கடுப்பேத்தலாமா மை லார்ட்?





‘கூட்டுறவு மருத்துவமனை’ படித்து உள்ளம் நெகிழ்ந்தேன்! ‘இன்னைக்கு மனசாட்சிக்கும், மருத்துவத் துறைக்கும் தொடர்பே இல்லை’ என்று டாக்டர் ஜீவானந்தம் சொல்வது யதார்த்த உண்மை!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

‘நயம்பட பேசு’ பகுதியில் ‘புரிஞ்சுக்கோங்க புருஷன்களே..!’ என்று மனைவியரின் சீக்ரெட் சைக்காலஜிகளை இப்படிப் போட்டு உடைத்து விட்டீர்களே... ஆபீஸில் எல்லோரும் ஹோட்டல் சாப்பாட்டுக்கு  ரெடியாகியாச்சோ?
- வெ.மணிகண்டன், புதுச்சேரி.

‘கடுப்பேத்தறார் மை லார்ட்!’ என்று நீங்கள் கொடுத்த அரசியல் ஐடியாக்கள் அருமைதான். அதுக்காக தேர்தலுக்குப் பின் ‘சிவனே’ என்றிருக்கும் வடிவேலுவின் போட்டோக்களைப் போட்டு, அவரை  கடுப்பேத்துவது நியாயமா மை லார்ட்?
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.

‘மெட்டி ஒலி’யால் சின்னத்திரை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்த திருமுருகன், ‘விஜயா டீச்சர்’ தொடர் மூலம் சுவாரசியமாக பாடம் சொல்கிறார். டைம் பாஸாக மட்டுமல்ல, வாழ்வில்  பாஸாகவும் தொடர் உதவும்!
- ஜி.அருணா ராணி, குடந்தை.

ஆசிரியர் தகுதித் தேர்வு வந்ததும் உண்மையான அக்கறையோடு ‘தேர்வில் ஜெயிப்பது எப்படி?’ என்கிற சூட்சுமத்தை விளக்கிவரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
- கவியகம் காஜூஸ், கரூர்.

‘விநோத ரஸ மஞ்சரி’ பகுதியில் ‘கழுதை கட்சி!’யை படித்தறிந்து வியந்தோம். நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் அந்தக் கட்சி ‘உதை’ படாமல் இருந்தால் சரி!
- வி.சி.முரளி, சென்னை-91.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தினாலே 100 சதவீதம் ஏழை, நடுத்தர மாணவர்கள் கல்வியில் உயருவர். ‘25 சதவீத ஒதுக்கீடு என்ற திணிப்பெல்லாம் அரசியல்  தலையீட்டுக்கே வழி’ என்று கூறும் சேவியர் அருள்ராஜின் கருத்தே சரி. ஒரு திட்டம் உள்ளதையும், கெடுப்பதாக இருக்கக் கூடாதல்லவா?
- அ.கு.ப.இரகுநாதன்,
பூவிருந்தவல்லி.

மனுஷ்ய புத்திரனின் ‘நிழல்கள் நடந்த பாதை’ யதார்த்த மனிதர்களின் உன்னதங்களையும், கோணல்களையும் ஒரு சேரப் படம் பிடித்துக் காட்டுகிறது.
- வரலட்சுமி முத்துசாமி,
கிழக்கு முகப்பேர்.

‘சுட்ட கதை சுடாத நீதி’ பகுதியில் அர்த்தமற்ற சடங்குகளால் எந்தப் பயனும் இல்லை என்று நிதர்ஸனா எழுதியிருப்பது நிதர்சனமான உண்மை!
- எச்.தையல்நாயகி, தஞ்சாவூர்.