ஆல்தோட்ட பூபதி
தருமி: சொக்கா... சொக்கா... ‘கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி’க்கு அழைப்பு வந்திருக்கு. ஒரு கோடிய ஜெயிச்சா, ரெண்டு மாசம் மளிகை சாமானம் வாங்கிடுவேன்; அப்படியே ஒரு மாச கரன்ட் பில் கட்டிடுவேன்; மிச்ச பணத்துல ரெண்டு மெதுவடை வாங்கி வயித்த கழுவிடுவேன். எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா? ஐயோ சொக்கா... அருள் புரிய மாட்டாயா?
சொக்கர்: சிட்டிசனே... த: Who is the dog voice? யாருய்யா அது?
சொ: Yeah, its me. அழைத்தது நான்தான்!
த: யாரு நீங்க?
சொ: ஒவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான் விளம்பரம் பார்க்கலை? நான் உன் நண்பன். ஒரு கோடிக்கான எல்லா கேள்விகளும் தெரிந்துவிட்டால் நீ ஜெயித்து விடுவாய் அல்லவா?
த: ஆஹா! அது மட்டும் கிடைச்சா, பட்டய கிளப்பிடுவேன். ஆனா உங்கள நம்பற மாதிரி இல்ல!
சொ: என் திறமை மீது சந்தேகம் இருந்தால், என்னை டெஸ்ட் செய்து பாரேன்; உனக்கு திறமையிருந்தால்!
த: என்கிட்டயே லந்து விடுறீங்களா?
சொ: கேள்விகளை நீ கேட்கிறாயா, அல்லது நான் கேட்கட்டுமா?
த: ம்ஹும்! நானே கேட்கிறேன்... எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்!
சொ: கேளும்...
த: பிரிக்க முடியாதது எதுவோ?
சொ: அம்மாவும் சின்னம்மாவும்
த: பிரிந்தே இருப்பது?
சொ: அத்வானியும் மோடியும்
த: சொல்லக்கூடியது?
சொ: கரன்ட் போகும் நேரம்
த: சொல்ல முடியாதது?
சொ: கரன்ட் வரும் நேரம்
த: குனிந்தே இருப்பது?
சொ: தமிழக அமைச்சர்கள்
த: குனியாமல் இருப்பது?
சொ: ஃபீல்டிங்கின்போது சென்னை டீம் வீரர்கள்
த: தெரியாமல் ஏமாறுவது?
சொ: பொதுத்தேர்தல்
த: தெரிஞ்சே ஏமாறுவது?
சொ: இடைத்தேர்தல்
த: மறக்கக் கூடியது?
சொ: ஆவின் பால்
த: மறக்க முடியாதது?
சொ: அமலா பால்
த: ஒரு நாள் கொன்றால்?
சொ: எமன்
த: ஒவ்வொரு நாளும் கொன்றால்?
சொ: வுமன்
த: மேஜை தட்டுக்கு?
சொ: தமிழக சட்டசபை
த: கில்மா பிட்டுக்கு?
சொ: கர்நாடக சட்டசபை
த: அத்தியாவசிய தேவை?
சொ: பெரியவங்களுக்கு டாஸ்மாக்
த: அடிப்படை தேவை?
சொ: பசங்களுக்கு பாஸ்மார்க்
த: அழிக்க முடியாதது?
சொ: காதல்
த: ஒழிக்க முடியாதது?
சொ: ஊழல்
த: டிரெண்டுக்கு?
சொ: ‘அங்காடி தெரு’ அஞ்சலி
த: கரன்ட்டுக்கு?
சொ: கண்ணீர் அஞ்சலி
த: ஐயோ போதும்... ஆள விடு!
கிச்சு கீச்சு
ஒரு இந்திய கணவனுக்கு கல்யாண நாளை விட மோசமான நாள் அட்சய திருதியை முடியல!
|