அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி வரம் தரும் தெய்வம்





படிப்பு என்று நாம் யோசிக்கும்போதே நல்ல பள்ளி எது என்கிற கேள்வியும் முன்னே நிற்கிறது. நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போதே, அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதையும் மனதில்  கொள்ள வேண்டும். பல பேர் 15 கிலோமீட்டர் தூரமெல்லாம் பிள்ளைகளை - அதுவும் சிறிய வயதிலேயே - அனுப்புகின்றனர். இதை தவிர்த்தல் நலம். இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று  கேட்கிறீர்களா? இருக்கிறது... குழந்தைகளுக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என்று வரும்போது, இவ்வளவு தூரம் தினமும் பயணப்படுவது அவர்களை உளவியல்ரீதியாகவும், பயணரீதியாகவும் பாதிக்கும்.  எனவே பால பருவத்தில் பள்ளிக்கு அருகே வசித்தல் நன்மையைத் தரும்.

குழந்தைகளுக்கு நுண்ணறிவு என்பது ஐந்து வயதிற்குள்ளாகவே உருவாவதாக ஆல்பிரட் பினே என்கிற உளவியலாளர் கூறுகிறார். அதனால், ‘குழந்தைகளை ஐந்து வயது வரை அதிகம் கண்டிக்காமல்,  அழுத்தாமல் பழக விடவேண்டும்’ என்கிறார். புரிகிறதோ, இல்லையோ... விஷயங்களை உள்வாங்கியபடி இருப்பார்கள். ‘‘நான் நின்னேனா... அப்போ ஹெலிகாப்டர் வந்துச்சா...’’ என்று கற்பனைகளை  உருவாக்கியபடி இருப்பார்கள். இம்மாதிரியான கற்பனைகள்தான் மாபெரும் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம். இன்றைய அவசர யுகத்தில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குப் போகும் நிர்ப்பந்தத்தில்,  குழந்தையின் மழலைப் பேச்சை ஏதோ அவசரமாகக் கேட்டு நகர்ந்து விடுகிறார்கள்.


கல்வி என்பது மனம் சம்பந்தப்பட்டது. மனதிற்கு உரியவராக சந்திரன் வருகிறார். அந்த சந்திரன் மாதுர்காரகன் என்கிற தாய்க்கு உரியவராகவும் வருகிறார். ஜோதிடத்தில் மனதின் அடிப்படை  விஷயத்திற்கும் தாய்க்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவேதான் குழந்தையின் வளர்ப்பிலும், கல்விப் பங்களிப்பிலும் தாயாரின் பங்கு அதிகமாக இருக்கிறது. வேறொரு விஷயத்தையும் பார்ப்போம்...  ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ இரண்டாம் இடம் என்பது ஆரம்பக் கல்வியைக் குறிக்கிறது. அதற்குப் பிறகு லக்னத்தின் நான்காம் இடத்தைப் பார்த்து உயர்கல்வியைக் கூறலாம். இந்த நான்காம் இடம்  என்பது தாயாரைப் பற்றிக் கூறும் இடமாகும். அதாவது தாயாரின் பங்களிப்பு என்பது உயர்கல்வி வரை தொடர்கிறது.

கல்வி விஷயத்தில் மேஷ ராசியைப் பற்றியும், அதிலுள்ள அஸ்வினி நட்சத்திரத்தைப் பற்றியும் பார்ப்போம். மேஷ ராசிக்கு நான்காம் இடமான தாய் ஸ்தானத்திற்குரிய அதிபதியாக சந்திரன் வருகிறார்.  எனவே, மேஷ ராசிப் பிள்ளைகள் முன்னுக்கு வருவதற்கும் வராமல் போவதற்கும் முழுமுதற் காரணமாக தாயாரே அமைந்து விடுகிறார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பிள்ளைகள் ஆழமாக  யோசிப்பார்கள். அரைகுறையாக தெரிந்த விஷயத்தை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஓரளவுதான் பதில் தெரிகிறது எனில் விட்டுவிடுவார்கள். சிறிய வயதிலேயே கௌரவம் பார்ப்பார்கள்.  இவர்களை ஒரு தடவை கண்டித்தோம் என்றால் விட்டுவிடுங்கள். அடுத்தடுத்து கண்டித்துக் கொண்டே இருக்கக் கூடாது.


