந்தால் இந்தப் பணத்தை வைத்து சமாளித்துக் கொள்ளலாமே!’

வங்கிகளில் கடன் கேட்டான்; கிடைத்தது. புது சப்ளையர்கள் கிடைத்தார்கள். நிறைய புதிய நிறுவனங்களில் ஜாப் ஆர்டர் வாங்கினான். தன்னம்பிக்கையோடு அவன் எடுத்த எல்லா முயற்சிகளும் பலன்  தந்தன. கடன்களை அடைத்த அவனால், இன்னொரு கம்பெனியையும் விலைக்கு வாங்க முடிந்தது.

ஒரு வருடம் முடிந்து அதே நாள், அதே நேரத்தில் அவன் பூங்காவில் இருந்தான். பாக்கெட்டில் அந்த செக் அப்படியே இருந்தது. முதியவர் வந்தார். இவன் அவரை நெருங்கும் முன்பாகவே நான்கு பேர்  வந்து அவரைப் பிடித்துக் கொண்டனர். ‘‘மனநோயாளிங்க இவரு. அடிக்கடி இப்படி வெளியே வந்து, நான்தான் பெரிய தொழிலதிபர்னு சொல்லிக்குவாரு’’ என்றார் அதில் ஒருவர் அவனிடம்.
திகைத்து நின்ற அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது... பணத்தைவிட தன்னம்பிக்கையே ஜெயிக்க வைக்கிறது!