புளிய மரம்





வேர்வையில் குளித்த உடலை துண்டால் துடைத்தபடி புளியமரம் நின்றிருந்த இடத்தை வெறித்துப் பார்த்தார் சதாசிவம். அவர் அப்பா வைத்திருந்த மரம் என்னமாக வளர்ந்திருந்தது! அதில் சதாசிவம்  ஊஞ்சல் கட்டி ஆடி, அவர் மகனும் ஆடி, இதோ போன மாதம் வரை அவர் பேரப் பிள்ளைகளும் ஆடித் தீர்த்துவிட்டார்கள். ஏதோ போதாத காலம் வீட்டில் கொஞ்சம் பணக்கஷ்டம் எட்டிப் பார்க்க... ஊரில்  ஆளுக்கொரு பரிகாரம் சொல்லத் துவங்கி விட்டனர்.

‘‘வீட்டுக்கு முன்னாடி இப்படி புளிய மரம் இருக்கக் கூடாதுப்பா. குடும்பத்துக்கு நல்லதில்ல...’’ - பெரியவர் ஒருவர் கொளுத்திப் போட்ட ஊசி வெடியை ஊரார் எல்லாம் ஊதி ஊதி அணுகுண்டாக்கினர்.  இத்தனை பேர் சொல்லும்போது புறக்கணிக்க முடியுமா? மரக்கடைக்காரரிடம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டு மரத்தை வெட்டிப் போகச் சொல்லிவிட்டார் சதாசிவம். மர நிழலில் படுத்து உறங்கிய பேரப்  பிள்ளைகள் காற்றில்லாமல் படும் அவஸ்தையைப் பார்த்து, டி.வி விளம்பரத்தில் வந்த அந்த மின் விசிறியை அதே இரண்டாயிரம் கொடுத்து வாங்கினார். எட்டு மணி நேர பவர்கட்டில் அசையாமல்  நின்றபடி பரிகசிக்கிறது மின்விசிறி. புளிய மரம் நின்றிருந்த இடத்தில் அனல் காற்றடித்து, சதாசிவத்தை மேலும் வியர்வையில் குளிப்பாட்டியது!