பிறக்கும்போதே கேது தசையில் பிறப்பார்கள். அஸ்வினி நட்சத்திரக் குழந்தையின் எதிரே அதிகம் சண்டை போடக் கூடாது. இவர்களின் மனம் இரண்டு நிலைகளில் செயல்படும். ஒன்று அதிகம்  பேசாதிருப்பது; இன்னொன்று தனக்கு பிடித்தவர்களிடம் போய் எல்லாவற்றையும் கொட்டுவது. அதனாலேயே பால்யத்தில் அதிகமான நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அப்பாவிடம் கூட கொஞ்சம்  தள்ளித்தான் இருப்பார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் நான்கு பாதங்கள் இடம்பெறுகின்றன. இதில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஐந்து வயது வரை கேது தசை இருப்பதால், சில  பிள்ளைகள் பேசாமல் இருந்து பிறகு பேசுவார்கள். ‘இந்தப் பள்ளியா... அந்தப் பள்ளியா’ என்கிற தடுமாற்றம் வரும். கேது தசை நடக்கும்போது நார்ச்சத்துள்ள உணவுகளை நிறைய கொடுங்கள். புளிப்பு  அதிகம் கூடாது. இந்த தசையில் பேச்சு, செயல் எல்லாமே மிதமாக இருக்கும்.


ஏறக்குறைய 6 வயதிலிருந்து 25 வரை சுக்கிர தசை நடக்கும். வீட்டுக்கு யாராவது வந்தாலே உள்ளே போய்விடும் குழந்தையாக இருந்தவர்கள், இந்த தசையில் நின்று நிதானமாகப் பேசுவார்கள். படிப்பில்  மட்டுமில்லாமல் ஓவியம், விளையாட்டு, இசை எல்லாவற்றிலும் ஆசை தலை தூக்கும். தானாக ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த இருபது வருடமும் இவர்களுக்கு பள்ளி மற்றும்  கல்லூரி வாழ்க்கையில் நகரும். சுக்கிர தசையாக இருப்பதால் பெரிய அளவில் தொந்தரவு இருக்காது. ஆனால், எட்டாம் வகுப்பில் மட்டும் தடுமாற்றம் இருக்கும். மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப்  பார்த்து அடிக்கடி ஏதேனும் புலம்புவார்கள். படிப்பின் மீது மெல்லியதாக வெறுப்பு வரும். அந்த சமயத்தில் மட்டும் எங்கேனும் ஊருக்கு அழைத்துப் போய்விட்டு வாருங்கள். 10ம் வகுப்பில் நல்ல  மதிப்பெண் எடுப்பார்கள். இதற்குப் பிறகு நண்பர்கள் வட்டத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அப்போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. ஏனெனில், சுக்கிர தசையின் பின்பாதியில் வெளியுலகம் அதிகம்  வசீகரிக்கும்.

‘சில கிரகங்களின் ஆளுமை இருந்தால் சில துறை சார்ந்த படிப்புகளில் எளிதாக வெற்றி பெறுவார்கள்’ என்று ஜோதிடம் சொல்கிறது. அப்படிப் பார்க்கும்போது பள்ளி இறுதி முடித்து கல்லூரியில்  சேரும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எஞ்சினியரிங் படித்தால் அதில் எலக்ட்ரிகல், கெமிக்கல் எடுத்தால் நல்லது. அறிவியலில் விலங்கியல் துறை  உங்களை ஆழமாக ஈடுபடுத்தும். பி.காம். படிப்பதை விட பி.பி.ஏ. படிப்பது நல்ல எதிர்காலத்தைத் தரும். அஸ்வினியில் நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிலும் டென்டல் சர்ஜன், ஆர்த்தோ சர்ஜன்  என அறுவை சிகிச்சைத் துறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிரகங்களின் அலைவரிசை எளிதாக வெற்றி பெறச் செய்யும். தாய்மொழியில் அதிக கவனம் செலுத்துவார்கள். விடைகளை எழுதும்போது,  ‘பத்து வரியில் எழுதுக’ என்றால் பத்து வரியைத் தாண்ட மாட்டார்கள்.

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் துறுதுறுவென இருப்பார்கள். எல்லாவற்றையும்  ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். கவிதை, கட்டுரை என்று வெளுத்து வாங்குவார்கள். 4 வயது வரையிலும் கேது  தசை இருக்கும். முதல் வகுப்பு வரும்போதே சுக்கிர தசை தொடங்கி விடும். பள்ளியில் நடக்கும் எல்லாவிதமான பேச்சுப் போட்டிக்கும் இவர்கள் பெயர் பரிசீலிக்கப்படும். 9ம் வகுப்பு படிக்கும்போது  மட்டும் கவனம் சிதறும். மாற்றுப் பால் இனத்தவர் பற்றிய சிந்தனையால் படிப்பில் கொஞ்சம் கோட்டை விடுவார்கள். இயற்கையின் நியதியான இந்தத் தொந்தரவை பெற்றோர் கவனித்து, பக்குவமாக  ஆலோசனை சொல்லி படிப்பில் கவனத்தைத் திருப்ப வேண்டும். கணக்கு கசக்கும். அதனால் நிச்சயம் தனி கவனம் தேவை. கல்லூரியில் சேரும்போது தாவரவியல், பயோ டெக்னாலஜி போன்ற  படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். பொறியியல் என்றால் ஆர்க்கிடெக்ட், சிவில் என்று சேரலாம். பி.காம். படிக்கலாம். ஆனால், எக்கனாமிக்ஸ் ஒத்து வராது. ஏரோநாட்டிகல்தான் லட்சியம் என்பார்கள்.  ஆனால், திடீரென்று ஈடுபாடு குறையலாம்.


அஸ்வினியின் மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே மனப் போராட்டம் தொடங்கிவிடும். வித்தியாசமாக இருக்க விரும்புவார்கள். எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்கவே  செய்வார்கள். குளத்தங்கரைக்குப் போனால் கூட நீரில் குதிக்க மாட்டார்கள். பள்ளியில் கெமிஸ்ட்ரி பிடிக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே உளவியல் படிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், என்ன  படித்தாலும் சம்பந்தமில்லாத துறையில்தான் வேலை பார்ப்பார்கள். குடும்பச் சூழலும் விருப்பமில்லாத துறைக்கு வருவார்கள். இவர்களில் பலர் ஏழாம் வகுப்பில் சண்டை போட்டு, பத்தாம் வகுப்பு  வரும்போது அந்த நண்பர்களிடம் பேசுவார்கள். ஒரு அறிஞனுக்குரிய எல்லா தகுதியையும் பள்ளியிறுதி படிக்கும்போது பெற்று விடுவார்கள். 10ம் வகுப்பு படிக்கும்போதே ஒரு தலையாக ஈர்ப்பு எழும்.  வெளியில் சொல்லாமல் மனதிலேயே அழுத்திக் கொள்வார்கள். பொறியியல் துறையில் சேருபவர்கள் வானவியல் சம்பந்தமான படிப்பு எது கிடைத்தாலும் படிக்கலாம். வரலாறு இனிக்கும். இந்த பாதத்தில்  பிறந்த பலர் ஆங்கில இலக்கியம் படித்து விட்டு பிறகு தொழிலுக்காக வேறு ஏதேனும் படிப்பார்கள். பொதுவுடைமை சிந்தனை பள்ளியிலேயே வந்து விடும். தோழமைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  அஸ்வினியிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் இவர்கள்தான்.

நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைகள் துறுதுறு என்று துடிப்பாக இருப்பார்கள். உடனே எதையும் புரிந்து கொண்டு விடும் சக்தி இருக்கும். இரண்டு வயது வரை உடம்பு கொஞ்சம் படுத்தும். கடைசி  நேரத்தில்தான் படிப்பார்கள். நுண்ணறிவு மிகுந்தவர்களாக விளங்குவார்கள். அறிவியல் கண்காட்சியில் இவர்கள் செய்வது வருடா வருடம் ஏதேனும் ஒன்று இடம்பெற்று விடும். பள்ளியில் இவர்களை  ‘ஜூனியர் சயின்டிஸ்ட்’ என்பார்கள். எப்போதும் நண்பர்கள் கூட்டம் உடன் இருப்பதால் 9, 10 வகுப்பில் கவனம் தேவை. இவர்கள் பொறியியல் துறையில் சேரும்போது எலக்ட்ரானிக் அண்ட்  கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ட், ஆட்டோ மொபைல் படிக்கலாம். விஸ்காம் படித்தால் எளிதாக ஜெயிக்கலாம். சி.ஏ. படிப்பை எளிதாகத் தாண்டுவார்கள். மருத்துவத்துறை எனில் இ.என்.டி., ரேடியாலஜி,  அனஸ்தீசியா போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்தால் நம்பர் ஒன்னாக வருவார்கள்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களை சூரியன், சுக்கிரன், கேது என்று மூன்று கிரகங்களும் கலந்த கலவையே ஆளும். சுக்கிரன் இவர்களுக்கு வாக்கு ஸ்தானமாக வருவதால், அம்பாள் அருளாணையினால்  வாக்குகளை வர்ஷித்த திருக்கடையூர் அபிராம பட்டர் பூஜித்த கோயிலுக்குச் சென்றுவரும்போது கல்விக்குரிய கண்ணும் தானாகத் திறக்கும். மேலும், அபிராம பட்டர் கேதுக்குரிய ஞானத்திறனோடு  இத்தலத்தில் வாழ்ந்து வந்தார். எனவே, திருக்கடையூர் அபிராமியை தரிசித்து வாக்கு பலத்தைப் பெறலாம். பூர்வ புண்ணியமும் தானாகக் கிடைத்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள் அஸ்வினியில்  பிறந்த பிள்ளைகள். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ. தூரத்தில் இருக்கிறது திருக்கடையூர். 
(தீர்வுகளைத் தேடுவோம்...)